திங்கள், 18 ஆகஸ்ட், 2014

இன்ப துன்பம்

சொந்தமாக உந்துவண்டி ஒன்றிருந்தாலும்
அதுவும் துன்பமே;
எந்த நாளும் பேருந்தில் பயணித்தாலும்
அதுவும் துன்பமே
உந்துவண்டி கோளாறில் படுத்துவிட்டாலும்
அதுவும் துன்பமே
உந்துவண்டி சீர்ப்படுத்திக் கட்டும் தொகை
காண்பதுவும் துன்பமே!
இன்பத்தின் எல்லைவரை சென்றுவிட்டால்
இருப்பதுவோ துன்பமே
துன்பத்தின் மறுகோடி சென்று நின்றால்
காண்பதுவோ இன்பமே
துன்பமும் இன்பமும் நேர்கோட்டின்
தோன்றுமிரு துருவமே.

துன்பம்  இரண்டில் எதையேனும் வைத்துக்கொள்!
இன்பம் அடுத்தே வரும்.


ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

ஆதாயம்


ஆதாயம் என்ற சொல்லை முன் ஒன்றிரண்டு இடுகைகளில் விளக்கியதுண்டு.
இப்போது இதை மேலும் தெளிவாக்குவோம்.  இப்போது வணிகம் தொடர்பாக மட்டுமின்றி அரசியல் தொடர்பாகவும் பயன்பெறுவதால் இதை அறிந்து இன்புறுதற்கு இது நல்ல நேரமே.

"அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் "  என்பது தொலைக்காட்சியில் பேசப்பட்டு அடிக்கடி செவிசேரும் வாக்கியம்.

"முதல்" என்னும் முதலீட்டிலிருந்து செலவு செய்தல் கூடாது. இதை தமிழ் நூல்கள் அறிவுறுத்துகின்றன.  "ஆன முதலில் அதிகம் செலவானால்"  என்ற‌
வெண்பாவை நோக்குங்க்ள்.  இங்ஙனம் "ஆன முதல்" என்பதைக் குறிப்பதே  ஆதாயம் என்பதில் வரும் "ஆ"  ஆகும், முதல் உழைத்தால்தான், அது வருமானத்தைத் தருகிறது. ஆகவே. தருவது என்பது குறிக்க, 

 "தா" என்ற வினைச்சொல் பகுதியை அடுத்துப் போட்டுக்கொள்ளுங்கள். இப்போது  ஆதா  எனபது தோன்றியுள்ளது.

சொல்லாக வரின் "அழகு" என்றும் மற்றும் பெயராக்க விகுதியாகவும் பயன்படும் அம் விகுதியை இப்போது இடுங்கள்.

ஆ+தா+ அம் = ஆதாயம் ஆகிறது. ய என்பது உடம்படு மெய்.

ஆகூழ், என்ற சொல்லிலும் ஆ என்பதிருத்தலைக் காணலாம்.  ஒரு காலத்தில் ஆகாரத்தில் தொடங்குதலே சிறப்பு  fashionable  என்று கருதினர். ஆகாரம், ஆகாயம் என்பன முன்பு விளக்கப்பட்டுள்ளன.

‘கத்தி’ திரைப்பட எதிர்ப்பில் நியாயம் உண்டா?


                       கத்தி’ திரைப்பட எதிர்ப்பில் நியாயம் உண்டா?
                                    
                           -செ.அ.வீரபாண்டியன் –
                                http://musictholkappiam.blogspot.in/

