கன்னிக் காவலும் கடியிற் காவலும்
தன்னுறு கணவன் சாவுறின் காவலும்
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர்தம் குடியிற் பிறந்தாள் அல்லள்
உதயகுமாரன் அம்பலம் புக்க காதை ௯அ - ௰2
மணிமேகலை.
கன்னிக் காவலும் கடியிற் காவலும் - கன்னியாய், அதாவது திருமணத்தின் முன் பெண்டிருக்குப் பெற்றோரும் மற்றோரும் அளிக்கும் பாதுகாவலும், அதற்கடுத்துத் திருமணம் நிகழ்ந்தபின் அவர்கட்குக் கணவன்மாரும் அவர்கள் நலம் கருதிய ஏனையோரும் அளிக்கும் பாதுகாவலும்;
தன்னுறு கணவன் சாவுறின் காவலும் - கணவன் இறந்து கைம்பெண்ணான பின் உறவினரும் ஏனையோருமளிக்கும் காவலும்;
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது - கற்பு நெறி வழாமல் காத்துக்கொண்டு அடுத்தவர்கள் குறையேதும் காணாத படிக்கு, (1)
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா - கணவன் இருந்தாலும் இறந்துவிட்டாலும் அவனையன்றித் தெய்வத்தையும் தொழாமல்;
இவ்வரிகளையும் இனிவரும் சிலவற்றையும் தொடர்ந்து காண்போம்.
Note: (1) பிறர் பிறர்க் காணாது - பிறர் கைம்பெண்ணைக் காணாத படி என்றும் உரைப்பர்.
செயற்கரிய செய்வார்.....
Refer to previous post and continue:
மணிமேகலை புத்தமதக் காப்பியம் என்பர். எனினும்
தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுக என்று புத்த மத நூல்கள் கூறியதாகத் தெரியவில்லை.(1) இது எங்ஙனமாயினும், கணவனைப் போற்றுவது தமிழர் கொள்கை, இன்னும் சொல்வதாயின் இந்துமத நெறியென்று பின்னர் பெயர் குறிப்பித்த நம் நெறியினர் போற்றிய கொள்கை என்பதே சரியானது என்று கூறலாம். மணிமேகலை பாடிய சாத்தனாருக்கு இது மிகவும் பிடித்த கொள்கை ஆதலின், இதனையே கூறிய வள்ளுவ நாயனாரையும் சாத்தனார் பிறிதோரிடத்துப் "பொய்யில்(லாத) புலவன்" என்று பாராட்டியமையும் ஈண்டு நினைவில் நிறுத்தற் குரியதாம்.
நாடகத் தொழிலுடையார் தனியொரு வகுப்பினராய் முற்காலம் தொட்டு இன்றுகாறு மிருத்தலை அறியலாம். அதற்கு இலக்கியச் சான்றுகள் மிகப்பல. இவ்வரிகளும் அதையே காட்டுவதுடன், கற்பு நெறியிலும் மணவாழ்வு மேற்கொள்ளுதலிலும் கைம்பெண்மைநெறியிலும் அவர்கள் நெகிழ்வுடையார் என்று குமுகாயம் கருதியதையும் படம்பிடித்து முன்வைக்கின்றது.
கற்புநெறி தவறாது போற்றிய வகுப்பினரிடைத் தோன்றிய கண்ணகிக்கு, அந்நெறியின்கண்ணே நிற்றல் எளிதாம்; அங்ஙனம் போற்றாதாரிடைத் தோன்றிய மணிமேகலைக்கு அது கடினமன்றோ! செயற்கரிய செய்வார் பெரியர் என்றபடி, மணிமேகலை கற்பென்னும் வெற்பேறி நின்றதைப் போற்றிடவே ஆசிரியர் சாத்தனார் இங்ஙனம் பாடிச் சென்றுள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம் என்பது.
===========================================================================
Note: (1) If you have evidence in Buddhist literature on this point, please post the references here. I think this is Tamil and Hindu culture based. I have not found anything to the contrary in my reading and studies.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக