வியாழன், 8 ஜனவரி, 2009

பொருள் அழுத்தம் emphasis

சொல்லுங்கால் ஒரு கருத்துக்கு அழுத்தம் கொடுத்துச் சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு மொழியிலும் அதற்கு வெவ்வேறு வசதிகள் உள்ளன.

தமிழில் இவ்வழுத்தம் கொடுக்கும் முறை எங்ஙனம் கையாளப்படுகிறது என்று பார்ப்போம்.

காசியப்பன் சோறு தின்றான். (வாக்கியம்)


இதன் பொருள்: காசியப்பன் சோறு, குழம்பு, பச்சடி, துவையல் (இன்ன பிற ) என்பனவற்றை உண்டான் என்று பொருள். வெறுங்சோறு உண்டான் என்பது பொருளன்று.

காசியப்பன் சோற்றை உண்டான் (வாக்கியம்).

இதில் "சோற்றை" என்பது: அவன் சப்பாத்தி, இட்டிலி, உப்புமா (இன்ன பிற ) என்பனவற்றை உண்ணவில்லை, சோற்றையே உண்டான் என்றாவது, மற்றவற்றை உண்ணாமல் சோற்றை உண்டான் என்றாவது பொருள்படலாம்.

இங்கு "ஐ" உருபு வந்து, சோறு என்ற சொல்லின்மேல் ஓர் அழுத்தத்தை உண்டாக்கியிருக்கிறது என்று உணரலாம்.

சின்னா மதுரை போனான்.

இதில் மதுரை என்ற சொல்லின்பால் அழுத்தம் ஏதும் இல்லை. மதுரை போய், அங்கிருந்து சொந்த ஊருக்கு உந்துவண்டியில் போனான் என்று பொருள் விரிவடைய இடம் தருகிறது இந்த வாக்கியம்.

சின்னா மதுரைக்குப் போனான்.

இங்கு வேறு இடத்துக்கு அவன் போகவில்லை, மதுரையோடு அவனது இப்பயணம் முற்றுப்பெறுகிறது என்று பொருள்படலாம்.

வேற்றுமை உருபுகள் ஒருவகை் பொருள் அழுத்தத்தை இடம் நோக்கி உண்டாக்குகின்றன என்று தெரிகிறது.

கடல்கடந்த சீனர்.

இங்கு கடல்கடந்த என்பது ஆங்கிலத்தில் வரும் oversea என்பதற்கு இணையான பொருளைத் தருகிறது. அதாவது இந்தச் சீனர் சீனா நாட்டினர் அல்லர் என்று பொருள்தரும். (The Chinese diaspora!)

கடலைக் கடந்த சீனர்.

இங்கு: இரண்டு மூன்று சீனர்களிடையே இந்த ஒருவர் கடலைக் கடந்தார், மற்றவர்கள் கடக்கவில்லை என்று பொருள் தரலாம். அதாவது ஒருவர் மட்டும் படகேறி வந்தவராக இருக்கலாம்.
கடலைக் கடந்த செயலானது முன்மை (primacy or importance) பெறுகின்றது. It does not refer to a category of Chinese. It is a reference to action of sailing across probably from China.

சில வேளைகளில் அழுத்தத்தை ஏற்படுத்த உருபு மட்டும் போதாமை ஏற்படலாம். எடுத்துக்காட்டு:

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் இரகசியம் சொல்வேன்.

இங்கு மட்டும் என்ற சொல் பிறருக்கு இந்த இரகசியம் கூறப்படாது என்று பொருள் தருவதைக் காணலாம். இருமுறை அடுக்கி வந்து அழுத்தம் குுடிவிட்டது என்று தெரிகிறது.்

இதுபோன்ற பொருள் அழுத்தங்களை (emphasis) நீங்கள் உணர்ந்ததுண்டா?

கருத்துகள் இல்லை: