செவ்வாய், 10 ஜூலை, 2012

due appreciation or praise


பாராட்டத் தக்கவரை பாராட்டாமல் விடுதலும்
குற்றமே


யாரோடும் மானிட நேயம் --- பொலிந்திட
யாத்திடும் பாக்களில் காத்திடும் பண்பினில்
பாரினில் செந்தமிழ் மேவி -- குழைந்திடப்
பயக்கும் கருத்துகள் தேனுள் தினைத்துகள்

இத்தகு பாவலர் தம்மைப் --- புகழ்ந்தி
இனிய சிலச்சில பணிவில் சொலத்தகும்;
பத்தொடும் ஒன்றெனக் கும்மி --- அடித்தொரு
பக்கல் களைந்திடில் பொக்கம் விளைந்திடும்.



குறிப்பு :--தேனுள் தினைத்துகள் = தேனும் தினைமாவும் போல இனிமையானது.
பக்கல் - (ஒரு ) ஓரமாக;  களைந்திடில் = வீசிவிட்டால்.
பொக்கம் - குற்றம்'  அல்லது பிழைபடுதல்




பலியிடத் தயங்காப் பாழ்மனத் தோர்நிறை
உ;லகிடை உலவியும் ஓருயிர்க் கிரங்கி
எலியென்றும் எள்ளாது நலிவொன்றும் கொள்ளாது
மலைக்கும் மனம்தரு கனம்சிறு கண்ணன் 


குறிப்பு :-


எலிக்கும் வீட்டில் இடம் வரையாது வழங்கினார்
மலைக்கும் நிலைக்க இடம் தருக என்றார்.
சிறந்த உள்ளம் உடையார்......
.






சுந்தர ராசனார் சொல்லாட்டோ இத்திரியில்
மந்திர நன்மொழிபோல் மாண்புற்றுச் -- செந்தமிழை
வெல்பரந் தாமரின் வெள்ளியல் மாறாத
நல்விருந்தாக் கிற்றே நமக்கு.

குறிப்பு 


சொல்லாட்டு - சொல்விளையாட்டு. 
வெல் பரந்தாமர் - ஒரு தற்கால இலக்கண ஆசிரியர்.
வெள்ளியல் - வெண்பா இலக்கணம்.




குறள்வெண்பா :


பக்கமலை போனாலென் தக்கசின்னக் கண்ணனையே
ஒக்குமலை ஒன்றில்லாப் போது!

தொலைமலையால் யாதுயர்? சின்னக்கண் தோன்றல்
கலைமலையாய் முன்னெழுமிக் கால்/




குறிப்பு:  முன்னெழுமிக் கால் =  முன் எழும் இக்கால்,  அதாவது முன்னே தோன்றுகின்ற இப்பொழுது. 

வெள்ளி, 6 ஜூலை, 2012

மனங்கவர் ஷெல்லி


ம ன ங் க வ ர்  ஷெ ல் லி


ஷெல்லியின் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அவனுடைய கருத்தோட்டம் இப்படி யிருந்தது:

வெகுண்டெழுந்த மேற்குக் காற்றே
இலையுதிர் காலனின் மூச்சே
கண்ணுக்குப் புலப்படாமல் இருந்துகொண்டு
காய்ந்த இலைகளை விரட்டுகிறாய்.

இதைக் கவிதை வடிவில் எழுதலாமே என்ற எண்ணம் எழுந்தது  அது இப்படி வந்தது:


உதிர்காலன் எதிர்வீச்சாய் உரத்த மூச்சாய்
ஓங்கித் திசைமேற்கின்வழி வீங்கும் காற்றே,
புதிராகி, விழித்திரைக்குப் புலப்படாமல்
புரட்டிச்சரு கனைத்தும்பேய் விரட்டினாயோ!

ஆனால் தொடர்ந்து மொழிபெயர்க்கவோ, தழுவிப் பாடவோ முயற்சி செய்தேனில்லை.




மெதுவெள்ளை, கறுப்புடனே உறுத்தும் செம்மை
மேவுகின்ற நிறச்சருகுக் குவியல் தம்மை

என்ற வரிகளை, "காய்ந்த இலைகளை" என்பதற்குப் பதிலாக இணைத்திடலாமா என்றும்  யோசித்தேன்.....

வேறு  சோலிகள் வந்து குறுக்கிட்டுவிட்டன.....

nAthi


continue from post titled "anaathai" dated 5.7.12   (அனாதை ) 

நா என்பது அன்மை  அல்லது "அல்லாமை"  (அல்லாதது) குறிக்கும் ஒரு சொல்.ஆங்கிலத்தில் உள்ள "நோ" என்பது  அச் சொல்லுக்குத் "தூரத்துச் சொந்தம்". இந்தோ ஐரோப்பிய மொழிகளில் உள்ள இணையான சொற்களைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

அல்> அலா(தது) > அனா > நா.

ஒப்பீடு:

அம் > அம்மை > அம்மா > மா > மாத்ரு

இப்படித் தலைபோனவை பலவாம்.

தலைபோய் வால் நீண்டவை பல.


நா > நாதி.  (தி விகுதி)

நாதி இல்லாதவன்  என்பதில், உள்ள நா, ஆதரவு  என்று பொருள் தருவது.  வெறும் இன்மை அல்லது அன்மையைக் குறிப்பதன்று.

ஆகவே இந்தோ ஐரோப்பிய நா வேறு. நாதி என்பதில் உள்ள நா வேறு