சனி, 23 ஜூலை, 2011

புறநானூறு: மோசியாரின் அழகிய பாடல்

.

மெல்லியல் விறலி நல்லிசை செவியிற்
கேட்பின் அல்லது காண்பறி யலையே
காண்டல் வேண்டினை யாயின் மாண்ட நின்
விரைவளர் கூந்தல் வரை வளி உளரக்
கலவ மஞ்ஞையிற் காண்வர இயலி
மாரி அன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே. புறநானூறு:133

வள்ளல்களில் ஒருவனாகிய புகழ் மிக்க ஆய் அண்டிரனை சங்கப் புலவர் முடமோசியார் பாடியது. பாடாண் திணை.
விறலியாற்றுப்படை.

விறலியே! ஆய் அண்டிரனின் வள்ளன்மைப் புகழ் அவன் ஆள்கின்ற மலையையும் கடந்து, யாங்கணும் வீசிக்கொண்டிருக்கிறதே! நீ அவ் வள்ளலின் புகழை மட்டுமே கேட்டிருக்கிறாய். அவனை நேரில் பார்த்ததில்லைதானே.... காணவேண்டுமெனில் உன் கூந்தல் அவன் மலையில் வீசும் மாருதத்தினால் மயிற்பீலி போலும் அலைவுறும்படியாக நடந்துசென்று அவனைக்காண்க!
.அவன் மழைபோலும் வாரி வழங்குபவன். தேர்(பல) உடையவன். செல்வாயாக.

11.

சங்கப் புலவர் மோசியார், பெண்ணியம் போற்றுபவர், பெண்டிருக்கு மதிப்பளிப்பவர் என்பது அவர் பாடலில் நன்கு தெரிகிறது. வெறுமனே "விறலியே" என்னாமல் "மெல்லியல் விறலி(யே) " என்று விளிக்கின்றார். மெல்லியல், மெல்லியலார் என்பது இவ் விருபத்தொன்றாம் நூற்றாண்டின் சொற்புழக்கம் (பதப்பிரயோகம்) என்று நீங்கள் நினைத்திருந்தால், அந்தக் கருத்தை இப்போது மாற்றிக்கொண்டுவிடுங்கள். சங்க
காலத்திலேயே அந்தச் சொல்லாட்சி இருந்தது. வேறு ஓர் ஆண்மகனை ஆற்றுப்படுத்தாமல் ஒரு பெண்ணை ஆற்றுப்படுத்தும் துறையில் பாடலை யமைத்ததும் கருதத்தக்கது.

ஆய் அண்டிரனின் மலையில் இனிய மென்காற்று வீசிக்கொண்டிருக்கும். அதிலே நெடிய முடியுடைய பெண் விரைந்து நடப்பதென்றால் அம் முடி கலைந்து காற்றில் பறக்கும், "அவள் ஒப்பனை கலைந்து, அழகு குறையும்" என்று மோசியார் சொல்லவில்லை. மாறாக, முடி காற்றில் பரப்பிக்கொண்டு பறக்க, கலாப மயில் ஒன்று "மலைத்தென்றலில்" தோகை விரித்து நடந்ததுபோல நீ நடந்து செல் என்று சொல்வதிலிருந்து அவள் செல்லும்போதே அழகு மிகுந்து, காண்பாரும் மகிழ்வெய்தும் காட்சியாகுமென்கின்றார்,

இவ் விறலி, மோசியாருக்கு முன்னமே அறிமுகம் ஆனவளா என்று தெரியவில்லை. விரை வளர் கூந்தல் என்பதை. விரை = வாசனை யுள்ள; வளர் கூந்தல் =' வளர்ந்து கொண்டிருக்கிற கூந்தல்' என்னலாம். அங்ஙனமாயின், முன் சற்று நீட்டம் குறைந்திருந்து, இப்போது வளர்ந்துவிட்ட கூந்தல் என்றும் கொள்ளலாம்; "விரைவளர்" என்று எடுத்துக்கொண்டு, "வாசனை மிகுந்த" என்றும் கொள்்ளலாம். எங்ஙனமாயினும், அம் மலைக்காற்றில் கூந்தலின் நறு்மணம் பரவி மற்றோரை இன்புறுத்தியது என்பதே மோசியார் தரும் சொற்சித்திரம்.

கருத்துகள் இல்லை: