செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மகன், மகள், மகார்

மகன், மகள், மகார் என்பன மிகவும் அழகுபெற நம் தமிழில் அமைந்த சொற்கள்.

மக +  அன்  =  மகன் என்று அமைந்தது சரிதான்.
அதுவேபோல்,  மக +  அள் = மகள் என்பதும்  நன்றேயாம்.

இதில் கேள்வி:  மக+ அன் = மகவன் என்றும்  மக +அள் = மகவளென்றும்  உடம்படு மெய் பொருந்தி ஏன் அமையவில்லை?

சிவ + அன் =  சிவன். செம்மைக் கடவுள். முருகனும்தான்.

உடம்படுமெய் இங்கெல்லாம் தேவையில்லை  என்க.

A short dialogue on word formation.


புதன்கிழமை 29.1. 2014ல் வகரம் பகரமாகத் திரியும் என்னும் இடுகையில்

 இது  போன்றவை நம்  பழைய இலக்கணக் கோட்பாடுகட்கு இணங்க அமையவில்லை. இருப்பினும்  தமிழே.  

என்று எழுதியிருந்தேன். இதைப் படித்துவிட்டு, பழைய இலக்கணங்களில் குழறுபடிகள் ஏதும் இல்லை என்று எண்ணிவிடாதீர்கள்.

பழைய இலக்கண விதிகள் ஒத்துவராத இடங்கள் அந்தப் பழைய இலக்கண காலத்திலேயே ஏராளம். அதில் ஒன்று மட்டும் உங்களுக்குச் சொல்கிறேனே.  கேளுங்கள்.

மக்கள் என்ற சொல்லைப் பார்ப்போம்.

மக என்பது அடிச்சொல்.

மக > மகன்
மக > மகள்.  So far, so good.  But:

மக + கள் =  மக்கள்.

இயல்பாகப் பார்த்தால்   "மகக்கள்" என்றல்லவா வரவேண்டும்?  ஏன் மக்கள் என்று வந்தது?

அது போகட்டும்.

"கள்" விகுதி அஃறிணைக் குரியதென்றார் தொல்காப்பியனார். உயர்திணையாகிய "மக்களில்" எப்படி "கள்"  விகுதி   வந்தது?  அதை எப்படித்  தொல்காப்பியனாரே ஏற்றுக்கொண்டார்.

இதிலிருந்து   நாம்  அறிவது:   சொற்களை உருவாக்கும்போது இலக்கணத்தை  முழுவதும்  பின்பற்ற இயலாது என்பதுதான்.





திங்கள், 3 பிப்ரவரி, 2014

கோடி கொடுத்து.......

கோடி கொடுத்துக் கொடுந்தேர்த லில்வென்று
நாடு நடத்துமோர் நாயகனின்--- ‍‍‍‍கேடறிய
ஏடு வெளியிட்டும் ஏதும் தொடர்காணோம்
மூடினவோ ஊடகங்கள் வாய்.

வேறொரு நாட்டின் தலைவர் பற்றி ஒரு செய்தி வெளிவந்தது. ஆனால், அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்நிலை பற்றிய பாடல் இது.

 ஏடு = பத்திரிகை,  வெளியிட்டும் =‍‍ செய்தி வெளியிட்டும்.

பணம் "புரண்ட " தேர்தலாதலால் "கொடுந்தேர்தல் " ஆயிற்று.  

 சில சமயங்களில் செய்திக்குப் பிந்திய நிகழ்வுகளை ஊடகங்கள் கவனிப்பதில்லை. பின் நிகழ்வுகள் செய்தித் தகுதியை   (newsworthiness )இழந்துவிடுகின்றன போலும்.