வியாழன், 10 ஜூலை, 2014

தன்வீடு போல்

எங்கெங்கு நாமுலாச் சென்ற போதும்
இல்லத்தே மீளுமந்த ஒனறு போதும்!
அங்கங்கு தண்துயில உண்டு  லாவ
ஆம்ந‌ன்மை வைத்தழகு போற்றி னாலும்

பொங்குள்ளம் பூரிப்ப தில்லம் தன்னில்!
பூக்கின்ற தாய்ச்செடியில் பொன்னாம் பூக்கள்.
தங்குங்கள் விண்ணளாவு பன்மா டத்தில்
தன்வீடு போல்வருவ தில்லை காண்பீர்.



தண் துயில -  குளிர்வசதி உள்ள  அறையில் துயில (.உறங்க) 
ஆம்  -  ஆகும் , பொருந்தும் .  நன்மை  -  வசதிகள் 
பொங்குள்ளம் --  உலா தொடங்கும்போது மகிழ்வு பொங்கும் உள்ளம்.
பூரிப்ப(து) -  வீடு வந்ததும் பூரிப்பது. 

சனி, 5 ஜூலை, 2014

யகர ககர பரிமாற்ற.....

இப்போது யகர ககர பரிமாற்றத் திரிபுகளைச் சற்று சிந்திப்போம்.

தேகம் என்ற முன் இடுகையில், அதன் முந்திய வடிவம் "தேயம்" என்பது கூறப்பட்டது  இதன் தொடர்பில் யகர ககரத் திரிபுபற்றி அறிதல் நலம்.

அதிகமான் என்ற அரசர் பெயர், அதியமான் என்றும் எழுதலாம். ய ‍> க ஒன்றுக்கு மற்றொன்று இடம்கொள்ளும்.

நாயர் என்று இன்று வழங்கும் சாதிப்பெயர், நாகர் என்பதினின்று வந்தது என்று
ஆய்வாளர் சிலர் கூறியுள்ளனர்.1 இதற்கு அவர்கள் கூறும் காரணம், நாயரென்போர் முன் நாகவணக்கம் உடையோராய் இருந்தனர் என்பதுதான். அதாவது நாகவணக்கம் பொதுவாகவும் பரவலாகவும் இருந்ததா,  அல்லது இவர்கள் மட்டுமே  நாகவணக்கம் செய்துவந்தனரா என்பது தெரியவில்லை. சோழனொருவன் அழகிய நாகக் கன்னிகையை மணந்தபின், நாகர்கள் குமுகத்தில் ஒப்புதல் பெற்று அவர்கள்பால் ஏனை மக்கட்கு நட்புறவு மலர்ந்தது என்பதும் கூறப்படுகிறது. மணிமேகலைக் காப்பியம், நாகரை நக்கசாரணர் என்கிறது. அவர்கள் ஒரு மலையில் வாழ்ந்தனர், சாதுவனைக்  கொன்று கள்ளுடன் உண்ண முனைந்தனர் என்கிறது.

நாயர் என்பது நயத்தல் என்பதின் அடியாகப் பிறந்த பெயர் என்பது மற்றோர் ஆய்வு சொல்வதாகும்.2

நாயனார், நாய்க்கர், நாயுடு என்பதெல்லாம் என்ன என்பதை, நாயர் ‍ நாகர் ஆய்வுரை மூலம்  அறிதல் அரிது.3

இது எங்ஙனமாயினும்,  நாயர் ‍  நாகர் திரிபில் ய >க,  க>ய பரிமாற்றம் உண்டென்று அறிஞர்கள் கருதியது அறியலாம்.

காயிதம் என்பது காகிதம் என்றும் திரியும். இதிலும் ய க திரிபு காணப்படுகிறது.
மரக் குழம்பை அரைத்துக் காயவைத்துச் செய்யப்படுவதால் "காய் (தல்)" என்ற சொல்லினடிப்  பிறந்ததே காயிதம். (காய்+இது+அம் )
  அது பின் காகிதம் ஆனதால், காயிதம் என்பதே முந்துவடிவம் ஆகும்.


நேயம் என்பது "ஸ்" தலைபெற்று, யகரம் ககரமாதல் காணலாம்.  நேயம் > சி  நேகம்.

நிமித்தியம் > நிமித்திகம்   ய >  க

கன்னியை (கன்யா) >  .கன்னிகை   ய  > க


-------------------------------------------------------------------------------------------------------------

குறிப்புகள்:

1 பேராசிரியர் கணபதிப்பிள்ளை, (இலங்கை).  மற்றும் வரலாற்று அறிஞர்  எம் . சீனிவாச  .ஐயங்கார் .

2. அறிஞர்  தேவநேயப்பாவாணர்.

3 Per Jaffna author and historian  Kanagasabaip Pillai, Nagas were yellow-skinned people of Mongoloid race (as in Indian State of Nagaland today). Some deny this.  (See Tamils 1800 Years Ago )

வெள்ளி, 4 ஜூலை, 2014

காதுக்கு உகந்த கீதை

முன் இடுகையில்  (கத்) என்ற பிரித்தறி சொல்லினின்று கீதை என்பதும்  ஏனைச்  சொற்கள் சிலவும் உருப்பெற்றன என்பது கண்டோம்.

இப்போது காது என்னும் சொல்லைப் பார்ப்போம்,

கத் என்ற ஒலி குறிக்கும் சொல்லினின்று கத்> காத் > காது என்று வந்திருப்பது மிக்கப் பொருத்தமானதே. அதிலும் இறுதியில் வந்த உகரம் பாருங்கள். ஒலியானது உள் சென்று கேட்பாற்றல் பெறுவது நன்கு தோன்றும்படியாக,  உகரத்தில் முடிகிறது. விகுதியாகவும், அதே சமயத்தில் உட்செலவுப் பொருண்மை தெரியவும் அமைந்துள்ளது.

இதற்காக நாம் பண்டைத் தமிழரைப் பாராட்ட வேண்டும். மொட்டையாக ஒரு விகுதியைப் போடாமல் அதற்கும் ஒரு பொருள்வரச் செய்த பெருமை அவர்களுடையது ஆகும்.

கத் நீண்டு காத் ஆகி காது அமைய,
கத் > கித் ஆகி, அதுவும் நீண்டு ஐ விகுதி பெற்று கீதைச் சொல் அமைய,

கன பொருத்தமன்றோ?

சொற்கள் நீள்வது புதிதன்று.   கண் >< காண்.  வாய் எப்படி நீண்டதென்பது பின்பு சொல்வேன்.


இப்படிச் சொல்லாமல், கத்து >  கது (இடைக்குறை அல்லது தொகுத்தல் போன்றது ) > காது ( முதனிலை நீண்டு பெயரானது ) என்று தமிழிலக்கண மரபு பற்றி உரைப்பது தமிழாசிரியர் விழைவு ஆம்.