(' தமிழ்நாட்டில் எந்த சிங்களரையும் தொழில் வியாபாரம் செய்ய விட மாட்டோம்' என்று 'கத்தி' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரியார் திராவிரர் கழகத் தலைவர் கோவை.இராமகிருட்டிணன் பேசிய செய்தியை,  13 – 08 - 2014 மாலை தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன். அது பெரியார் கொள்கைக்கும், அணுகுமுறைக்கும் எதிரானது. பெரியார் பிராமணர் அமைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். தமது சமூக சீர்திருத்ததிற்கு தடையாக உள்ள பிராமணர்களையே எதிர்ப்பதாக பிராமணர்களிடையே அவர் பேசியுள்ளார். தமது உடல்நலக்குறைவுக்கு  பிராமண வைத்தியர்களிடமே அவர் சிகிச்சைப் பெற்றார். தமது வாகனங்கள் பழுதடைந்தபோது, டி.வி.எஸ்(T.V.S)  என்ற பிராமண தொழில் கூடத்திலேதான் 'ரிப்பேர்' செய்தார். அவர் வழியில் சிங்களர் அமைப்பில் தமது நிலைப்பாட்டை விளக்குவதற்குப் பதிலாக, சிங்களர்களையே எதிரிகளாகக் கருதி , 'பெரியார்' பெயரில் உள்ள அமைப்புகள் செயல்படுவது சரியா? இசை ஆராய்ச்சிக்கு முன், நான் பெரியார் இயக்கதில் பங்கேற்றிருந்த காலத்தில் என்னுடன் மிகவும் அன்புடனும் நெருக்கமாகவும் பழகியவர் கோவை.இராமகிருட்டிணன். அந்த காலத்தில் நான் பிரமிக்கும் அளவுக்கு இயக்கத்தில் செயல்பட்டவர்.  கால ஓட்டத்தில் பெரியாரின் கொள்கைக்கும் அணுகுமுறைக்கும் எதிராக பெரியார் அமைப்புகள் செயல்படுவதும், அவை தமிழர் நலன்களுக்கு மிகவும் பாதகமாக இருப்பதையும் உணர்ந்ததால்,  இதை எழுத நேர்ந்தது. அறிவுநேர்மையுடனும், திறந்த மனதுடனும் பெரியார் அமைப்புகள் இதை விமர்சிப்பதை வரவேற்கிறேன். அதன் விளவாக எனது நிலப்பாடுகள் தவறு என்று வெளிப்படுமானால், 'பெரியார் வழியில்' தவறு என்று பகிரங்கமாக அறிவித்து,  என்னைத் திருத்திக் கொள்வதில் எனக்கு தயக்கம் கிடையாது. ) 

ராஜபட்சே இலங்கையில் முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை செய்ததாக தமிழ்நாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சொ ல்கிறார்கள். அது உண்மையெனில் முள்ளிவாய்க்கால் போரில் சிவிலியன்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க, இலங்கை ராணுவம் 'ரிசீவர் பாயிண்ட்'கள் (receiver Points) அமைத்து, சிவிலியன்களைக் காப்பாற்றியது ஏன்? 'ரிசீவர் பாயிண்ட்'கள் நோக்கி அலை அலையாய் சென்ற தமிழர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தி,அச்சுறுத்தி, அங்கு செல்லவிடாமல் தடுத்தது யார்? இலங்கை ராணுவமா? விடுதலைப் புலிகளா? 

சரணடை ந்த விடுதலைப்புலிகள் பலருக்கு இலங் கை ராணுவமே வேலை வாய்ப்புகளுக்கானப் பயிற்சிகள் கொடுத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாங்கிக் கொடுத்து,  அந்த 'தமிழர்களுக்கு' புதுவாழ்வு' ஏற்படுத்தித் தருவது உண்மையா? பொய்யா?  

அமிர்தலிங்கம் உள்ளிட்ட TELO, PLOT, EPRLF, etc அமைப்புகளின் தலைவர்களையும், ஈழ விடுதலைக்காக ஆயுதப் பயிற்சி பெற்றிருந்த ஆயிரக்கணக்கான ‘டீன் ஏஜ்’ (teen age)  விடலைப் பருவ போராளிகளையும் சுட்டுக் கொன்றது யார்? இலங்கை ராணுவமா? விடுதலைப் புலிகளா?

