சனி, 24 ஜனவரி, 2026

பிரளயம் இது பிறழ் வினையிலிருந்து.

 பிரளயம் என்ற சொல் சமஸ்கிருதமா?

பிரளயம் என்பது இயற்கை நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு, அழிவும் ஏற்படுவது ஆகும்.  பிரளயங்களில்,  தினப்பிரளயம் என்பது பிரம்மனின் ஆயுளில் ஒரு நாளின் முடிவில் ஏற்படுவது  ஆகும். தினந்தோறும் நிகழ்வதால் நித்தியப்பிரளயம் என்றும் கூறப்படுவதாகும். நைமித்திகப் பிரளயம் என்பது பகல் முடிந்ததும் நிகழ்வது.  அவனது வயதில் நூறாண்டுகட்கு ஒருமுறை ஏற்பட்டால் பிர்மப்பிரளயம் எனப்படும். அழிவுகள் ஏற்படும் முறைகளை அறிந்துகொள்ள மனிதன் முற்பட்டது மிக்கப் பாராட்டுக்குரியது என்று சொல்வோம்.  நமது பண்டை மக்கள், ஆய்வு மனப்பான்மை உடையவர்களாய் இருந்து இப்படிச்  சொற்களைப் படைத்திருப்பது நமக்கும் ஒருவழிகாட்டுதல் என்றே கருதவேண்டும்.

தற்போது நடைபெற்றுவரும் ஆய்வுகளில் முற்செலவை  இம்முறை கைக்கொண்டு அவற்றுக்குரிய சொற்களைப் படைக்கும் திறத்தை நாம் பெறுவது நிகழ்தல்,  இன்றியமையாது வேண்டப்படுவதென்க.

பின்றுதல் என்ற வினைச்சொல் பின் என்பதிலிருந்து வருகிறது. பின்றுதல் என்பதற்கும் பிறழ்தல் என்பதற்கும் பொருண்மைத் தொடர்பு மிக்குள்ளது என்று அறிக, உன் செலவுகள் பின்றாமல் பேணிக்கொள் என்றால் ''பிறழாமல் பேணிக்கொள்''  என்று பொருள்.

பிறழ்தல் என்பது புரள்தல் என்றும் வருவதுதான்.  இது பேச்சுவழக்கில் நன்கு வழங்குகிறது என்பது நீங்கள் அறிந்தது ஆகும்.

பிறழ் என்பது பிரள்(தல்) என்று மாகும்.   பிரளயம் என்ற சொல்,  பின் காட்டிய சொல்லினின்று வந்தது ஆகும்.  பிறழயம் என்று வருதல் இல்லை யாதலால்,  பிறழ் என்பது பிரள் என்று மாறிய பின்பே பிரளயம் என்ற சொல் உருவாகும் என்பதை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 19 ஜனவரி, 2026

புராணம் என்பதென்ன

 புராணம் என்பதென்ன என்று வினவிக்கொள்கிறோம். இதற்கு நாம் கண்டுபிடிக்கும் விடையிலிருந்து  புராணம் என்ற சொல்லுக்கு  அந்தச் சொல் புனைந்த காலத்தில் என்ன பொருளில் வழங்கியது என்று அறிந்துகொள்வோம்.

ஓர் இறைக்கதையை எடுத்துச் சொல்கிறவன்,  உரிய நிகழ்வினைக் கேட்டறிந்து கூறுகிறவனாகில், தான் அறியாமற் கழிந்தவை போக எஞ்சியவற்றைக் காதில் வாங்கிக்கொண்டு,  அந்தக் கதையைப் புனைந்து உரைப்பவனாகிறான்.  

புனைதல் என்பதென்ன?  புனையரணம் புராணம்.இந்தச் சொல்,  னை என்னுமெழுத்தும் யகரமும்  கெட்ட ( அல்லது நீக்கப்பட்ட) சொல்லாகும்.  இந்தச் சொல்லும் புனைவுச்சொல்லே. அல்லது தானே மக்களிடம் திரிந்த சொல்லெனினும் அதுவும் கூடுவதே. பு(னைய)ரணம்>> புரணம்>  புராணம்  ஆனது.  இது இரண்டு எழுத்துக்கள் மறைந்த இடைக்குறைச் சொல். எழுத்துக்கள் வேண்டுமென்றே விடுக்கப்பட்டிருந்தால் அதனைத் தொகை என்பர்.  மூவுழக்காழாக்குத் தினைதந்தாள் என்றதை மூழாக்காழாக்கு  என்று திரித்தால், அது தொகை ஆகும். இவ்வாறு சொல்லின் முழுமையும் அறிந்தோர் தமிழரே. பிறர் சொற்பர் ஆவர்.

இனி இன்னொரு பிறப்பும் இச்சொல்லுக்குக் கூறலாம்.  இலக்கியத்தை, கவிதையை, இறைவரலாற்றை, நடந்தனவற்றை உள்ளபடி காத்து வைப்பதற்கு ஆனவற்றை  எழுதிவைக்க ,  புர+ அணம் >  புராணம் என்று சொல்லமைந்தது என்னில்,  அதுவும் கூடுவதே.  

இச்சொல்லை முன்னரே  ஆய்ந்தோ ஆயாமலோ, அமைப்புக் கூறினவர்களும் உள்ளனர். அவர்கள் பழையன காத்தல் என்ற பொருளில் புராணம் ஆகும் என்றனர்.  அதையும்  சிந்தித்துக்கொண்டால்,  இச்சொல் ஒரு பலபிறப்பி என்று கொள்ளவேண்டும். பிற கூறினோரும் உளர். அவற்றை அவர்தம் நூலிற் காண்க.

புராணம் என்றால் பழமையானது, பொய்யுரை என்ற பொருளில் இங்கு எதுவும் கூறப்படவில்லை என்பதறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



வெள்ளி, 16 ஜனவரி, 2026

மூலியம், மூலிகை ( அவன் மூலியமாய்....) சிறு அலசல்.


கதிர்வேலுப் பிள்ளை என்பவர் ஒரு சிறந்த அகரவரிசைத் தொகுப்பாளர். அவரை நினைவு கூர்வோம்.

========================================================================
தமிழர் நாகரிகத்தின் பழமையான சான்றுகள் இப்போது தமிழ்நாட்டில் அகழ்வாய்வின் மூலமாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

சொல்:  முல் > முன்.  சொல்லாக்கங்கள்:

முல் >  முலை  (முன்னிருப்பது)

முல் > முன் ( லகர னகரப் போலி)  

முன் >  முனை ( முன்னிருப்பது). 


சொல்லின் முதல் நீளுதல்:

முல் >  மூல் > மூலம்.    மூலம் என்பதில்  அம் விகுதி வந்தது.  பழு> பழம் என்பது போலும்.

மூல் >  மூலிகை.  ( இ, கை).

மூல் > மூலியம் ( பேச்சு வழக்குச் சொல்). வழக்கு என்றால் பயன்பாடு.

(மூலியம் -  வழியாக, மூலமாக என்று பயன்பாட்டுப் பொருள்)

இது பலபொருட் சொல்.  through, means, price, payment  (see dictionary). etc.

மூலிகன் -  செடி. ( தவசி).

இப்போது மூலிகை என்ற சொல் மட்டும் வழங்குகிறது.  மூலிக்கை என்ற சொல்லும் உள்ளது. இது மருந்து மூலிகைகளைக் குறிப்பது.

மூல்+ இ+ அம் என்பவற்றில் இ - இடைநிலை, அம் - இறுதிநிலை;  இறுதிநிலையாவது விகுதி.   மிகுதி =  விகுதி  ( மி - வி  திரிபு).

விகு - விகுத்தல் என்ற சொல் இருக்கலாம் என்றாலும் பழைய நூல்களிக் கண்டுபிடிக்க முடியவில்லை.  விஞ்சு > < மிஞ்சு திரிபு எனில் அமையும்.

வியாழன், 15 ஜனவரி, 2026

அகஸ்துமாத்து, அல்லது அகஸ்மாத்து

 காரணம் இல்லாமல்  என்பதை அகஸ்துமாத்தாக அல்லது அகஸ்மாத்தாக  என்பர்.

ஒரு காரணம் என்பது  எப்போதும் மனத்தில் இருப்பது.  அந்தக் காரணத்தை,  காரியத்தைச் செய்பவன் அல்லது காரியத்தினால் பாதிப்புற்றவன் வெளியில் சொன்னால்தான் பிறரும் அதை அறிந்துகொள்ளவேண்டிவரும்.  நடப்பிலிருந்து ஊகித்துக் கொள்வதாய் இருந்தாலும் ஊகித்தவன் வெளியிட்டாலன்றி பிறர் அறிதல் கடினம்தான்.

இந்தச் சொல்லில் மாற்று என்பது  மாத்து என்று வந்தது,  மக்கள் பயன்படுத்தும் முறையில் சொல்லமைந்ததைக் காட்டுகிறது. காரணம் இருக்கும் என்னும் மனத்தினருக்கு அதற்கு மாறாக சம்பவம் நடந்ததையே இது காட்டுகிறது.

அகத்து -  உள்ளமைந்த காரணம் உண்டென்று எதிர்பார்ப்பவருக்கு,  மாத்து =  மாற்றமாக  ( நடந்தது  என்பது_.

அகத்து என்பதே அகஸ்து என்று வந்துள்ளது. பேச்சுத் திரிபு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

துவைத்தல் ஏசுதல் இரண்டையும் வைத்து ஒரு சொல் புனையமுடியுமா?

 சொல்புனை  பயிற்சி ஒன்றை இப்போது நடாத்தி, தமிழை மேலும் அறிந்துகொள்வோம்.

துவைத்தல் என்பதொரு சொல். இதைச் சொன்னவுடன் துணியைத்  துவைத்தலென்பதே நினைவுக்கு வருகிறது.  இந்தச் சொல் ஒலி எழுப்புதல் என்பதையும் குறிக்கும்.   ஒலி எழுப்புதலைக் குறிக்க மட்டும்  ஐம்பதுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. அவற்றுடன் துவைத்தல் என்பதும் சேர்ந்து தமிழ் வளம் காட்டுகின்றது. உலகில் மிகப் பழைய மொழி,  உலகின் மிக்கச் செழுமையான மொழி என்பதில் எந்த ஐயப்படுமில்லை.

ஒலித்தல் - அரற்றல், அரம்பல், அலறல், அழுங்கல், அர்த்தல், ஆலல், இசைத் தல், இடுத்தல், இமிர்தல், இமிழ்தல், இயம்பல், இரங்கல், இரட்டல், இரைத்தல், இணைத்தல், உறற்றல், உறைத்தல், உலம்பல், உழம்பல், உளைத்தல், ஏங்கல், கதித்தல், கரைதல், கலித்தல், கறங்கல், களைத்தல், குமுறல், குரைத்தல், குளிறல், சலித்தல், சிதைத்தல், சிம்பல், சிரத்துதல், சிலம்பல். சிலும்பல், சிலைத்தல், ஞெள்ளல், தழங்கல் , துவைத்தல், தெவிட்டல், தெழித்தல், தொளித்தல், நரலல், நரற்றல், பயிறல், பிளிறல், பிறங்கல், புலம்பல், முரவல், முரற்றல், முழங்கல், விம்மல்.

மொழியைப் பண்படுத்தி வளமாக்கி வைத்துக்கொள்வதற்கு வேண்டிய அரசியல் நிலைத்தன்மையும் ஆட்சி ஒழுங்கும் தமிழ்மக்களுக்கு இல்லாதிருந்தால் இந்த வளத்தை எட்டிப் பிடித்திருக்க இயலாது.

அரட்டுதல் என்ற சொல் ஒலிஎழுப்புதலுடன் அதை அதிகாரத்துடன் செய்தலையும் குறித்ததால்,  ஆட்சியாளனைக் குறிக்கும் அரசன் என்ற சொல் அதிலிருந்து வந்தது.  அரட்டன் என்பது அரசனுக்குத் தமிழில் பழைய பெயர். அதிலிருந்து உலகின் பல மொழிகளில் அரசனுக்கான பெயர்கள் அமைந்தன. ரெக்ஸ் என்ற இலத்தீன் சொல் இதிலிருந்து வந்தது.   ராணா,  ராணி என்பவையும் இதிலிருந்தே வந்தன.  ராவ் என்ற பட்டப்பெயருக்கும் இதுவே அடிப்படை. ராவ் என்பதும் ராய் என்பதும் இவற்றினின்று புறப்பட்டன.

சரியான தண்டனை போல ஒருவனைப் புடைத்து ஒன்றைத் தெளிவாக்கினால் வெளுத்துக் கட்டிவிட்டார் என்று சொல்வது வழக்கமாய் உள்ளது. துவைத்தல் என்பதும் இப்படி ஒருவனைத் தண்டிப்பது போல் அறிவுறுத்துவதைக் குறிக்கும்.  ஆனால் அத்துடன் அவனை ஏசவும் செய்தால், அதற்கு இன்ன்னொரு சொல் வருகிறது.  துவேசித்தல் என்பது அது.  ஏசித்தல் என்பதை ஏச்சினையும் சேர்ப்பித்துக்கொள்வதைக் குறிக்கும்.  துவை+ ஏசித்தல் > துவேசித்தல் என்ற சொல் இதற்கு வருகிறது..  இச்சொல் சமஸ்கிருத ஒலியமைப்பில் நன்கு ஒளிசெய்கின்றது என்பதைக் காணலாம்.

துவை + ஏசுதல் >  துவை+ ஏசித்தல் > துவேசித்தல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 9 ஜனவரி, 2026

அதிசயம் என்பது தமிழ்?

 அதிசயம் என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்.

பொருள்கள் உலகில் தோற்றமளிப்பது மூலப்பொருள்கள்  அல்லது ஆக்குவதற்குரிய பொருள்கள் இசைந்து அல்லது இணந்து  சிறத்தலாலேதாம்.

தண்ணீரில் தீ எரிவது ஓர் அதிசயம்  ஆகலாம். அது நடைபெறுவதற்கு எவ்வெப் பொருள்கள் சேர்ந்தன அல்லது கலந்தன என்பதே கேள்வி ஆகும்.

அதி + இசை(வு) +  அம் >   அதி + இசை+ அம் >  அதிசயம்  ( திரிபுச்சொல்).

அதி +  சை + அம் >  அதிசயம்  ஆகும்.

அதி இசை என்பதில் உள்ள இகரம்  ஒழிந்தது.

சை என்பது ச என்றானது ஐகாரக் குறுக்கம்.

அதிகம் என்ற சொல்லும் தமிழ்தான்.   அது இகத்தல்  என்றால் அது மீறுதல் அல்லது  கூடுவது.   மிகுதியாவது.  அது இக >  அதிக.

இது குறைச்சொல்லாய்  அதி என்று முன்னொட்டாகும்.   சொற்களிலும் வரும்.

தமிழ் இயன் மொழி.  மிக்கத் திரிசொற்களை  சமஸ்கிருதத்துக்குக் கொடுத்துவிடுவது இயன்மொழிக்கு உயர்வு தரும் என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்தது.  ஆனாலும் தொல்காப்பியர் காலத்திலே திரிசொற்கள் புகுந்துவிட்டன. 

இயற்சொற்கள் மட்டுமே கொண்டு மொழி நடைபெறுமானால் அஃது நல்லதுதான்.  தனித்தமிழ்   இனிமை மேலோங்கும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.


செவ்வாய், 6 ஜனவரி, 2026

குஞ்சு, கிராமம், சமஸ்கிருதத் தொடர்புகள்.

 தலைப்பில் கண்ட ''குஞ்சு''  என்ற சொல்.

ஓரெழுத்து ஒருசொல் என்று யாம் இங்குக் குறிக்க விரும்பும் சொற்கள் பெரும்பாலும் நெடில்  ஆனவை.   வா,  தா , போ முதலிய ஓரெழுத்துச் சொற்கள் இவற்றுள் அடங்கும்.  நாம் குறித்தவை.  நீ என்ற சொல்லும் இத்தகு சொல்லே எனினும், இது வினையன்று.  பதிற்பெயர் ( pronoun )  ஆகும்.  முன்னிலைப் பதிற்பெயர் என்றும் கூறுதற் குரியது இச்சொல். நான் என்பது ஒரு பதிற்பெயர் என்றாலும் இரண்டு எழுத்துக்கள் உண்மையால், அதைத் தனியாகச் சொன்னோம். நான் என்பது இப்போது பேச்சில் மூக்கொலியாக வந்து, ஓரெழுத்துச் சொல் போலவே ஒலிக்கும்.

சங்கதத்தில் பதில் என்பது  தன் இறுதி மெய்யை இழந்து,  பதி என்றாகி,  முதலெழுத்தாகிய ''ப''  என்பது  ''ப்ர''  என்றாகும்.  இறுதியில் ''ப்ரதி''  என்றாகும்.  இதைத் தமிழாக்க விழைந்தால் பிரதி என்னலாம். படி என்பதுதான் ப்ரதி என்றானது என்றும் சொல்வதுண்டு. எனவே ப்ரதி என்ற சங்கதம், சமவொலிச்சொல்.

சங்கதம் அல்லது சமஸ்கிருதம் என்பது சமவொலிச்சொல் என்றால்,  அது ஒரு தனிமொழிச் சொல்  என்பது பொய்மையே. ஆகவே பண்டிருந்தவர்கள், இதை ஒரு வேற்றினத்தவரின் பேச்சு என்று கருதவில்லை. ஒரே இனத்தாரின் வெவ்வேறு வகையான ஒலிப்பு முறை என்று கருதினர் என்பது தெளிவு. ஆகவே சமஸ்கிருதம் எனபது வெளியாரின் மொழி அன்று. அது வெளியாரின் மொழி என்பது வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்தபோது அவிழ்த்துவிட்ட புளுகல். இதை நம்பியே மறைமலையடிகள்,  தேவனேயப் பாவாணர் முதலானோர் தங்கள் வரலாற்று ஓட்டத்து உரைகளை அமைத்திருந்தனர். அப்போது அவர்கள் இருந்த நிலையில் வெள்ளைக்காரன் புளுகிலிருந்து மேலெழுந்து  உரைபகர அவர்களாலும் இயல்வில்லை.  அவர்கள் நிலையில் நாமிருந்திருந்தால் நாமும் அந்தக் கதையில் தான் ஆழ்ந்திருந்திருப்போம்.

ஓரெழுத்து ஒருசொல்,  பல நெடிலானவை.  தனிக்குறில்களும் ஓரெழுத்தாகவே நின்று,  தனிப்பொருள் தரும்.  எடுத்துக்காட்டாக இங்கு கு எனற்பாலதைக் காண்போம்.  கு என்பது குறுக்கம் என்று பொருள்படும்.  கு என்பது சமஒலிச் சொல்லாக ( சங்கதம் அல்லது சமஸ்கிருதம்)  குறுக்கம் என்று கூறினோம் அல்லோமோ?  குக்கிராமம் என்ற சொல்லின் கு என்பது  ஒரு முன்னொட்டாக நின்று '' மிக்கச்சிறிய'' சிற்றூர்  என்று பொருள்படும்.  கிராமம் என்பது பழந்தமிழில் கமம் என்று வரும். கமம் என்பது பல்பொருளொரு சொல். தற்போது கமம் என்பது வேறுசில மொழிகளில் எவ்வாறு வருகிறது என்பதைப் பிற்பாடு கூறுகிறோம்.  கமம் ஒன்றிருந்தால் விளைநிலங்கள் நடந்து சென்றடையும் தொலைவில் அருகிலே இருக்கும். மலாய்மொழியில் கம்-போங் என்ற சொல்லில் கம் - கமம் உள்ளது. கம் என்ற ஆங்கில முன்னொட்டில் கமத்தின் தாக்கம் உள்ளதா?

குன்று என்ற சொல்லிலும் இந்தக் குறுக்கம் உள்ளது.   குன்> குனி என்பதிலும் இந்தக் குறுக்கம் உள்ளது  (குனிதல்).

குன்> குன்+சு >  குஞ்சு  வயதுக் குறுக்கம். உடற்குறுக்கம்.

விரிந்து நில்லாமல் கூடி நின்றாலும் இதுவும் ஒரு குறுக்கம்தான்.  கும் > கும்மி.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.













சனி, 3 ஜனவரி, 2026

உற்பத்தி :

 உற்பத்தி என்னும் சொல்.

இயற்கையில்,  ஒரு கரு தாயின் கருப்பையில்  '' உள் பற்றி'' யபின்  வளரத் தொடங்குகிறது.   இதனை ஆய்ந்துணராமல்,  உற்பத்தி என்பது தமிழன்று என்று மயங்கியோரும் உளர். சரியான சிந்தனை செய்யாமையே காரணம் ஆகும்.  உற்பத்தி என்பது இந்த இயற்கை விதியை அறிந்த சிற்றூரான் அமைத்து வழங்கிய சொல். 

இதையும் படித்து அறிந்துகொள்ளுங்கள். https://sivamaalaa.blogspot.com/2013/11/blog-post_20.html.

இதற்கு வேறு வகைகளிலும் அமைப்பு அறிவிப்பாருண்டு.  எனினும் இதுவே இதன் உண்மைப் பொருளை நன்கு  அறிவிக்கும் விளக்கமாகும்.

விதைகள் கொட்டைகளிலும் உள் பற்றிய பின்புதான் வளர்ச்சி உண்டாகிறது.

சிலர் வெளியில் பற்றியபின் வளர்வனவும் உண்டு என்னலாம்.   சில நுண்மிகள் ஒன்றன் வெளியில் பற்றியபின் வளர்கின்றன என்னலாம்.  வழக்கில் வெளியில் பற்றுதலும் உற்பத்தியில் அடங்கும். இதைத் தனியாக விளக்கவேண்டின் ''வெளிவளரி''  என்று ஒன்று வழங்கிக்கொள்ளலாம்.  ஏற்புழி அவ்வாறு நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.