கோதைகண் ஊடொளி விழிக்க உலகம்
வாதையறு அங்கைநீர் தழுவிடக் கூதை
இதழ்வாய் அணைக்கும் மழையில்
அதழில் பனித்துளி ஆழ்கடல் நுரைத்ததே.
ஊடொளி விழிக்க : ஆசிரியத் தளை.
வாதையறு : இது கனிச்சீர் ஆகலாம். அதாவது வஞ்சிப்பாவுக்குரியது. இதற்கு விதிவிலக்கு கூறி கவிஞனைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. அதாவது... (எல்லாம் சொல்லிவிட்டால் எப்படி? நிற்க).
வாதையறு அங்கைநீர : விதிவிலக்குக் கூறி ஏற்கப்பட்டால் வெண்டளை ஆகலாம். ஏற்கப்படாவிடின் வஞ்சி. ( பிறகு சொல்கிறேன் ).
அங்கைநீர் தழுவிடக் : இது கலித்தளை. இதற்கு விதிவிலக்கு கூறி ஏற்கப்படுமாயின், ஆசிரியத்தளை.
ஆழ்கடல் நுரைத்ததே: ஆசிரியத்தளை.
இவ்வளவு இடர்ப்பாடுகளும் உள்ளன....தொடர்ந்து உரையாடுவோம்.
கோதை - முடி கோதுவதால் பெண்ணிற்கு ஏற்பட்ட பெயர். கோதாவரி ஆற்றின் குறுக்கப்பெயராகவும்் வரும்.
கோதி வாரிக்கொள்வதால் - ்க்கொளவதால்் கோது வாரி : கோதாவாரி > கோதாவரி என்றாகி யிருக்கலாம்.
இந்தச் சொல்லை நினைவூட்டியமைக்கு நன்றி.
கோதை+ வாரி = கோதாவரி என்றுமாம். வாரி - ஆறு என்றும் பொருள்படும்.
கோதி வாரிக்கொள்பவள் பெண். கோதாமல் வாரிச் செல்வது அந்த ஆறு. ??
நீங்கள் போட்டிருந்த சொற்களையே கூடுமான வரை வைத்துக்கொண்டு இப்படி மாற்றலாம்.
கோதைகண் ஊடொளியால் இவ்வுலகு வெட்டமுற
வாதை யிலாஅங்கை் நீர்கழுவ --- கூதை
அதழில் பனிநீர் நுரைகடலாய் ஆழ்ந்தே
இதழ்வாய் அணைக்கும் மழை.
வெட்டம் = வெளிச்சம்;
உங்கள் கருத்து இந்த வரிகளில் உள்ளதா? இல்லையென்றால் எங்கெங்கு மாறிவிட்டது? காலையில் அடித்த மழை நீ என்னைத் தழுவியதால் என்ற கருத்து "இதழ்வாய் அணைக்கும் மழை" என்பதில் தொனிக்கிறதா?
உங்களுக்கு மன நிறைவானால் சரி, இல்லையென்றால் மேலும் மாற்றுவோம்.
இப்போது, இப்பாடலின் முதல்வரியை மோனை பெய்து எப்படி அழகுபடுத்தலாம் என்று பார்ப்போம்.
கூ என்ற ஓரெழுத்துச் சொல்லுக்கு பூமி அல்லது மண் என்ற பொருளும் உள்ளது.
"கோதைகண் ணூடொளியால் கூதெளிந்து வெட்டமுற"
என்று மாற்றுவோம்.
கோ - கூ மோனை.
அது மட்டுமின்றி, 'கோதை' - 'கூதெ' என வந்து, அடியெதுகை போன்றதோர் அழகு அவ்வரிக்கு ஏற்படும்.
நிற்க.
வெட்டம் என்ற சொல் நேயர்கள் அறிந்த சொல்லேயாம். "வெட்டவெளிச்சம்" என்ற சொற்றொடரில் அது ஒளிந்துகொண்டிருக்கிறது. வெட்டமென்ற சொல், மலையாள மொழியிலும் வழங்குவதே. அது பழந்தமிழ்ச் சொல்.
"வாதை யிலாஅங்கை் நீர்கழுவ --- கூதை"
இந்த இரண்டாம் வரிக்கு ஒரு மோனை அழகு கொடுப்போம்.
வாதை இலாஅங்கை வாரிதழால் --- கூதை
ஆகவே வாதை - வாரி என மோனை வருகிறது.
தழால் - தழுவல்.
இதையே:
வாதை இலாஅங்கை வாரிதழீஇ - கோதை
தழீஇ - தழுவி. (பழந்தமிழ் வழக்கு).
வாரி என்பதற்கு நீர், நீர்வடிகால், ஆறு, கடல் என்று பலபொருள் உள.
கொழும்பு நகர்சென்று கூரையின் கீழ்வீழ்ந்து
எழும்ப முடியா தினும்தூங்கும் வெங்காவே
நீங்கள் வரும்வரை நேரிய பாடலொன்று
ஈங்குத் தருவேன் இனி.
இக்குறள் ஏனையோர்க்கு:-
"துறந்தார்க்குத் தொல்லையொன் றில்லை; உலகில்
சிறந்தாரோ அத்தன்மை யால்?"
பாவம்நம் வெங்கா பலநாள் மறைந்திருப்பார்
ஏவப் பிறரின்றி இங்குறுவார் --- நாவிலே
நற்றமிழ் மிக்கொழுக நாலிரண்டு சொற்றவழ
மற்றும்போய் மீள்வார் மறைந்து.
கொடுமைக் கெதிர்நின்றான் கொன்றொழிக்கும் போரில்
அடிமைப் படேனென்றே அன்றுமின்றும் அல்லல்
படுகின்ற நற்றமிழன் பட்டதெலாம் போதும்
நடுநின்று நல்லுலகே நாடு.
நீங்கள் பயன்படுத்திய சொற்களைக் கூடுமானவரை உள்ளடக்கி:-
யாப்பும் அறியேன் தமிழின் இலக்கணம்
யாதும் அறியேன் பிழையெனினும்-- தோதாய்த்
தமிழன் எனப்பிறந்த தண்தவமே எண்ணிப்
புனைந்திடுவேன் பாக்கள் பல !
மேற்கண்ட பாட்டில், எதுகை ( ) தேவைப்படும். "யாப்பும்" : "யாதும்" - மோனையாகவும் ஓரளவு மாத்திரை ஒத்தும், பும் - தும் என்று ஒண்றியும் வருதலால் எதுகை என்று
ஏற்கலாம். தமிழன் - புனைந்திடுவேன் எதுகை வரவில்லை. மற்றபடி சரி.
சற்று வேறுவிதமாக:-
யாப்பறியேன் இன்பத் தமிழ்கூறு இலக்கணத்தின்
காப்பறியேன் யாதும் கசடேனும் -- ஏற்பீர்,
தமிழன் எனப்பிறந்த தக்கதவம் எண்ணி
அமைப்பேன் அரும்பா பல.
இலக்கணம் மொழி காப்பது ஆதலின் காப்பு எனப்பட்டது.
அரும்பா என்பது அரிய பாக்கள் என்றும் அரும்பாத என்றும் இரு பொருள்படும். என்றாலும் இங்கு பாடலைத்தான் குறிக்கிறது.
மகிழ்வுடன் புனைக!!