புதன், 23 ஏப்ரல், 2014

"பேரேடு " and parade.

நாட்சம்பளம் பெறும் ஊழியர் மிகப்பலர் வேலைபார்க்கும் குழும்பு(companies)களில் அதிகாலை அவர்களையெல்லாம்  அணி அணியாய் நிறுத்திப்  பெயரெடுப்பதாய்க் கூறுகின்றனர். இதைப்  "பேரேடு "  (அதாவது பெயர் எடுத்தல் )  என்கின்றனர்.

இந்தச் சொல், ஆங்கிலத்தில்  உள்ள parade என்பதுடன் ஒலி  ஒற்றுமை உடையதென்பதைக் கண்டுகொள்ளலாம்.
Parade என்பது பெரும்பாலும் படைகளில் வழங்கும் சொல்லாகும். இது இலத்தீன் parare என்ற சொல்லினின்று வருகிறது.

இலத்தீன் மொழிக்கு இச்சொல் எப்படிக் கிடைத்த தென்று தெரியவில்லை.

தமிழ் ஊழியர் வழங்கும் "பேரேடு"  என்பதும் இந்த ஆங்கிலச்சொல்லும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது. 
  

கண்றாவி.


பேச்சில் பெரிதும் புழங்கும் சொல் இது. இதில் முதலில் உள்ளது  "கண்" என்பது.  இது தெளிவு.

அடுத்து வருவது  அராவி.    இது அராவுதல் என்னும் சொல்லினின்று உருவானது.

அராவு ‍   ஆங்கிலத்தில்   ஃபைலிங்  (filing)  என்பர்.    அரத்தினால்  தேய்த்தல்.


கண்ணராவி எனின்  கண்ணை அரம்போட்டுத்  தேய்த்தல் போன்ற  துன்பத்தினைத் தரும்  காட்சி என்று பொருள்.

கண்ணை வருத்தும் காட்சி.

கண்ணராவி >  கண்றாவி.

தேர்தல் கலை

 இந்தியப் பெருந்தேர்தல்  --- கள்ளம்
 இல்லாப்  பொதுமக்கள்!---சொல்லால்
 வந்து பொழிந்திடுவார் ‍‍‍‍‍‍‍‍‍;--- வேட்பர்
 வயம்தமை   இழந்திடுவர்.

 எங்கும் நடப்பதுபோல்  --- தருவார்
 தம்முறுதி  மொழிகள்‍--- களத்தில்
 தங்கி  உழைப்பவர்போல் --- தோன்றின்
 வென்றி விளைப்பவரே!

 தேர்தல்  போனபின்னே  ‍‍‍‍--- சொன்னவை
 தேற வில்லை யென்றால் --- அதுவும்
 யார்தம்  குற்றமையா ‍‍‍---  அதுவே
 தேர்தல் கலையல்லவோ!

 மீண்டும்  வேறொருவர் ‍‍‍‍--- தம்மை
 மேற்கொண்டு செல்வதன்றி  ‍‍--- ஞாலம்
 யாண்டும்  வேறுவழி ---- இல்லார்
 யாது     தலைப்படுவார்?‍‍



வேட்பர்   ==  வேட்பாளர்.   
சொல்லால் வந்து (உறுதிமொழிகளைப்) பொழிந்திடும்  வேட்பாளர் வயம்  தம்மை இழ ந்திடுவர் என்ற படி.  சொல்லாடும்  திறம்  கூறியது. 
 வென்றி ==  வெற்றி.
மேற்கொண்டு -   தேர்ந்தெடுத்து.
தலைப்படுவார்? =  செய்ய இயலும் ? என்பது