திங்கள், 2 ஜூலை, 2012

வாழ்த்துக்கள்



கவிகள் தந்த இரு நண்பர்களுக்கு வாழ்த்து.

இருவரின் கவிகளும் இனிமை
இனிமைத் தமிழ்ச்சுவைத் தனிமை!
தனி-மையோ எழுதுங்கால் வடிந்து--ஒரு
வடிவான தேனாச்சு முடிந்து.

முடிச்சினில் பொதிதிரிப் பருப்பு,
பருப்பினில் சருக்கரை கலந்து,
கலந்ததைக் காய்ச்சினீர் பாகாய்,--அந்தப்
பாகினைப் பாவலர் நோகார்!

நன்கு முயன்று எழுதியுள்ளீர்கள். சுந்தரராசு அவர்கட்கும் சின்னக்கண்ணனுக்கும் வாழ்த்துக்கள், இனியும் பாடுங்கள், கேட்போம்.

பொதி = பொதிந்த; திரி = முந்திரி. நோகார்= விரும்பாமல் இரார்.
வாழ்த்துக்கள் எனலாகாது என்பர் அறிஞருள் ஒரு சாரார். இருவகையிலும் எழுதலாம் என்பதே  எமக்கு உடன்பாடு.

அடுத்தல் continue


அடுத்தல், அடுத்திருத்தல் கருத்திலமைந்த சொற்களின் ஆய்வு தொடர்வோமே!

அடு > அடி  (இ)
அடு > அடை (ஐ)
அடு > அடகு  (கு)
அடு > அடர் (வினைச்சொல்)

அடு (அடுத்து நிற்றல்) > அடு  (சுடுதல்) > அடுப்பு.

அடு > ஆடு  இது சூடு என்னும் பொருள்.

ஆடுறு = சுட்ட. ஆடுறு தேறல் - சூடான பானம்.

தொடர்வோம்.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

what poem is this? Just enjoy it!


முதுமை முடுகிவந் துங்கள் முனைப்பயர்த்திப்
பையப் பணிகளையே செய்யப் புகுத்திடினும்,
நோய்கள் நிலைமிகுந்து வாய்கண்கை நேர்தளர்ந்தும்
ஆய்வை எழுத்தையுமோர் பாவைச் புனைவதையும்
சூடு தளர்த்திச் சுடர்குறைத்த வேளையிலும்
தம்வேலை தம்குடும்பம் என்றசுமை மிக்குவந்து
இம்மியும் காலம் இசைந்துவராப் போதினிலும்
செந்தமிழ் யாண்டும் மறவாது வந்தவழி
எந்த நிலையிலும் பிறழாது இயங்கியவர்
சுந்தர ராசன் சோர்விலார்  வாழ்கவாழ்க!
அந்தர  அழகுக் கவிகள்  இவண்புனைக!
பொடிக்குத்தான்  போயிலையாய் பொற்கவிகள் ஈந்த
அடிக்கொரு பொன்னாய் அணிபெற்று நிற்கவே.
வெள்ளை அகவல் கலிவஞ்சி என்றுநூல்
உள்ள அனைத்துமே ஓங்க விளைத்திடுக.
தொல்லறி வாளர் திறம்பெற்றே
அல்லவை நீக்கியே பல்புகழ் நேர்படவே.

யாவும் நன்று. இந்த வரிகளைத் திரு சுந்தரராஜ் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். என்ன பா என்று
இப்போது சொல்ல முடியவில்லை. கண்டபடி எழுதியது. சின்னக்கண்ணன் அவர்கள், இதைச் சுவைத்துக் கருத்துகளை வழங்க வேண்டிக்கொள்கிறேன்.