புதன், 14 நவம்பர், 2012

தீபாவளியே மீ ண்டும் எப்போது வருகிறாய் ?



come again

வாரநாள் தன்னில் வந்ததீ பாவளிப்பெண்
கூர்ந்துநான் நோக்கக் குசும்பாகப் -- பேர்ந்தோடிக்
கண்ணிற் படாமல் கதவிடுக்கில் போய்மறைய
இன்னுமினி என்றென்றேன் நான்.

தீபாவளியே!


ஓராண்டுக் காலம் உனக்காகக் காத்திருந்து
சீராக உற்றார்நம் நண்பருடன் ---தீராத
நன்மகிழ் வோடுநாம் நண்ணிய தின்பண்டம்
பொன் திகழும் நாள்தந்த தே.




குசும்பு = குறும்பு.




திங்கள், 12 நவம்பர், 2012

தீபாவளி வாழ்த்துக்கள்

நாபா ரிதுபார்க்கும் நன்னீலன் தாள்போற்றித்
தீபா வளிஆர்க்கும் தேஞ்சுவையூண் --- ஆன்பாலும்
உட்கொண் டிமைப்போதும் ஓர்துயரும் தீண்டாமல்
கட்கண் சிறக்கவாழ் வீர்.


நா = நாவு. பாரிதுபார்க்கும் - இவ்வுலகைக் காக்கும்.
நன்னீலன் -விட்ணு ( விஷ்ணு). ஆர்க்கும் - தரும்.
தேஞ்சுவையூண் - இனிய உணவு வகைகள். ஆன் பால் - பசும்பால். கட்கண் - வாழ்வின் எல்லா முனைகளிலும்.

அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் உரியனவாகுக !  

வியாழன், 11 அக்டோபர், 2012

கண்> கரு > கருணை


வீரம், காதல், இரக்கம் போன்ற  பலவேறு பண்புகளும், கண்களின் வழியாகவே வெளிப்படுவனவாகத்  தமிழன் கருதினான்.
தமிழனின் மொழியில் அமைந்துகிடக்கும் சொற்கள் பலவும் இக்கருத்தையே நன்கு படம்படித்துக் காட்டுகின்றன.

வீரம் குறிக்கும் "தறுகண்மை" என்னும் சொல் கண்ணினையே நிலைக்களனாகக் கொண்டதாகும். காதலுக்கும் கண்ணுக்கும் உள்ளதாக இலக்கியங்கள் கூறும் தொடர்பினை ஈண்டு விரித்துரைக்கத் தேவையில்லை.

இரக்கம், மனநெகிழ்வு முதலிய கண்ணினின்றே வெளிப்படுவன என்று இலக்கியம் கூறும். கண்ணோடுதல், கண்ணோட்டம் என்ற சொற்களை ஆய்ந்து இதனை அறியலாம்.கண்ணோட்டம் என்பது இரக்கம்.

கண் என்பது கரு என்று திரியும் என்பதை நாம் மேலே ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளோம்.

கண்> கரு > கருணை.

முகத்தின் ஏனை உறுப்புகட்கு இல்லாத ஒரு  திறம்  கண்ணுக்கு உண்டு. கண் கலங்கி நீர் சிந்தி அழக்கூடியது. கண்ணிலிருந்து (கண் என்றசொல்லில் இருந்து)  கரு என்பதமைந்து கருணையில் முடிந்தது மிக்கப் பொருத்தமுடையதாகும்.

நெய்(தல்) என்ற சொல்லே "ணை" என்று மாறி சொல்லீறாக நிற்கின்றது. கண் சென்று ஈடுபாடு கொள்ளுதல் என்பது பொருள்.

கண்> கரு > கருநெய் > கருணை.

எண்ணெய என்ற சொல் எண்ணை என்று வழங்குதல் காண்க. தமிழ்ப் புலவன் இதை எண்ணெய் என்றே எழுதவேண்டுமென்றாலும் எண்ணெய் வணிகர் கேளார். திரிபு வழக்கில் உள்ளது.

அங்ஙனமே, கருணை என்ற திரிபையும் புலவர் ஏற்கமாட்டார்.எனினும் சங்கதத்தில் நல்ல  இடப்பிடித்துக்கொண்டு இது மீண்டும் தமிழுக்கு வந்து வழங்குகிறது,


குறிப்பு: கண்+ எய்(தல்) =கண்ணெய் > கருணை எனினும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.