சனி, 22 நவம்பர், 2014

பரத்தையிற் பிரிந்த தலைமகன்

.காதல் பரத்தை எல்லார்க்கும் உரித்தே

(இறையனார் அகப்பொருள்.
கற்பியல், சூத்திரம் 40 )

அதாவது, பரத்தையின் காதற் பொருட்டுத்  தலைமகளைப் பிரிந்து செல்லுவதாகப்  புலவன் கவிதை இயற்றுதல்,   தலைமகன் எத்தகைய நிலையினன் ஆயினும்,  அவனுக்கு உரியதாக இலக்கிய உலகம்
ஏற்றுக்கொள்ளும் என்பது.

இல்லறம், துறவறம் என்ற மேலான  நல்லறங்களைப் போற்றி வந்தவர்
தமிழர். ஆயினும் பரத்தைமை போன்ற  இழிவுகளும்  அவர்களிடம் இருந்ததன .ஆனால் சிலர், இதுவும் குலமகளிரைப் பாதுகாகத் தேவையான ஒரு வசதியே என்கின்றனர்.

எப்படியோ!

பரத்தையை வேண்டி ஒரு தலைமகன் தலைமகளைப் பிரிந்தான் என்றால்
தலைமகட்கு அது துன்பமே. இத்துன்பத்தை எடுத்துக்காட்டப் புகும் புலவன், இத்துன்பம் நீங்கி மீண்டும் தலைமகளிடத்துத் தலைவன் வந்து ஒன்றுகூடும் நிகழ்வினையும் பாடலாம். இப்படிப் பிரிந்து கூடினால், அது இன்பமே என்கின்றனர் இலக்கிய மேதைகள். இதிலிருந்து புலவனுக்குப் பாடப் பற்பல
பொருள் கிடைக்கின்றன.

இறையனாரின் அகப்பொருளுக்கு உரை  தந்ததாகச் சொல்லப்படும்
திருமுருகாற்றுப் படை தந்த நக்கீரனார், இதைத் தற்காத்துக் கூறுவதாகத் தெரிகிறது. "ஊடலே, புலவியே, துனியே ( அச்சம் அல்லது புலவியின் முதிர் நிலை ) என்றிவை நிகழும், நிகழ்ந்தால் அவை நீங்கிக் கூடினவிடத்துப் பெரியதோர் இன்ப(ம்) "  என்கிறார் அவர்   (புலவர்  பிறர் அவர் பெயரால் புகுததியதாகவும்  இருக்கலாம்! )  .பிரியவும் ஒரு காரணம் வேண்டுமே. எக்காரணமும் இல்லை யென்றால் பிரிவுதான் ஏது?  துன்பம்தான் ஏது?
\
இறையனார், கவிதையில் மென்சுவை வேண்டுபவர், ஆகையால் அவர்
இதனை இலக்கியத்துக்கு ஏற்றதெனக் கொண்டுள்ளார் என்கிறார் நக்கீரனார்.


காதற்பரத்தை எல்லார்க்கும் உரித்து என்று அஃறிணை முடிபு கொண்டதற்குக் காரணம், "  காதற் பரதையின் பொருட்டுத் தலைமகளைப் பிரிதல் என்னும் நிகழ்வு எல்லார்க்கும் உரித்து" எனற் பொருட்டாம். இல்லையேல், காதற்பரத்தை எல்லார்க்கும் உரியள்  என்று சூத்திரம் வந்திருக்கவேண்டும். அந்த நிகழ்வைப் புலவன் எத்தன்மையோர்க்கும் பாடலாம் என்பது. இவ்வதிகாரத்தின் பொருள் பிரிவு   (subject )  ஆதலின், இது பொருத்தமே.

காதற் பரத்தை என்றதனால், இந்த உரை மேலும் பொருத்தமாகிறது.
"காதல்" என்றதனால், அதுகொண்டு தலைமகன் தலைமகளைப் பிரிவன் என்று கொள்ளவேண்டும். இது இக்காலத்தில், "சின்னவீடு" என்று திரைப்படங்களில் பரப்பப்பட்டது  போன்றதொரு சொல்லாட்சி ஆகும்.

கருத்துகள் இல்லை: