old ramayana interpretation
திசைகாப்பாளர் யார்?
எண்டிசைகளையும் காத்து நிற்போர் மானிடர்களா? ஆசிரியர் வேறு குறிப்புகள் ஏதும் தந்துள்ளாரா? என்று வினவலாம். அரக்கர்கோ முரசறைந்து அவர்கள் வல்லமை அழியுமாறு படை நடத்தினான் என்பதால், மானிடர்களாய் இருக்கலாம். ஆங்காங்கு ஆட்சி செலுத்தும் நாட்டுக்குரியோரைக் குறித்ததாகலாம். ஆனால் திசைக்கொரு காவல் தெய்வம் இருப்பதாகப் பரவலாகப் பண்டைய மக்கள் நம்பினர். சீனர், கம்போடியர், சாவகத்தார், வியட் நாமியர், இந்தியர் என அனைவரிடத்தும் இத்தகைய நம்பிக்கை இருந்திருக்கிறது. எனவே, திசைகாப்பாளர் என்பது இத்தேவதைகளைக் குறித்ததாகவும் கொள்ளற்கு இடமுண்டு.
தேவதைகளாயின், அவர்களை முற்றாக அழித்துவிடுதல் இயலுமோ? ஆகவே, ஆசிரியர் கவனமாக : "குறும்பும் தேய" என்கிறார். அவர்களின் வல்லமையைக் குறைத்து இடர் ஏதும் செய்யாமல் செய்துவிடின் அதுவே இயல்வதாகும் என்று தோன்றுகிறது. "தேய" என்பதற்கு அழிக்க என்று உரைப்பதில் தவறில்லை யாயினும், "குறைய" என்பதே மிகுபொருத்தம் என்று தோன்றுகிறது.
திசை காப்பாளர் பற்றிக்கண்டோம். திசைகள் நான்கு. இவற்றினுட்பட்ட திசைகளையும் சேர்த்து எண்திசை எனவும் படும். எண்டிசை என்று புணர்ச்சிபெறும் சொல் இதுவாகும். இனி, மேல் - கீழ் அதாவது வானம் பூமி (பாதாளம்) இவற்றின் திசைகளையும் சேர்த்து, திசைக்கொரு காப்பாளர் இருக்கின்றார் என்று கூறப்படுதலும் உண்டு. இவற்றின் விவரத்தை தொன்ம நூல்களில் காணலாம்.
திசைத்தேவர்களின் வல்லமை தேய்வுறவே. ஆங்காங்கு ஆட்சிசெய்துகொண்டிருப்போரின் வல்லமையும் அதற்கொப்பத் தேய்ந்து, இராவணன் போறிட்டவிடத்தெல்லாம் வெற்றியை ஈட்டி, விழு நிதியங்களைக் கொணர்ந்தான்.
"வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்தனன்"
வலிமைவாய்ந்த தம் வீரர்களுக்கு இராவணன் இந்த நிதியையெல்லாம் வகுத்து, விரைந்து அளித்தான் என்பது இதன் பொருள். வீசி என்பது விரைவையும் மேலும் அவனுக்கு இனி அவை வேண்டாதவை என்பதையும் தெளிவாக உணர்த்துகின்ற சொல்லாகும். வகுத்தான் என்ற சொல் அவர்களில் யாவருக்கும் பங்கு கிடைக்குமாறு அந்நிகழ்வு நடந்தேறியது என்பதைத் தெரிவிக்கின்றது
(சிவ பக்தன்)
இருந்த என்ற சொல்லும் மிக்க ஆழமான கருத்துடையதாகும். சிவனைத் தேடி இராவணன் அலையவில்லை. சிவக்காதலினால் ஒரே இடத்தில் சீரிய கூரிய எண்ணங்களின் நிலைநிறுத்தத்தினால் அசைவற்று ஆழ்ந்தமர்ந்ததையே இச்சொல்லாட்சி நம்முன் கொணர்கிறது.
மாலை வெண்குடை அரக்கர் கோவே என்பது:
இராவணன் அரசவையில் (தர்பாரில் ) மாலை அணிந்து வெண்குடையின் கீழ் அமர்ந்து தனது அலுவல்களை கவனிக்கும் பழக்கமுடையவன் என்பது தெரிகிறது. இது மன்னர் பிறரும் பின்பற்றிய முறைதான். இராவணன் அரக்கர்கோ என்ப்பட்டாலும் அவன் பிராமண மன்னன் தான்.
அவனை அரக்க பிராமணன் (அல்லது பிரம்ம ராட்சஸன்) என்றாலும், ராட்சஸனானது அவன் செயல்களாலா அல்லது பிறப்பினாலா என்று தீர்மானிப்பது கடினம். செயல்களால் என்று கூறின் பிறப்பினால் என்று வாதிடுவர்.
"குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுற"
இஃது இராவணன் கைவலிமையைக் குறிப்பிடுகிறது. அவனுடைய வலிமை வாய்ந்த கைகள் ஒரு குன்றினையும் ஏந்தும் வலிமை வாய்ந்தன என்கிறார் இவ்வாசிரியர். தடக்கை - வலிமை வாய்ந்த கைகள். இராவணன் பல கரங்களை உடையவன்.
விழு நிதியத்தைப் பங்கிட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கையில், அவனது அத்தனை கைகளும் அவ்வேலையில் முற்றும் ஆழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தன.
தொழிலுற = செயல்பட, வேலைசெய்ய.
இவ்வழகிய பழம்பாடல் இப்போது நன்கு புரிவதுடன். இத்தகு பாடல்களை படித்தின்புறுவதற்கு நம் நேயர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் என்று நம்புவோம்.
கம்பனுக்கு முந்திய பழைய இராமாயணம் அல்லது இராம காதைப் பாடலிலிருந்து ஒன்றை விளக்கி உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். சுவையாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன் .
நன்றி. முற்றும்.
-------------------------------------------------------------------------------------------------------------
Also pl see: http://bishyamala.wordpress.com/2013/07/19/baby-girl-names-coined-newly/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக