சனி, 23 ஜூலை, 2011

சீவக சிந்தாமணி: கோடிக் கோடும் கூம்புயர் நாவாய்

சீவக சிந்தாமணி

இப்போது சீவக சிந்தாமணிச் செய்யுளொன்றைப் படித்து மனம் மகிழ்வோம்.

கோடிக் கோடும் கூம்புயர் நாவாய் நெடுமாடம்
கோடிப் பட்டிற் கொள்கொடி கூடப் புனைவாரும்
கோடித் தானைக் கொற்றவற் காணபான் இழைமின்னக்
கோடிச் செம்பொற் கொம்பரின் முன் முன்தொழுவாரும்
2321.

இது காட்சி வரணனை ஆகும். மாடம் புனையப்பெறுதலையும் மன்னன் வணங்கப்படுதலையும் வரணிக்கிறது,

மேற்படிப் பாடலின் பொருளைச் சற்று நுணுகி ஆராய்வோம்.

கோள் = கோள்களால் ; திக்கு = திசை அறிந்து; ஓடும் = செலுத்தப்-
படுகின்ற; கூம்புயர் = உயர்ந்த பாய்மரங்களையுடைய; நாவாய் =
மரக்கலம் (கப்பல்); நெடுமாடம் = நெடிய மாடிகளையுடைய கட்டிடங்கள்; கோடிப் பட்டில் = புதிய பட்டுத் துணிகளால்; கொள்கொடி கூடப் புனைவாரும் =கொள்ளும்படியாக கொடிகள் சேரப் புனைவாரும்; கோடித் தானை = எண்ணற்ற மறவர்கள் பணியாற்றும் சேனையை உடைய; கொற்றவற் காண்பான் = மன்னர்பிரானைக் காண்பதற்கு் ; இழை மின்ன = தம் உடைகளும் அவற்றின்மேல் பதித்திருப்பவையும் ஒளிவீச; கோடி = வளைந்து; செம்பொன் கொம்பரின் = செம்பொன்னால் ஆன கொம்பு போலும்; முன் = திருமுன்பு; முன்= முந்திக்கொண்டு; தொழுவாரும் = வணங்குவாரும் என்றவாறு.

குறிப்பு :-

கொள்ளும்படியாக எனில், நிறைவும் அழகும் அவண் அமையும் படியாக என்க. "வாளி கொள்ளுமளவு தண்ணீர் பிடி" என்ற வழக்கு நோக்கின், கொள்ளுதல் - உள் நிறைதல் என்ப தறியலாம். "கொள்கலன்" என்ற சொல்லமைப்பும் காணவும்.

கொம்பர் = கொம்பு, மரக்கொம்பு.



மேல் நாம் பார்த்த சீவக சிந்தாமணிப் பாடலின் பயன்படுத்தப் பட்டுள்ள சொற்களின் பொருள் புரிந்திருக்கும். அதைக்கொண்டு பாடலின் முழுப்பொருளையும் அறிந்துகொள்ளலா-
ம். இன்னும் மலைப்பாக இருந்தால், சிறு விளக்கத்தின் மூலம் அதைச் சரிசெய்து கொள்ளலாமே.

முதல்வரியில் உள்ள "கோடிக் கோடும்" என்பதை கோள்+திக்கு +ஓடும் என்று பிரிக்க வேண்டும். பிரித்து, "கோள்களினால் திசையறிந்து மாலுமி செலுத்தும்" என்று விரிக்கவேண்டும். கூம்பு என்றது பாய்கட்டிய மரத்தை. இடையில் விரிந்து மேல்
நுனியில் குறுகிக் கூராக நிற்கின்ற காரணத்தால். உயரம் உடையதனால் "கூம்புயர்" எனப்பட்டது. அத்தகைய நாவாயில் ( மரக்கலத்தில்) கொணரப்பட்ட பட்டுத் துணிகளைப்பற்றி-
ய செய்தி, அடுத்த வரியில் தொடர்கிறது. பட்டுத் துணிகளால் சிறு அலங்காரக் கொடிகள் செய்யப்பட்டு, அவற்றால் நெடிய மாடம் புனைவு (அழகு ) செய்யப்படுகிறது. புதுப் பட்டினை நாவயில் கொணர்ந்து நெடிய மாடத்தை அழகு செய்கின்றனர். இப்போது முதலிரண்டு வரிகளும் மிகவும் தெளிவாகியிருக்கும். இந்த நெடுமாடம் சீவகனின் அரண்மனை
அல்லது அதன் ஒரு பகுதி. இரண்டாம் வரியில் உள்ள "கோடி" புதுத் துணியைக் குறிக்கிறது.

கருத்துகள் இல்லை: