சனி, 7 ஜூன், 2014

தசை

இனித் தசை என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்.   இது எழுத்துக்கள் முறை மாறி,   சதை  என்றும் அமையும்.  இவற்றில், தசை என்பதே முந்துசொல் என்பதால், அதையே ஆய்வுசெயல் தக்கது. சதை எனற்பாலது அதனின்று திரிந்து அமைந்த எழுத்து  முறைபிறழ்  சொல்.

தசையானது, என்புடனும் நரம்புடனும் தைக்கப்பட்டுள்ளது. தைத்தல் என்பதோ வெனின் இணைத்தற் பொருளதாம்.

முன் தயிர் என்பதனுள் நுழைந்து கண்டோம். தை > தய் > தயிர் என்பது காணப்பட்டது.

அதுவேபோல் தை > தய் > தசு  >  தசை.  இனி, தை > தய் >   தயை > தசை என்றும் ஆகும். இரண்டும்  ஒரே தெருவழித்தான் செல்கின்றன.       இரக்கத்துக்குரியோன்பால் மனம் சென்று தைத்தலும் அல்லது தையுறுதலும்  தை >  தய் > தயை தான். ஆனால்  இந்தத்  தயை உணர்வு,   தசை என்று மாறாது.   நிற்க, சதை குறித்த சொல் "தசை" என்று திரிந்தது,.  தொடர்புடைய எல்லாம் திரியுமாயின் பொருள் குழப்பம் ஏற்படும். மொழிக்கடல் சில அலைகளைச்  சில வரம்புக்குள் நிறுத்திவிடுகிறது. நடுக்கடல் அலைகள் எல்லாம் கரைக்கா வந்துவிடுகின்றன?

இங்ஙனம் தை என்ற அடியிற் பிறந்ததே தசை.

முன்னே கூறப்பட்ட சில திரிபு விதிகளை இங்கு  மீண்டும் கொண்டு  முன் நிறுத்தவில்லை. சுருங்கச் சொல்லல் கருத்தாம்.  For further   information and clarity, please refer to the older posts.

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_28.html

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_3822.html

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html

வெள்ளி, 6 ஜூன், 2014

ஆசை

இனி ஆசை என்னும் சொல்லைச் சற்று நோக்குவோம்.

அழகிய ஒரு பூவினைக் கண்டு மனம் அதன்பால் அசையாதிருக்குமாயின்  அதன்மேல் அம்மனிதருக்கு "ஆசை "  இல்லை என்போம்.  அழகிய பூவிற்கும்  அசைந்து கொடுக்கா மனம்.  அசையுமாயின்  அதுவே ஆசை ஆகும் .

இந்த அசைவைத்தான் "சலனம்"  என்றும் சொல்வார்கள்.

படு என்ற வினைச்சொல் நீண்டு "பாடு" என்று பெயர்ச்சொல் ஆகும்.  இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்   எனப்படும் .

 அதேபோல் அசை நீண்டு "ஆசை" ஆகும்.
  ஒன்றை நோக்கி மனம் அசைதல்.

இந்தச் சொல் கொஞ்சம் திரிந்து,  பின்பு தேசிய சேவையில் ஈடுபட்டுவிட்டது. இது ஒரு பேச்சு  வழக்குச் சொல். பிற்காலத்தில் நூல்களில் இடம்பெற்றதாகும்.

"இவர் எத்துணை அழகிய பெண்ணுக்கும் அசைந்துகொடுக்காத ஞானி " என்று பேசிக்   கேள்விப் பட்டதில்லையா?


    ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
            ஆளினுங் கடல்மீதிலே
    ஆணைசெல வேநினைவர் அழகேசன் நிகராக
            அம்பொன்மிக வைத்தபேரும்
    நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
            நெடுநா ளிருந்தபேரும்
     நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
            நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
    யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
            உறங்குவது மாகமுடியும்
    உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
            ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
    பாசக் கடற்குளே வீழாமல் மனத்தற்ற
            பரிசுத்த நிலையை அருள்வாய்
    பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
            பரிபூர ணானந்தமே.  [ தாயுமானவர். பரிபூர.10]


தணிவு. தணிக்கை.

மொழி பெயர்ப்புச் சொற்கள்:

சமாதானம் -   தணிவு.
censor  -  தணிக்கை.

from :  இந்துமதமும் தமிழரும்.பக்.148.

இவற்றுள் தணிக்கை என்பது ஓரளவு வழக்கில் வந்துவிட்டது.