மருப்பு ஊசியாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்பு ஓலையாக --- திருத்தக்க
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு.
மருப்பு = யானைத்தந்தம். மறம்= வீரம்.
கனல் = ( தீபோலக்) கனல் (வீசும்.)
வேல்மன்னர் - வேலெடுத்துப் போரில் ஈடுபட்ட மன்னர்.
உருத்தகு மார்பு =உருவத்திற்குத் தகுந்த மார்பு, என்றால் விரிந்த மார்பு.
ஓலையாக - எழுத்தைப் பதிவு செய்யும் பொருளாக,
திருத்தக்க -உயர்வு தங்கிய. வையகம் = உலகு.
எல்லாம் எமது = யாவும் எம்முடையது.
மொய்யிலைவேல் =இலை மொய்வேல்: இலைபோன்ற வேலின் குத்தும்பகுதி. கூரிய வேலை யுடைய என்பது.
மாறன் = பாண்டியன். களிறு = யானை.
வேல் என்ற ஆயுதத்தை நோக்கினால்,
அதன் கூரிய பகுதியில் ஓர் இலை இருப்பதைப்போன்ற வடிவம் இருக்கும். இதனைத்தான் "இலை மொய்க்கும் வேல்" என்கிறார் புலவர். மொய்த்தல் என்ற சொல் இங்கு பாநயம் சேர்க்கின்றது.
பாண்டிய மன்னனின் யானை, போர்க்களத்தில் என்ன செய்துகொண்டிருந்தது? இந்த உலகமெல்லாம் எங்களுடையது என்று எழுதிக்கொண்டிருந்தது. போரில் ஓர் இடைவேளைபோல் ஏற்பட்டு, பாண்டிய மன்னன் ஓய்ந்திருந்த போதும் அவன்றன் யானை ஓய்ந்திருந்ததா என்றால் அதுதான் இல்லை. யானை தொடர்ந்து போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு , தன் தந்தத்தினால் (/தந்தங்களினால்) எழுதிக்கொண்டு இருந்தது.
எங்கே? பகை மன்னவர்தம் மார்பைக் கீறி அந்த வாக்கியத்தை எழுதிக்கொண்டிருந்தது! அதன் தந்தம்தான் ( /தந்தங்கள்தாம்) அதன் எழுதுகோல்.
இந்தப் பகை மன்னவர்கள்,வீரத்தில் சளைத்தவர்களா என்றால் இல்லை. அவர்களும் வீரக்கனல் வீசும் வேல்களை ஏந்தி வந்தவர்கள்தாம். இத்தகு பெரு வீரர்களுடன் தான் பாண்டியனும் போர்செய்துகொண்டிருந்தான்.
பாண்டியன் கோழை யல்லன். அவன் எதிரிகளும் கோழையர் அல்லர். அந்த யானையும் ஒன்றும் கோழையன்று. எங்கும் வீரக்கனல்.
பகை மன்னரின் வீரம், அவர்கள் வேலின்மேலும் அவர்கள் அகன்ற மார்பின்மேலும் ஏற்றிக் கூறப்படுகிறது; போரில், வெற்றியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த பாண்டியனைக்கூட, அவ்வளவு வீரக்கனலைப் பெய்து வரணிக்கவில்லை புலவர்.
வீரர்களை வென்றவன் தான் பெருவீரன். இதைப் புலவர் நன்றாக உணர்ந்திருந்தார்.
புலவரின் புலமை யாது என்பதற்கு இவை எல்லாம் சான்றுகள். வெறும் எதுகை மோனைகளைப் பெய்து எழுதுவது, யார்வேண்டுமானாலும் எழுதலாம். அது கவிதையும் ஆகாது. அதை எழுதியவரும் நல்லிசைப் புலவர் ஆகிவிடமாட்டார்.