வெள்ளி, 19 செப்டம்பர், 2014

குள் என்னும் அடிச்சொல்:



இப்போதூ குள் என்னும்,  சுவையான சொற்களைப் பிறப்பித்த,  தமிழ் அடிச்சொல்லைக் கவனிப்போம்.

குள் > கூள் > கூளையன்.
குள் > கூள் > கூளைச்சி

குள் > குள்ளன்.
குள் > குடு > குட்டு. (குட்டு வெளிப்பட்டது) குட்டையான (மறைவான) செய்தி.
குள் > குடு > குட்டன் (ஆள் பெயராகவும் காண‌ப்படுகிறது)
குள் > குடு > குட்டம்  ( குட்டம் > குஷ்டம்).+
குள் > குடு > குட்டு > குட்டுவன்.  குட்டம் > குட்ட நாடு.
குள் > ......>  குட்டை. குட்டையன்.

குட்ட நோயில் வெளி யுறுப்புகள் உருவழிந்து குட்டையாகி விடுகின்றன. அதனால்  அந் நோய்  குட்டமெனப்பட்டது  இதற்குத்  தமிழ் நாட்டிலும் சுற்று வட்டாரத்திலும் வாழ்ந்தோர்  சமஸ்கிருதம் பயன்படுத்திய வேளை சமஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்தாமல்   தமிழ்ச் சொல்லையே சற்று " குஷ்டம்" என்று மாற்றி   பயன்படுத்திக் கொண்டது  ஒரு   முயற்சிச்
சிக்கனம் ஆகும். இதனால் இது ச‌மஸ்கிருதத்திலும் புகுந்தது. சமஸ்கிருதத்தில் குட்டத்துக்குப் பல சொற்கள் உள


சமஸ்கிருதத்தில் பல சொற்கள் இதற்கு உள்ளன என்பதை நோக்க, இந்தியாவில் ஒரு காலத்தில் இந் நோய் பரவி இருந்தமை அறியலாம்

.தொடரும்.

புதன், 17 செப்டம்பர், 2014

Jailed after company failed.........


சொல்லி அழுவது தவிர, வேறென்ன செய்வது?

நார்வே நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், மலேசியாவுக்கு தெற்கிலுள்ள ஒரு வளமிக்க தீவில் ஒரு குழும்பு (கம்பெனி) திறந்தார். குழும்புமூலம் காசு கொட்டும்  என்று எதிர்பார்த்தார். வணிகம் ஓடவில்லை. இழுத்து மூடிவிட்டு, தமக்கு வேறு  நாடுகளிலுள்ள குழும்புகளைக் கவனிப்பதில் ஆழ்ந்து ஈடுபட்டுவிட்டார். 

தீவுக் குழும்பை மூடிய போது, சில பழைய நாற்காலி மேசைகளை முறைப்படி அப்புறப்படுத்தி, அரசுக்குக் கணக்குக் காட்ட மறந்துவிட்டார். அவை அங்கேயே கிடந்துவிடவே, அரசு அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்தனர்.  ஒரு குறிப்பிட்ட விலையை அவற்றுக்கு மதிப்பீடு செய்தனர். இவர் கூற்றுப்படி  அவை குப்பைக் கிடங்குக்குப் போகவேண்டியவை.  இவற்றை முறைப்படி கணக்குக்காட்டி களைவு (disposal)  செய்யத் தவறியதால், அவர்மேல் ஒரு வழக்குப் போட்டனர், அவர் வழக்கறிஞர் உதவியுடன் வாதாடினார்.   நீதிமன்றம் "குற்றம்" என்று தீர்மானித்து நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.

இவர் பல குழும்புகளை வேறு நாடுகளில் நடத்துகிறவர். பழங்குற்றப் பின்னணி உள்ளவரா அல்லது முதல்தடவைக் குற்றவாளியா என்று தெரியவில்லை முதல்தடவைக் குற்றவாளியாயின், பெரும்பாலும் தண்டம் விதிப்பது வழக்கம்.
அது பழைய முறை. இப்போது புதுமுறைகள் நடப்புக்கு வந்திருக்கக்கூடும்.

இங்கே குழும்பு திறக்கப்போய், இப்படி ஆகிவிட்டதே என்று நண்பர்களிடம் சொல்லி அழுவது தவிர, வேறென்ன செய்வது?

இதற்குச் சில வரிகள்:-

சோர்வு தருவதொன்று சோகம்-----  இடர்
சொல்லி அழுதிடிலோ ஊதியம் குலாவும்
நேர்வ தென்பவெலாம் நேரும் ‍-----  அதை
நினைத்துக் கிடந்தவர்க்கோ உள்ளமே நோகும்!:

திங்கள், 15 செப்டம்பர், 2014

பார் பாதாளம்

தமிழில் "பா" என்று தொடங்கும் பல சொற்கள், பரந்த இடம்,  தட்டையான பொருள்  திறந்த வெளி, என்பன போன்ற  பொருண்மை தரும்.

பா >  பார் 

"பாருக்குள்ளே நல்ல நாடு "  ----பாரதி .

பா  >பார் > பார்த்தல்.

பரந்த வகையில் கண்ணைச் செலுத்துதல்.

பா  -- ஒலி  அசைகளால் பரந்த வகையில் (பாடலை) அமைத்தல்.

பா  --  பாவுதல். ( நெல், விதை  முதலிய தூவிப் பரப்புதல்.)

இவற்றைத தொடர்ந்து  ஆராய்ந்து அறியலாம் .

இனிப் பாதாளம்  சொல்லை ஆராய்வோம்.

பா -  பரந்த(து).

தாள்  -  கால்;  அடிப்பகுதி.

பா+தாள் + அம்  = பரந்த நிலத்தின்  அடிப்பகுதி.

இதில் எனக்கொன்றும் ஐயப்பாடுகள் இல்லை.

பர என்ற வினைச் சொல் முதனிலை நீண்டால் பார் என்று திரியும்.  "பார"
என்று வராது.  இதுவே தமிழ் இயல்பு.