செவ்வாய், 19 நவம்பர், 2013

நாடு.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் 
செல்வரும் சேர்வது நாடு.

ஒரு நாட்டில் வாழும் மக்கள் போதுமான பொருள்வசதி உடையவர்களாக இருக்கவேண்டும். உணவுக்கு ஏங்கும் நிலை இருத்தலாகாது. மேலும் அந்நாட்டில் எல்லா வகையிலும் சிறந்த செல்வர்களும் வாழ்தல் வேண்டும். தீவினை விட்டுப் பொருளீட்டிய செல்வர்களாய் அவர்கள் இருத்தல் வேண்டும் என்று கூறவந்த நாயனார், தாழ்விலா என்ற சொல்லைப் பெய்துவைத்துள்ளார். போதைப்பொருள்களாலும் கொலை களவு முதலியவற்றாலும் உயர்ந்துவிட்டவர்கள் "தாழ்விலாச் செல்வர்" என்னும் கூறுபாட்டினுள் கருதப்படும் தகுதியுடையவரல்லர். பொதுமக்கள் உட்பட அனைவரும் தக்கவர்களாய் இருத்தல் இன்றியமையாதது, உணவு உற்பத்தியுடன் பொருள் உற்பத்தியும் "தள்ளா விளையுள்" என்பதில் அடக்கப்பட வேண்டியவையே. முன்னை உரையாசிரியன்மார் நெல் முதலியவை விளையும் நிலங்கலளை மட்டுமே "விளையுள்" என்று கொண்டாரெனினும் இதுபோது  இக்கருத்து சற்று விரிவுசெய்தற்குரியதே ஆகும். பொருளியல் வளர்ச்சி "தாழ்விலாச் செல்வர்" என்பதுள் அடங்கிவிட்டதென்று கருதுவதும் தவறாகாது. எங்ஙனமாயினும் இக்குறள் விரிவாகச் சிந்திக்கவைக்கும் சொற்புதையலைக் கொண்டதாகும்.

வெள்ளி, 15 நவம்பர், 2013

பிரித்தியங்கரா தேவி

பிரித்தியங்கரா தேவி என்ற  பெயர் எவ்வாறு அமைந்தது? இதனை  நாடுவோம்!

 பிரித்தியங்கரா தேவி என்பதை பிரித்து+ இயங்க + அறா+ தேவி என்று பிரிக்கவும்.

இத் தொடர்மொழிப் பெயரில், பிரித்து என்பது உண்மையில் பிரிந்து என்பதன் வலித்தல் ஆகும்.  வலித்தல் எனின் "ந்து" என்பது "த்து"  என்று வல்லெழுத்துப் பெற்றது என்பதாகும். இது புதியதன்று. விகுதி சேரும்போது வலித்தல் போன்றதே இது. வருந்து > வருத்தம், பொருந்து> பொருத்தம் முதலியன உங்களுக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுக்கள்.

பெருமானிடமிருந்து பிரிந்து என்று பொருள்கூறாமல், பெருமானிடமிருந்து தன்னைப் பிரித்து, அல்லது பிரித்துக்கொண்டு என்னின், இதன்பொருள் இன்னும் எளிதாகிவிடும்.

பிரிந்த பின், அல்லது பிரித்துக்கொண்ட பின், இயங்க = தனித்து அமர்ந்து அருள்பாலிக்க, அறா = அறாத, தேவி = தெய்வம் என்பது பொருள்.

தனித்து அவள் நிற்க, பற்றாளன் அவளைத் தாழ்ந்து பணிந்தாலும், அவனுக்குப்  பெருமானின் அருளும் தானே வந்துறும் என்பது தெளிவாகும்படி "அறா" என்ற பதம் உள்பதியப் பட்டுள்ளது கண்டு இன்புறலாம்.  இது பின் பெயரில் "அரா" என்று மாறியுள்ளது.

இயங்க அறா > இயங்கறா:  இங்கு ஓர் அகரம் கெட்டது.

வீறு என்பது அம் விகுதி பெற்று வீரம் என்று திரிந்துள்ளது நோக்குக.
விறுவிறு என்று போனான். விர்ரென்று போனான் என்ற வழக்குகளை நோக்குக. ரகர றகர எழுத்துமாற்றங்கள் தமிழுக்குப் புதியவை அல்ல.



புதன், 13 நவம்பர், 2013

சீர் > (சீல்) > சீலம்.



சீலம் என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.


சீர் > (சீல்) > சீலம்.

ரகரமும் லகரமும் ஒன்றுக்கொன்று பதிலெழுத்துக்களாக நிற்கவல்லவை.

(பிற மொழிகள் பலவற்றிலும் இத்தகைய நிகழ்வினைக் காணலாம்.)

எடுத்துக்காட்டு:

தமிழில் சீரை > சீலை இதுபின்  சேலை என்றானது. சேலைக்குச் சீலையே முந்து வடிவமாகும்.

தமிழ் மிக்கப் பழமை வாய்ந்த மொழி என்பதை சீரை என்ற சொல்லை ஆய்ந்தறிந்து கொள்ளலாம். சீரை என்பது மரப்பட்டை. காட்டு மாந்தன் மரப்பட்டையை ஆடையாக அணிந்துகொண்டு திரிந்தான். நெயவு அறியாக் காலத்தில் இவ்வித இயற்கைப் பொருட்களைத்தாம் பயன்படுத்தினான். காட்டுவாணர் பலர் இங்ஙனமே இன்னும் வாழ்கின்றனர் அல்லது அண்மைக் காவம் வரை வாழ்ந்துகொண்டிருந்தனர்.

அம்பலம் என்ற சொல்லும் அம்பரம் என்று திரிவதுண்டு.

சிற்றம்பலம் > சித்தம்பலம் > சிதம்பரம்.  ற்ற > த்த பேச்சுவழக்குத் திரிபு. ல> ர முன்கூறியபடி ஆனது. இதற்கு வேறு அழகிய முடிபுகளும் கூறப்படுவதுண்டு. அவை சில இறைப்பற்று உரைகளின் வாயிலாக நீங்கள் அறியக்கிடைக்கும்.

.