சனி, 23 ஜூலை, 2011

சீவக சிந்தாமணி: கோடிக் கோடும் கூம்புயர் நாவாய்

சீவக சிந்தாமணி

இப்போது சீவக சிந்தாமணிச் செய்யுளொன்றைப் படித்து மனம் மகிழ்வோம்.

கோடிக் கோடும் கூம்புயர் நாவாய் நெடுமாடம்
கோடிப் பட்டிற் கொள்கொடி கூடப் புனைவாரும்
கோடித் தானைக் கொற்றவற் காணபான் இழைமின்னக்
கோடிச் செம்பொற் கொம்பரின் முன் முன்தொழுவாரும்
2321.

இது காட்சி வரணனை ஆகும். மாடம் புனையப்பெறுதலையும் மன்னன் வணங்கப்படுதலையும் வரணிக்கிறது,

மேற்படிப் பாடலின் பொருளைச் சற்று நுணுகி ஆராய்வோம்.

கோள் = கோள்களால் ; திக்கு = திசை அறிந்து; ஓடும் = செலுத்தப்-
படுகின்ற; கூம்புயர் = உயர்ந்த பாய்மரங்களையுடைய; நாவாய் =
மரக்கலம் (கப்பல்); நெடுமாடம் = நெடிய மாடிகளையுடைய கட்டிடங்கள்; கோடிப் பட்டில் = புதிய பட்டுத் துணிகளால்; கொள்கொடி கூடப் புனைவாரும் =கொள்ளும்படியாக கொடிகள் சேரப் புனைவாரும்; கோடித் தானை = எண்ணற்ற மறவர்கள் பணியாற்றும் சேனையை உடைய; கொற்றவற் காண்பான் = மன்னர்பிரானைக் காண்பதற்கு் ; இழை மின்ன = தம் உடைகளும் அவற்றின்மேல் பதித்திருப்பவையும் ஒளிவீச; கோடி = வளைந்து; செம்பொன் கொம்பரின் = செம்பொன்னால் ஆன கொம்பு போலும்; முன் = திருமுன்பு; முன்= முந்திக்கொண்டு; தொழுவாரும் = வணங்குவாரும் என்றவாறு.

குறிப்பு :-

கொள்ளும்படியாக எனில், நிறைவும் அழகும் அவண் அமையும் படியாக என்க. "வாளி கொள்ளுமளவு தண்ணீர் பிடி" என்ற வழக்கு நோக்கின், கொள்ளுதல் - உள் நிறைதல் என்ப தறியலாம். "கொள்கலன்" என்ற சொல்லமைப்பும் காணவும்.

கொம்பர் = கொம்பு, மரக்கொம்பு.



மேல் நாம் பார்த்த சீவக சிந்தாமணிப் பாடலின் பயன்படுத்தப் பட்டுள்ள சொற்களின் பொருள் புரிந்திருக்கும். அதைக்கொண்டு பாடலின் முழுப்பொருளையும் அறிந்துகொள்ளலா-
ம். இன்னும் மலைப்பாக இருந்தால், சிறு விளக்கத்தின் மூலம் அதைச் சரிசெய்து கொள்ளலாமே.

முதல்வரியில் உள்ள "கோடிக் கோடும்" என்பதை கோள்+திக்கு +ஓடும் என்று பிரிக்க வேண்டும். பிரித்து, "கோள்களினால் திசையறிந்து மாலுமி செலுத்தும்" என்று விரிக்கவேண்டும். கூம்பு என்றது பாய்கட்டிய மரத்தை. இடையில் விரிந்து மேல்
நுனியில் குறுகிக் கூராக நிற்கின்ற காரணத்தால். உயரம் உடையதனால் "கூம்புயர்" எனப்பட்டது. அத்தகைய நாவாயில் ( மரக்கலத்தில்) கொணரப்பட்ட பட்டுத் துணிகளைப்பற்றி-
ய செய்தி, அடுத்த வரியில் தொடர்கிறது. பட்டுத் துணிகளால் சிறு அலங்காரக் கொடிகள் செய்யப்பட்டு, அவற்றால் நெடிய மாடம் புனைவு (அழகு ) செய்யப்படுகிறது. புதுப் பட்டினை நாவயில் கொணர்ந்து நெடிய மாடத்தை அழகு செய்கின்றனர். இப்போது முதலிரண்டு வரிகளும் மிகவும் தெளிவாகியிருக்கும். இந்த நெடுமாடம் சீவகனின் அரண்மனை
அல்லது அதன் ஒரு பகுதி. இரண்டாம் வரியில் உள்ள "கோடி" புதுத் துணியைக் குறிக்கிறது.

"இன்னா வைகல் வாரா முன்னே ......"

கடல் உடுத்த நிலம் அல்லது கடல் உடுத்த நிலமடந்தை என்பது தமிழ்ப் புலவர்கள் இயற்கையை வியந்து பாடுங்கால் வருந் தொடர்கள்.

சுந்தரனார் தம் பாடலில் " நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்று பாடுகின்றார் அல்லரோ?

புறம் ௩௯௩-லும் இந்த அழகிய தொடர் வருகின்றது.

"இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்" என்று தொடங்குகிறது அப்பாடல்.

நிலம்தான் கடலைத் தனக்கு உடைபோல் உடுத்திக் கொண்டுள்ளது என்பார் புலவர்.

பலர் என்று சொல்லவருமிடத்தில் "இடுதிரை மணலிலும் பலர்" என்கிறார். மணலை எண்ண முடியாது அன்றோ?

சாவா மனிதன் எங்குள்ளான்? " வீயாது உடம்போடு நின்ற உயிரும் இல்லை" என்கிறார். அவதார புருடர்களும் மறைந்துவிடுகின்றனர், அந்தோ!

"இன்னா வைகல் வாரா முன்னே
செய் நீ முன்னிய வினையே!"

மரணம் எனும் துன்பம் வருமுன், நன்மையைச் செய்துவிடு என்கிறது புறநானூறு.

அதுவே தமிழன் பண்பாடு ஆகும்.

"363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!
பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார்
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி


இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித், தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை ! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு.
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலாஅ அவிப் புழுக்கல்
கைக் கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலங்கல னாக, இலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.


வைகல் = நாள்.

புறநானூறு "நெடும்பல்லியத்தனார்" பாடல் (64.)

சங்கப் புலவரிற் சிலர், பல்வேறு வாத்தியங்கள் வாசிக்கும் திறமுடையோராக விருந்தனர். அத்தகைய ஒரு புலவரே "நெடும்பல்லியத்தனார்". இயம் என்ற பழந்தமிழ்ச்சொல், வாத்தியத்தைக் குறிப்பது. மணவிழாக்கள் போன்றவற்றில் வாழ்த்தி இசைக்கப்படுவது : வாழ்த்தியம்> வாத்தியம். பல்வேறு இயங்கள் இயக்கப்படின், அது பல்லியம் ஆகும். பல்+ இயம் = பல்லியம். பல்+இயம்+அத்து +அன்+ஆர் = பல்லியத்தனார். அத்து என்பது சாரியை. அன், ஆர் என்பன விகுதிகள்.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை பல்லியத்தனார் பாடியுள்ளார். வா! நம் கோமான் வழுதியைக் கண்டுவரலாம்....என்று விறலியை அழைக்கின்றது இப்பாடல். தண்ணீரும் கஞ்சியும் உண்டு வாழும் இவ் ஏழை வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிடுவோம்.
உன் வாத்தியக் கருவிகளை மூட்டை கட்டிக்கொள். வா
என்கிறார் புலவர்.
விறலியின் ஏழ்மை, அவள் அணிந்துள்ள ஒன்றிரண்டு வளையல்களினால் நன்கு புலப்படுகின்றதே! "சில் வளை விறலி!" என்று விளிக்கின்றார் புலவர்.

புற நானூறு: பாடல் 64.

இனிப் பாடலைப் பார்ப்போம்.

"நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி
செல்லாமோதில் சில்வளை விறலி
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்ப
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமான் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே."

யாழ் சிறந்த இசைக்கருவியாதலின், " நல்யாழ் " எனப்பட்டது. ஆகுளி என்பது ஒரு சிறிய பறை. துயர நிகழ்வுகளின்போது வாசிக்கப்பட்டது போலும். (ஆகுலித்தல் = துயர்ப்படுதல் லி >ளி )
பதலை = ஒரு புறமே வாசிக்கப்படும் ஒரு பெரிய பறை. செல்லாமோ தில் = விழைந்து போகமாட்டாமோ?

களிறு+ கணம் = களிற்றுக்கணம்.களிறு = யானை. கணம் = படைப்பிரிவு, பொருத = போரிட்ட. கண்ணகன் = இடமகன்ற. பறந்தலை - போர்க்களம். விசும்பு = ஆகாயம். ஆடு = பறக்கின்ற. எருவை = பறவை; கழுகுகள். பசுந்தடி = பச்சை ஊன் அல்லது தசை. பகைப்புலம் மரீஇய = பகைவரை வீழ்த்திப்பெருவெற்றி பெற்ற. தகைப் பெருஞ் சிறப்பின் = தக்க உயரிய சிறப்பிற்குரிய. குடுமிக் கோமான் - முதுகுடுமிப் பெருவழுதியை; கண்டு = சென்று சந்தித்து ; நெடுநீர் புற்கை = உண்ணும் நீரும் கஞ்சியும்; நீத்தனம் = இனிமேல் நீக்கிவிடுவோம் ; வரற்கே = வருவதற்கே.