சாதாரண மனிதர்களிடையேயும் 'வாய்ப்புகள்'(?) கிடைக்கும் போது, மனசாட்சியேயில்லாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம்,தீயசெயலுக்குத் துணையாக தரகு(broker)  உள்ளிட்ட 'பல வழிகளில்' பணம் சம்பதித்து 'பெரிய மனிதர்களாக' வலம் வருபவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 

இலங்கை ராணுவமானாலும், இந்திய ராணுவமானாலும், அமெரிக்க ராணுவமானாலும், உலகின் எந்த நாட்டு ராணுவமானாலும், அதிலும் நல்லவர்களும் உண்டு;கெட்டவர்களும் உண்டு. எந்த ராணுவமும் 'போர்க்கால சூழலில்' சிவிலியன் பகுதிகளுக்குள் நுழைந்தால், 'பிரமிக்கத்தக்கும் மனிதாபிமான' செயல்களில் ஈடுபடும் ராணுவத்தினரும் உண்டு; 'இழிவின் இலக்கணமாக'க் கொடூர செயல்களில் ஈடுபடும் ராணுவத்தினரும் உண்டு.

வியட்நாம், ஈராக், இலங்கை மட்டுமல்ல, ஐ.நா அமைதிப்படைக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளிலும் இவை போன்ற இரண்டு வகை  சம்பவங்களும் நடந்துள்ளன.

தவறு புரிந்த ராணுவத்தினரைத் தனிமைப் படுத்தி அடையாளம் கண்டு முறையான விசாரணை நடத்தித் தண்டிப்பது என்பது உலக வரலாற்றில் அபூர்வமாகவே நடந்துள்ளது. அதிலும் சம்பந்தப்பட்ட ராணுவததையே 'தவறு புரிந்த ராணுவமாக'ச் சித்தரிப்பது, ராணுவத்தினரிடையே உள்ள குற்றவாளிகளை எளிதில் தப்பிக்க துணைபுரியும் வழிமுறையாகும்.

'இந்துக்களை ஒழிப்போம்'என்ற 'முஸ்லீம் தீவிரவாதி'களின் பிரச்சாரத்தை அறிந்த சாதாராண இந்துவும்,

'முஸ்லீம்களை ஒழிப்போம்' என்ற 'இந்து தீவிரவாதி'களின் பிரச்சாரத்தை அறிந்த சாதாராண முஸ்லீமும்,

'பார்ப்பனர்களை ஒழிப்போம்' என்ற பெரியார் இயக்கங்களின் பிரச்சாரத்தை அறிந்த சாதாராண பிராமணரும்,

'தமிழும், தமிழரும் மட்டமானவர்களே' என்ற 'பிராமண தீவிரவாத'பிரச்சாரத்தை அறிந்த சாதாரணத்   தமிழ‌ரும், 

'உணர்வுபூர்வ ' போதையில் சிக்கி, சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் ஆதரவாளராவதற்கும் , அல்லது உணர்வு போதையின் அளவைப் பொறுத்து தீவிரவாத அமைப்பில் உறுப்பினராவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 'வெளிநாட்டு நிதி' உதவிகளில் செயல்படும் பல அமைப்புகள் இந்த பிளவை 'ஊதிப் பெருக்க வைக்கும்' பணிகளை 'முற்போக்கு' போர்வைகளில் செய்து வருகிறார்கள். 

முன்புக் குறிப்பிட்டபடி 'தவறு செய்த' இந்துக்களையும், முஸ்லீம்களையும், பிராமணர்களையும், தமிழர்களையும் முறையான விசாரணைக்குட்படுத்தி தண்டிக்க விடாமல் காப்பாற்றவே மேற்குறிப்பிட்ட போக்குகள் துணைபுரிகின்றன. 

உணர்வு போதையில் சிக்காத, அறிவுபூர்வமாக அணுகும் போக்குள்ள இந்துக்களும், முஸ்லீம்களும், பிராமணர்களும்,தமிழர்களும் தமதளவில் உண்மையாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனாலும் அவர்கள் மேற்குறிப்பிட்ட தவறான போக்குகளை தமதளவில் எதிர்த்து வாழ்கிறார்களா? அல்லது 'நமக்கேன் வம்பு? ' என்று ஒதுங்கி வாழ்கிறர்களா? என்பது ஆய்விற்குரியது.

அவர்கள் ஒதுங்கி வாழ்வது மேற்குறிப்பிட்ட போக்குகள் எந்த எதிர்ப்புமின்றி வளரவே துணை புரியும். எனவே அப்படி ஒதுங்கி வாழ்பவர்களும் 'மறைமுக'க் குற்றவாளிகளே.

