thennai - thengku
தென்னை மரம்பற்றிய சொற்கள்----------------------------
தென்னை என்ற மரப்பெயரில், ஈற்றில் நின்ற "ஐ" விகுதியாகும். எனவே. சொல்லின் பகுதி: "தென்" என்பதே.
தென் என்ற அடிச்சொல், தென் திசையையும் குறிப்பதால், தென்னை தமிழ் நாட்டின் தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்ட மரமென்பர். அது நிற்க:
தென் > தென்னை.
தென் > தெங்கு. (தென்+கு > தெங்கு.)
திசையைக் குறிக்கும் தென்+கு என்ற புணர்ப்பு "தெற்கு" என்று வர, மரத்தைக் குறிக்கும் தென்+கு என்பது தெங்கு என்றானது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? சொல்லாக்கத்தில் வெவ்வேறு சொற்களைப் படைக்க, வெவ்வேறு வழிகள் பின்பற்றப்படுகின்றன என்பதுதான்.
இவற்றைக் கூர்ந்து கவனிக்காமல், வாதங்கள் செய்வதில் பயனில்லை.
இதை இப்படிக் காட்டாமல், மாற்றுவழியாக:
தென் > தெம் > தெங்கு எனலாம்.
இது ஓர் உத்திதான்.
தெங்கு+ காய் = தேங்காய்! தெங்குக்காய் என்று வரவில்லை! ஏன் வரவில்லை ? (ஆனால் தெங்கங்காய் என்று கவிதையில் வரும்).
தெம் என்ற திரிபு அடியின் முதல் நீண்டது என்று சொல்லலாம்.
தென்காய் > தேன்காய் > தேங்காய் ஆகலாமே! அப்படியானால் இடையில் ஏன் தேன் வழிகிறது என்று கேட்கத் தோன்றுகிறதா?
தென் > தெம் > தேம் > தேம்+காய் > தேங்காய் என்று மடக்கலாம். அதுவும் ஒரு தந்திரம்தான்.
தென்னை+தோப்பு , இது தென்னைத் தோப்பு என்று வராமல் தென்னந்தோப்பு என்றன்றோ வருகிறது.
"தெங்கு நீண்டு ஈற்றுயிர் மெய்கெடும் காய்வரின்" -- நன்னூல், 186.
TWD23072008@26#