வியாழன், 18 டிசம்பர், 2014

சாதி வேற்றுமை

சேர்தல்,  சார்தல் என்பன நுண்பொருள் வேறுபாடு உடைய பதங்கள். பொருள் பதிந்து நிற்கும் சொல்லே "பதம் " எனப்படுவது.  பதி + அம்  = பதம்.  தி என்ற எழுத்தின் இகரம் கெட்டுப் புணர்ந்தது.  இது நிற்க,   சார்தல் என்பது,  தனித்து நிற்க இயலாமல் மற்றொன்றுடன்  இணைந்தே நிற்கவல்லது  என்ற பொருளிலும் வரும். இதுவும் அதுவும் ஒரே வகையைச் சார்ந்தவை  என்று  சொல்கிறபொழுது,  சார்ந்தவை என்ற சொல்லுக்குப் பதிலாக சேர்ந்தவை என்ற சொல்லைப் போட்டாலும்,  பொருள்  மாறாமையினால்,  சேர்தல், சார்தல் என்பன ஒரு பொருட் சொற்கள், ஆனால் நுண்பொருள் வேறுபாடு  காட்ட வல்லன என்று அறிக.

சார்தி என்ற சொல்லே சாதி என்று இடைக்குறைந்தது.  இது போல் இடைக்குறைந்த சொற்களை முன்னர் காட்டியுள்ளேன். நேர்மித்தல் > நேமித்தல் :  ஒருவர் பெயருக்கு நேராக அவர் பதவியை எழுதி வெளியிடுதலே நேமித்தல். அரசர்  அல்லது அதிகாரி  அப்படி  எழுதுவதை இது குறித்தது. பின் அது நியமித்தல் என்று மாறியது. ரகர ஒற்று  மறைந்த இன்னொரு சொல் அது. 

சாதி என்பது முதலில் உயர்திணை  அஃறிணை  என எப்பொருளையும் தழுவி நின்றது.  "நீர் வாழ் சாதி"  என்ற தொல்காப்பியத் தொடர் காண்க.   நீரில் வாழும் சார்பினது  என்று பொருள். நீர் வாழும் வகை சேர்ந்தது என்று பொருள்.  சேர். சார்  :   சொல்லாட்சியை ஊன்றிக் கவனிக்கவும்.  

அணி இயலில்  வேற்றுமை அணி என்பதுமொன்று.  இவ்வணியில்  "சாதி வேற்றுமை"  என்ற வகை உள்ளது.  ஒரே வகைப் பொருட்களை வரிசையாகச் சொல்லி,  அவற்றுள்  வேற்றுமை தோன்றப் பாடலில் இன்புறுத்துவது  "சாதி வேற்றுமை" என்னும் அணியாகும்.  எ -டு :  கதிரவன்.  மதி ,  விளக்கு  இவை மூன்றும் ஒளி  காரணமாக ஒரே சார்பின  -   ஒரே சாதியின . ஆகவே,  இவ்வணி வகை  சாதி வேற்றுமையணி எனப்படும்.

இதற்குத்  தண்டியலங்காரம் தரும் ஒரு பாடல்:

வெங்கதிர்க்கும் செந்தீ விரிசுடர்க்கும் நீங்காது 
பொங்கு மதி ஒளிக்கும் போகாது;--- தங்கும் 
வளமையான் வந்த  மதிமருட்சி மாந்தர்க்கு 
இளமையான் வந்த இருள்.

இளமைக் காலத்தில் செல்வச் சேர்க்கையினால்  மதி  மருண்டுவிடுகிறது;  அதுவே இம்மாந்தர்க்கு இருள் !  ஆனால், இருளென்றால், சூரியனால் நீங்கவேண்டுமே!  நீங்காது .   நிலவொளியால்  விலகவேண்டுமே !   விலகாது.
விளக்கொளியால் போகவேண்டுமே! போகாது.    செக்கச் செவேர்  என்று எரிந்து சுடர் பரப்பும் தீயிலே தேய்ந்தொழிய வேண்டுமே!  ஒழியாது.ஏனென்றால், இவ்விருள் அகத்தின் இருட்டு.  வெளியே காணும் இருட்டு அன்று.

வேறுபட்ட ஒளி வகை;  வேறுபட்ட இருள்வகை. ஆகவே சாதி வேற்றுமை அணியாம்.




திங்கள், 15 டிசம்பர், 2014

மங்களம்

வெள்ளை  நிறத்துப் பொருட்கள் நாட்பட்டுவிட்டால், மங்கலாகி விடுகின்றன. அந்த நிலையில் அவை மஞ்சள் நிறத்தை அடைகின்றன.  தமிழில் மங்கல் என்ற சொல்லும் மஞ்சள் என்ற சொல்லும் ஒலிமுறையிலும் நெருக்கமாயுள்ளன. எனவே மஞ்சள் மங்கல் என்பன உறவுடையன என்பது தெளியக்கிடக்கின்றது.

மங்கல் >  (மங்கள் )* > மங்களம்.
மங்கல் > மங்கலம்.

சில சொற்களில் லகரம் *ளகரமாவதும் உண்டு.  செதில் ‍:  செதிள்.

மண்ணுமங்கலம், நாள்மங்கலம் முதலிய வழக்குகள் இலக்கியத்தில் உள்ளன.

ங்கு > ஞ்சு : திரிபு.

மங்கல் :  மஞ்சள்.

தங்கு > தஞ்சு  > தஞ்சம்.

அஞ்சியோ வேறு காரணத்தினாலோ,இடர் இல்லாத விடத்துச் சென்று தங்குதலே  தஞ்சம்  ஆகும்.

தன்னை ஓரிடத்தில் ஒப்புவித்தல் என,  தன் > தஞ்சு எனினும் அது ஆகும்.

தன் > தம் > தங்கு என்பதும் ஆய்வுக்குரியதே.

சனி, 13 டிசம்பர், 2014

வித்தகர்

விதை ஒன்று இட்டால் அது  சிறிது சிறிதாக   வளர்ந்து மரமாகிறது,

ஆசிரியன் ஒரு மாணவனுக்கு ஒன்றை விளக்கினால் அதிலிருந்து அது பெருகி அவனொரு புலவனாகிவிடுதல் காணலாம். விதைகள் சில உடன் முளைத்து வளரும், சில மெதுவாய் அல்லது பிற்காலத்தில் வளரும். கல்வி முதலியன குறிப்பதற்கு வித் (விது )  என்பது ஒரு சிறந்த அடிச்சொல்.

விது (வித்)  >  வித்தை.

விது  > வித்தகம்  (விது + அகம்).

இதை  விது  >  வித்து > வித்தகம் என்றும் காட்டலாம்.  எல்லாம் ஒன்றுதான்.

வித்து > வித்தகர்.  தம் துறை போகிய அறிஞர் .