ஞாயிறு, 11 ஜனவரி, 2009

காளி தேவிக்கு விண்ணப்பம்

நீரின்றி வாடிடும் ஏழைத் தமிழரை
நீதானே காப்பற்ற வேண்டும் -- வலிந்த
போரொன் றவர்கள் பொறுக்கமாட் டார்மேல்
புகுத்தலை நீமாற்ற வேண்டும்.

வான்குண்டு வீச்சுக்கு வாழ்வு பறிபோகா
வண்ணமே நீயருள வேண்டும் -- அவர்க்கு
ஊண்பண்டு போலக் கிடைத்திட உன்னருள்
அல்லாது வேறென்ன வேண்டும்?

உடைமைகள் யாவும் இடையே களைந்தவர்
ஒயாத போராட்டம் வாழ்வில் -- கண்டு
படையவர் ஆற்றும் கொடுஞ்செயற்கு ஆளாய்ப்
படுந்துயர் நீபோக்க வேண்டும்.

சின்னஞ் சிறிய குழந்தைகள் மூப்பில்
செயலறி யாதவர் மக்கள் -- தம்மைக்
கண்ணுங் கருத்துமாய் முன்காத் தனையவர்
இன்றுசெய் பாதகம் யாதோ?

விரைந்தருள் நீயே புரிந்திடு தாயேநல்
வீரம் விளைத்திட்ட காளி --- அவர்கள்
குறைந்திட்ட வாழ்வின்னும் குன்றாமல் நீவா
நிறைந்திடச் செய்யிந்த நாழி!

1 கருத்து:

aaruran சொன்னது…

அருமையான கவிதை, காளிதேவி உங்களின் விண்ணப்பத்தை ஏற்று
ஈழத்தமிழர்களின் வாழ்வில் விடிவை ஏற்படுத்துவாளாக.

மனமார்ந்த நன்றிகள்.