இலங்கை ராணுவத்தையும், சிங்களர்களையும் எதிரிகளாக 'பிரச்சாரம்' செய்பவர்கள் நமது சமூக வட்டத்தில் யாரேனும் இருந்தால், அவர்களை 'அறிவுபூர்வமாக' சிந்திக்க வைப்போம். அவர்கள் உணர்வுபோதையிலிருந்து விடுபட மறுத்தால், அவர்களுடன் (குடும்பமாயிருந்தாலும், நட்பாயிருந்தாலும்) நமக்குள்ள உறவை, சமூக நலன் கருதித் துண்டிப்போம்.

எந்தப் பிரச்சினையிலும் 'உணர்வுபோதை' பிரச்சாரங்களை எதிர்ப்போம்; அறிவுபூர்வ விமர்சனங்களை ஊக்குவிப்போம். எந்த திரைப்படத்தையும், புத்தகத்தையும் தடை செய்யக் கோருவதை எதிர்ப்போம். அந்த திரைப்படத்தை, அந்த புத்தகத்தை அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்துவதை ஆதரிப்போம்.

பக்கத்து வீட்டில் எவரும் தவறாக நடந்திருந்தால், அதற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரையும் எதிரியாகப் பாவித்து நாம் நிம்மதியாக வாழ முடியாது. அந்த வீட்டில் உள்ள மற்றவர்களுடன் நட்பு பாராட்டி, தவறிழைத்தவரை தனிமைப் படுத்துவதே,  அவரைத் தண்டிப்பதற்கான 'புத்திசாலித்தனமான' முதல் படி.

அது போல இலங்கையையும், சிங்களர்களையும் எதிரிகளாகக் கருதி, இலங்கையைச் சீனாவின் 'இன்னொரு திபெத்' ஆக்குவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகுவதற்கான தொழில் முதலீடுச் சூழலைக் கெடுத்துக் கொள்வதும் புத்திசாலித் தனமல்ல. மாறாக இலங்கை- இந்திய நட்பினையும், இரண்டு நாடுகளிலுமுள்ள கல்விமான்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பக்தர்கள், பகுத்தறிவாளர்கள் சந்திப்பதையும், அச்சந்திப்புகளில் எல்லோரும், -  ' Empathy’ - ''மற்றவர் பார்வை'யில் பார்த்தல் - அணுகுமுறையை ஊக்குவிப்பதும் ஆக்கபூர்வமான அணுகுமுறையாகும். தவறு செய்தவர்களைத் தனிமைப்படுத்தித் தண்டிக்கும் அணுகுமுறையாகும்.

இவ்வாறு வாழ்வதால் சமூக அளவில் நல்லவை பெருகி, தீயவை அழிய நமது பங்களிப்பை நாம் அளித்தவர்களாவோம். அதன் 'பலன்கள்' நாம் வாழ்கின்றபோதே நமக்கு தெரியாவிட்டாலும், நாம் எப்போது மரணத்தைத் தழுவினாலும் 'சமூக'க் குற்ற உணர்வின்றி, மனநிறைவுடன் மரணத்தைத் தழுவுவதை எவரும் தடுக்க முடியாது.

குறிப்பு: மிகவும் வசதி குறைவானச் சூழலில், தமிழ் வழியில் படித்து, தனது 'திறமையை' மட்டுமே மூலதனமாக வளர்த்து, திரைத்துறையில் இயக்குநராக வளர்ந்து, இன்று இந்தித் திரைப்பட உலகமும், இந்தியாவுமே மலைக்கும் அளவுக்கு தொடர்ந்து வியாபார ரீதியில் வெற்றிப்படங்களும், அப்படங்களில் 'லஞ்ச எதிர்ப்பு' உள்ளிட்டு பல நல்ல கருத்துக்களையும் கலந்து,  'தமிழர்' என்ற பெருமையை வளர்த்த இளைஞர் 'கத்தி' திரைப்பட இயக்குநர் முருகதாஸ். அந்தத் தமிழனுக்கு தவறான அணுகுமுறையால் கெடுதல் செய்வது பெரும் தவறாகாதா?