வியாழன், 18 டிசம்பர், 2014

நினைத்ததும் இறைவனை மறந்ததும் அவனைநீ

பிஞ்சுக் கனிகள்தமைக் கொன்று குவித்தனை தோழா!
பெருவெடி தனிலென்பு நொறுங்கிச் சிதறின தோழா
கடவுள் மதமிவை தம்மொடு தொடர்பென்ன தோழா
பிஞ்சுகள் செய்திட்ட வஞ்சம் உரைகொள்கைத் தோழா!

கொலைபல செய்தார்க்கு வலைவிரித் தாட்கொளும் தோழா
சொர்க்கமன்றே சிறைசூழ் கம்பிகள் நரகம் அறி தோழா 
மலைபல கடந்தே அடைந்தனை மடமையில் தோழா\
நினைத்ததும் இறைவனை மறந்ததும் அவனைநீ தோழா

பிஞ்சுக் கனிகள்  :  வயதில் பிஞ்சு ;  கனிகள்  (பிள்ளைக் கனி  அமுது)  என்று  போற்றப்படும்  குழந்தைகள்;     ஆகவே:   இது  முரண் தொடை.(இலக்கணம்).
கனி = இனிமை தரும் சிறு பிள்ளைகள்.

சொர்க்கம் அன்றே =  சொர்க்கம் அல்ல; நரகம்;  இதுவும் முரண்.  
பின்  வரும் நரகம் என்பது  அதை உறுதிப்படுத்த.
நினைத்ததும் மறந்ததும் :  இதுவும் முரண் தொடை ஆகும். 
வயது ஒன்றே கருத்தாயின்  கிழவிகள் மட்டுமே கனிகள் என்று தகுதி பெறுவர்.  அது தவறு - அறிக.



இந்து என்று சொல்வதில் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


"எனக்கு வயது 70க்கு மேல் ஆகிவிட்டது. நல்ல பல அனுபவங்களோடு கூடிய போராட்ட வாழ்க்கை. எல்லாம் அறிவுப் போராட்டங்களே 
. அதில் ஒன்றே எனது சமயம் யாது என்ற போராட்டம். பல மத மாற்ற முயற்சிகள் அதனாலும் பல போராட்டங்கள் இப்பொழுது ஓர் முடிவிற்கு வந்துவிட்டேன். நான் ஓர் சைவன். இங்கு நான் ஓர் இந்து என்று சொல்வதில் கூட  எனக்கு விருப்பம் இல்லை, ‘இந்து’ என்பது மிகக் குழப்பமானது என்பதொடு வேதாந்த ஆதிக்கம் அதிகமாக இருக்கும் ஒன்று. மேலும் இப்பொழுது வடநாட்டு இந்துத்துத்வா ஆதிக்கம் வேறு. நான் விரும்பும் சிந்தனை சுதந்திரம் அங்கு இல்லை என்றும் நினைக்கின்றேன்."

-அறிஞர்  லோகநாதன்  


One can be a Hindu by default.  The pressure felt may be from one"s own mind. Hindu religion permits enquiry.  Many have enjoyed this freedom. No fatwa.

சாதி வேற்றுமை

சேர்தல்,  சார்தல் என்பன நுண்பொருள் வேறுபாடு உடைய பதங்கள். பொருள் பதிந்து நிற்கும் சொல்லே "பதம் " எனப்படுவது.  பதி + அம்  = பதம்.  தி என்ற எழுத்தின் இகரம் கெட்டுப் புணர்ந்தது.  இது நிற்க,   சார்தல் என்பது,  தனித்து நிற்க இயலாமல் மற்றொன்றுடன்  இணைந்தே நிற்கவல்லது  என்ற பொருளிலும் வரும். இதுவும் அதுவும் ஒரே வகையைச் சார்ந்தவை  என்று  சொல்கிறபொழுது,  சார்ந்தவை என்ற சொல்லுக்குப் பதிலாக சேர்ந்தவை என்ற சொல்லைப் போட்டாலும்,  பொருள்  மாறாமையினால்,  சேர்தல், சார்தல் என்பன ஒரு பொருட் சொற்கள், ஆனால் நுண்பொருள் வேறுபாடு  காட்ட வல்லன என்று அறிக.

சார்தி என்ற சொல்லே சாதி என்று இடைக்குறைந்தது.  இது போல் இடைக்குறைந்த சொற்களை முன்னர் காட்டியுள்ளேன். நேர்மித்தல் > நேமித்தல் :  ஒருவர் பெயருக்கு நேராக அவர் பதவியை எழுதி வெளியிடுதலே நேமித்தல். அரசர்  அல்லது அதிகாரி  அப்படி  எழுதுவதை இது குறித்தது. பின் அது நியமித்தல் என்று மாறியது. ரகர ஒற்று  மறைந்த இன்னொரு சொல் அது. 

சாதி என்பது முதலில் உயர்திணை  அஃறிணை  என எப்பொருளையும் தழுவி நின்றது.  "நீர் வாழ் சாதி"  என்ற தொல்காப்பியத் தொடர் காண்க.   நீரில் வாழும் சார்பினது  என்று பொருள். நீர் வாழும் வகை சேர்ந்தது என்று பொருள்.  சேர். சார்  :   சொல்லாட்சியை ஊன்றிக் கவனிக்கவும்.  

அணி இயலில்  வேற்றுமை அணி என்பதுமொன்று.  இவ்வணியில்  "சாதி வேற்றுமை"  என்ற வகை உள்ளது.  ஒரே வகைப் பொருட்களை வரிசையாகச் சொல்லி,  அவற்றுள்  வேற்றுமை தோன்றப் பாடலில் இன்புறுத்துவது  "சாதி வேற்றுமை" என்னும் அணியாகும்.  எ -டு :  கதிரவன்.  மதி ,  விளக்கு  இவை மூன்றும் ஒளி  காரணமாக ஒரே சார்பின  -   ஒரே சாதியின . ஆகவே,  இவ்வணி வகை  சாதி வேற்றுமையணி எனப்படும்.

இதற்குத்  தண்டியலங்காரம் தரும் ஒரு பாடல்:

வெங்கதிர்க்கும் செந்தீ விரிசுடர்க்கும் நீங்காது 
பொங்கு மதி ஒளிக்கும் போகாது;--- தங்கும் 
வளமையான் வந்த  மதிமருட்சி மாந்தர்க்கு 
இளமையான் வந்த இருள்.

இளமைக் காலத்தில் செல்வச் சேர்க்கையினால்  மதி  மருண்டுவிடுகிறது;  அதுவே இம்மாந்தர்க்கு இருள் !  ஆனால், இருளென்றால், சூரியனால் நீங்கவேண்டுமே!  நீங்காது .   நிலவொளியால்  விலகவேண்டுமே !   விலகாது.
விளக்கொளியால் போகவேண்டுமே! போகாது.    செக்கச் செவேர்  என்று எரிந்து சுடர் பரப்பும் தீயிலே தேய்ந்தொழிய வேண்டுமே!  ஒழியாது.ஏனென்றால், இவ்விருள் அகத்தின் இருட்டு.  வெளியே காணும் இருட்டு அன்று.

வேறுபட்ட ஒளி வகை;  வேறுபட்ட இருள்வகை. ஆகவே சாதி வேற்றுமை அணியாம்.