ஞாயிறு, 21 நவம்பர், 2010

இறையின்பம்

தனித்தலையாய் இறையின்பம் தினைத்துணையே நன்மை!
பனித்தூய்மை அடியரொடும் இனித்திடுமா றாழ்ந்து
நினைத்தமர்ந்து நிலைப்படுத்தி நிறைவினையே காணல்
அனைத்துலக அடியவரும் பனைத்துணையென் றேற்பர்.


இதன் பொருள்:

தனித்தலையாய் = தானே தனியராய்; இறையின்பம் = இறைவன் பால் பத்தி (பக்தி) கொண்டு அவனை நாடிச்சென்று இன்புறுவது;
தினைத்துணையே நன்மை! = சிறிதளவே நன்மை தருவதாகும்;

பனித்தூய்மை அடியரொடும் = பனியைப் போல தூயவரான அடியார்களுடன், இனித்திடுமாறு =இன்பம் உண்டாகுமாறு ; ஆழ்ந்து நினைத்து = தியானம் செய்து;
அமர்ந்து நிலைப்படுத்தி = உட்கார்ந்து மனத்தை நிலைப்படுத்தி; நிறைவினையே காணல் = அத்தியானத்தின் வெற்றியைக் காணுவது;
அனைத்துலக அடியவரும் = ஏனை மதங்களின் அடியார்களும் பனைத்துணையென் றேற்பர். =பெருநன்மை பயப்பது என்று ஏற்றுக்கொள்வர்.,கூட்டு முயற்சி ஆதலினாலே. என்றவாறு.

வெள்ளி, 19 நவம்பர், 2010

புரட்சிக்குத் தயாராகுங்கள்.

புரட்சிக்குத் தயாராகுங்கள்.


எரிமலை வெடித்துச் சீறி
வெளியெங்கும் குழம்பைத் துப்பிச்
சரிவுற மனைக்குள் ஏறச்
சாய்ந்தன மரங்கள் பக்கல்;
உரியதும் யாதோ இந்த
உலகினில் மக்கள் செய்தற்கு?
அரியதைச் செய்வோம் செவ்வாய்
அங்குசென் றொளிந்து கொள்வாம்!

நீரொடு நிலமும் உண்டு
நெஞ்சுக்கு வளியும் உண்டாம்
ஓரிரு திங்கள் நின்றே
ஓய்ந்தபின் திரும்பி வந்தால்
ஊரினில் புதுமை செய்வோம்!
ஒன்றுக்கும் கவலை வேண்டாம்
யாருடன் வருவீர் இங்கே
யாமினிப் புரட்சி செய்வோம்.

செவ்வாய், 16 நவம்பர், 2010

கெட்டவர்யார் ?

எதிரியென்று யாரைச்சொல்வோம் -- இன்றே
எதிரியென்பார் நாளை உதவுநண்பர்;

உதறி எவர் தம்மைவிடுப்போம் --இந்த
உலகத்தில் என்றும் கெட்டவர்யார் ?