புதன், 25 மார்ச், 2020

மகுடமுகி நோய்நுண்மிகள் - ஆடினது போதுமே.

குறுமியாம் கிருமியே இருபதாம் ஆண்டிதனைக்
குறுகியதும் துன்பநாளே.
வறுமையில் வாடிடுவர், வளம்பல கூடிடுவர்
வந்திடும்  யாரெனினுமே.

கொன்றதுபல் ஆயிரமே  பிள்ளைதாய் ஆயினுமே
மண்டுபசி தீராமலே,
உண்டதுவே குடித்ததுவே உயிர்களை என்செய்வோம்
உலகெங்கும் வெடித்ததொற்றே.

தோன்றுமிடம் சென்றினிய தோழியரைத் தோழர்களை
ஊழியர்கள்  ஈண்டுகாணத்
தாண்டிடவும் விட்டதிலை தலையிலடித் தேவீட்டில்
தங்கிடவே பொங்குதுயரே.

ஆடினது போதுமினி மகுடமுகிப் பேய்க்கிருமி
ஓடிடவே செய் இறைவனே
நாடின இன் பங்களெலாம் நாம் காணக் கொஞ்சமினி
நன்மக்கள் பெறவேணுமே.


அரும்பொருள்

குறுகியதும்   :     அடைந்ததும்.   சேர்ந்ததும்.
வளம்பல கூடிடுவர் :   செல்வத்துடன் கூடி இருப்போர்.
மண்டு  -   மிகு.

தோன்றுமிடம் -  நினைத்துச் செல்லுமிடம்
தாண்டிடவும் -  தடுப்புகளைக் கடந்திடவும்.
பொங்கு துயரே -  துயர் மிகுதல்.




செவ்வாய், 24 மார்ச், 2020

பிரேமை காதல் காமம் காம். மற்றும் காவாலி

பிரேமை,  மோகம் முதலிய சொற்களை முன் விளக்கியதுண்டு எனினும் அவை இங்குக் காணப்படவில்லை.

பிற ஏமை -  பிரேமை

பிற குடும்பத்தில் அல்லது பிற கூட்டத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை தான் தனக்கென்று எடுத்துக்கொண்டு அவளைக் காத்து ஒதுக்கிக்கொள்வதே பிரேமை என்ற சொல் அமைவதற்குக் காரணமானது,  ஏம், ( ஏமம்) என்பது பாதுகாவல் என்று பொருள் தரும் சொல்.  தன் குடும்பத்தில்  பிறந்த பெண் தனக்குத் தங்கை அல்லது  அக்கை ( அக்காள் )  ஆகிவிடுதல் கூறவேண்டாதது. உறவு முறைகள் மக்களிடை வரையறுக்கப்பட த் தொடங்கலுற்ற மிகப் பழங்காலத்தில் நிலவிய கருத்துகளின் அடிப்படையில் பிற ஏமை  (பிரேமை) என்ற சொல் அமைவுற்றது,  பிற குடிப் பெண்ணைத் தனக்கென்று காத்துக்கொள்ளுதலே பிரேமை என்றாகிப்  பொருள் ஒருவாறு மாறிப் பின்னர் அது காதலென்ற (  மனவுணர்வுப் )  பொருண்மையைப் பெற்றது,  காவற் கருத்து மறைந்தது எனினும் சொல்லில் அது இன்னும் ஒளிந்துகொண்டிருக்கிறது.    பிற என்பது பிர என்று எழுத்துமாறி அதன்பின் ஈற்று அகரம் கெட்டு ஏமம் என்ற  சொல்லுடன் இணைந்து  பிரேமை என்ற சொல் அமைந்தது அறிக. ரகர றகர வேறுபாடின்றி சொற்கள் வழங்கிய காலமும் உண்டு. பின்னர் அவை குறைந்தன.

காதல்

காதல் என்ற சொல்லும் காத்துத் தனக்கென்று மேற்கொள்ளும் மனவுணர்வினையே குறித்ததென்பது காணின், பிரேமை என்பது அதே கருத்திலமைந்த சொல்லே என்பதை வலுப்படுத்துதல் காணலாம்.  காதல் என்பது காத்தல் என்பதன் தன்வினை வடிவமே எனினும் காலப்போக்கில் இதனைப் புலவரும் மக்களும் மறந்தனர் என்பது மிகத்தெளிவு.   இதே கா என்ற காத்தல் அடிப்படையில் எழுந்ததே காம், காம் + அம் = காமம் என்ற சொல்லும் (வடிவங்களும்) என்பதுணர்க.

தான் கண்டு காதலுற்ற பெண்ணைத் தனக்கென்று ஒதுக்கி மேற்கொள்ளும் செயல்பாடு உலகனைத்தும் காணப்படுதலின் தமிழ்ச்சொற்கள் மனித இயற்கையை ஒட்டிஎழுந்தவை என்பது உணரற்பாலதாகும்.

காவாலி

பயனற்றவற்றைப் பற்றித் திரிபவன் காவாலி.     கா -  காத்துக்கொள்ளுதல்.  வால் =  வால்போல் பின்செல்லுதல்.  காவாலி -  வேண்டாதன பின்பற்றிக் காத்துத் திரிபவன்.  காத்தலாவது விடாது பற்றி நிற்றல்.   இனிக் காவு + ஆல் + இ என்று பிரித்து -     காவு -  காத்தல்;  ஆல் -  விரிவாக அல்லது மிகுதியாக என்று பொருள்தரும் சொல்.  அகல் > ஆல் என்று திரியும்.   இ -  உடையனாதல் குறிக்கும் விகுதி.   ஆகக்  காவாலி எனினுமாம்.

கா என்ற அடியிற் பிறந்த சொற்கள் இன்னும் பல. சில பின் காண்போம்.


காமுகன் என்பது எவ்விதம் அமைந்தது?  இதில் முகம் என்பதென்ன ?

மேலும் அறிக:  https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_3.html

தட்டச்சுப்  பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

(We are on self quatantine from Jan 2020. Pl take care. Coronavirus.)

சனி, 21 மார்ச், 2020

சாஷ்டாங்கம் ‌ - சொல்

இன்று " சாஷ்டாங்கம்"   என்ற சொல் அறிவோம்.

இச்சொல்லின் முந்துவடிவத்தைக் கண்டு ஒப்பிடுவது  எளிதே ஆகும். இதை இவண் செய்து  மகிழ்வோம்.

அங்கத்தை முழுவதும் தரையில் சார்த்தி இறைவணக்கம் முதலியன இயற்றுதல்  "சாஷ்டாங்க"மாகும்.

சார்த்து அங்கம் >. சார்த்தாங்கம்> சாஷ்டாங்கம்   ஆயிற்று..

அதாவது  இஃது பூசைப் பொருள்கள் சார்த்துதல்போல் அங்கத்தைச்  சார்த்துவது.

சார்த்து என்பது பின் "சாத்து‌"  என்று
திரிந்தது.  பின்னர் அயல்சென்று    சாஷ்டா....>   சாஷ்டாங்கமாயிற்று. சாஷ்டாங்கம் வழக்குக்கு வந்த பின் சார்த்தாங்கம் இறந்தது

இவ்வாறு பின்வடிவம் வலுப்பட்டு நின்ற பின் முந்தையது  மூழ்கிப்போன இன்னொரு சொல்: கட்டம் (1)> கஷ்டம்.

கடு + அம் = கட்டம் > கஷ்டம்(1).  இனிக்   கட்டு + அம் = கட்டம்(2)  என்றுமாம். கஷ்டம்(1) என்ற சொல் செய்த பணி என்னவெனில்,  கட்டம்(2) என்பதனுடன்    ஏற்பட்ட பொருள்மயக்கு விலக்கியமை என்பர்.   சாஷ்டாங்கம்  என்பது இவ்வாறு ஒன்றும் உதவிற்றில்லை காண்க.

அங்கம் என்பது முதன்மை  (important)  உள்ளுறுப்புகள் யாவும் உள்ளடங்கிய உடல்.  அடங்கு>. அடங்கம்>    அங்கம் எனக் காண்க. இது  டகரம் ஒழிந்த இடைக்குறைச்சொல்.  இவ்வாறு புனைவுற்ற இன்னொரு சொல் :  கேடு + து =  கேது என்பது.    பெரிதும் கேடு விளைக்கும் கிரகம் அல்லது கோள்  என்பது இதன் பொருள். மற்றொன்று :  பீடு + மன் = பீமன்,  பீடுடைய மன்னன்.

ஒரு திரிந்த  துணுக்கும் ஓர் இடைக்குறைச் சொல்லும் கலந்த மயக்கமே சாஷ்டாங்கமாகும்.

தேய்ந்து அழிதக்கது தேகம்.  இது  தேய் + கு + அம் =  தேய்கம் என்றாகி யகர ஒற்று விலக்கித்  தேகம் என்றமைந்தது.   பேச்சு வழக்கில் திரேகம் என்றொரு சொல்லும் உள்ளது.  அது தோல் திரைந்து பின் அழிதல் என்னும் கருத்தில் அமைந்தது.   திரை+ ஏகு + அம் =  திரேகம்.  திரைந்த பின் ஏகிவிடுவது.  போய்விடுவது என்பதே ஏகு என்ற சொல்லால் உணர்த்தப்பட்டது.  இச்சொல்லமைப்பில் திரை என்ற சொல்லின் இறுதி ஐகாரம் கெட்டது.

நரை திரை மூப்பு மரணம் என்பது தமிழ்நாட்டினர் சொல்லும் முதுகருத்து ஆகும்.

ஒப்பீடு:

வாய்+ தி = வாய்த்தி >  வாத்தி > வாத்தியார் ( பணிவு அல்லது மரியாதைப் பன்மை.)  யகர ஒற்று ஒழிந்த சொல்.
அதுவேபோல்  தேய்கம் > தேகம் என்பதும்.

சாஷ்டாங்கம்:

எட்டு உறுப்புகள் தரைப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்பார் உளர்.

சா -  சாய்ந்து,
ட்டு    =   எட்டு   ( திரிபு:  அட்டு )
அங்க(ம்)   மகர ஒற்று விலக்கல்
ஆக சாட்டாங்க > சாஷ்டாங்க என்பது  என்பர்.

எட்டு உறுப்புகள் ஆவன: இரு கைகள் இரு முழங்கால் இரு தோள் மார்பு நெற்றி   ஆக எட்டு என்பர். அங்கம் என்பதில் தோளும் மார்பும் அடங்கிவிட்டன ஆகையால் இது பொருந்தவில்லை.  தோள் முழுமையாய்த் தரையிற் படுவதில்லை. இதனினும் உயிருக்கு வரும் தீமையை உடலுக்குச் சாட்டுதல் என்னும் கருத்துக் கூறி  சாட்டு + அங்கம் = சாட்டாங்கம் என்று புனைந்து  சாஷ்டாங்க என்று திரிப்பின் நல்ல விளக்கமாகுமே! இறைவணக்கத்துக்கு உண்டான புனைவு பின் பிற வணக்கங்களுக்கும் பரவிடில் வியப்பொன்றுமில்லை.



அறிக மகிழ்க.


இங்கு தட்டச்சுப் பிறழ்வுகள் இருப்பின்.
பின் சரிசெய்யப்படும்.

22.3.2020 failed to generate edit preview  .