அடு மற்றும் அரு என்ற இருசொற்களையும் முதலில் எடுத்துக்கொள்வோம். அடுத்தல் என்றால் அருகிற் செல்லுதல். அருகுவைத்தல் என்றால் சூடு ஏற்றும் ஒரு சட்டியையோ மற்ற வெப்பமேற்றியையோ அடுத்து வைத்தல் என்று பொருள். குழந்தைக்கு இசிவு வரும்போது இது செய்யப்படுகிறது. இதுபோழ்து இதற்கு மின்னாற்றலால் இயங்கும் கருவிகள் ஏற்பட்டுவிட்டன. அருகுவைத்தல் என்பது இப்போது யாருக்கும் நினைவிலிருக்கும் என்று யாம் நினைக்கவில்லை. அதற்கான ஆங்கில மருத்துவச்சொல் வழங்கிக்கொண்டிருக்கும். சூரியன் எத்துணைக்கல் தொலைவி லிருந்தாலும். அருகிலிருப்பவன் போல் நமக்கு வெப்பமளிப்பதால், அவனுக்கு ''அருக்கர்'' என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது. அருகு+ அர்> அருக்கர் என்ற பெயர் உள்ளது.. சிலம்பு+ அதிகாரம் > சில்ப்பதிகாரம் என்று பெயர் ஏற்பட்டதுபோல் இது ஒரு வலித்தல் விகாரம். மிகு+ ஆர்+ அம் > விகாரம் என்றாகும். மிஞ்சு> விஞ்சு என்று திரிதல்போல் விகாரம் இது..
உடு - உரு என்ற இணையும் இத்தகு பொருளணுக்கத்தை முன்நிறுத்தும். சொற்கள் வெவ்வேறு விகுதிகளைப் பெற்றுச் சொல்லமைந்தாலும், பகுதிகளையே ஒப்புநோக்கி இதை உணர்ந்துகொள்க. உடு > உடல், உரு- உருவம் என்பன காண்க. பொருள் சற்று வேறுபடுதல், ஒப்புமை எவ்வாறு எழுமென்பதைத் தெளிவாக்குகிறது. மனிதன் உருவிற்கு உடை அணிவிக்கப்படுகிறது. உரு என்பது உடலின் புறக்காட்சி; உடை என்பதும் புறக்காட்சிக்கு உதவுவதே ஆகும். தமிழ்மொழிக்கு ஒரு சொல்லாக்கப் பண்பு மேவுவது இதன்மூலம் தெளிவுபடுத்தப் படுகிறது.
மடி - மரி என்பன டகர ரகர திரிபியலுக்கு எடுத்துக்காட்டப் பெறும் ஒரு சிறந்த உதாரணம் ஆகும். இவை பொருத்தமான விகுதிகளைப் பெறும், மடிதல், மரித்தல் என்பவற்றில் ஒன்றில் வலிமிகாதும் இன்னொன்றில் வலிமிக்கும் வரும். மரிதல் என்ற சொல் அமையவில்லை போலும். அதற்குப் பதிலாக, மருவுதல் என்ற வினைச்சொல் அமைந்துள்ளது. மடிதல், மரித்தல் இன்னும் மருவுதல் ஆகிய எல்லாம் மாறுதல் கருத்துக்கள் என்ற அளவில் ஒருமைப்பாடு உடையவை. இங்கு நாம் இத்துணை சொல்லமைப்புப் பண்புகளை எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இவற்றுக்குள் செல்லாமலே, ஒரு சொல் திரிபைக் காட்டிவிட்டு, சூடியன் - சூரியன் என்பதைக் காட்டலாம். அது போதுமானதாகவே இருக்கும் என்றாலும், சிறிது அதிகச் சர்க்கரையை இங்கு தந்துள்ளோம்.
சூடு தருவதே சூரியனின் வேலை. இது ஒரு நாட்டுப்புற வழக்கி லிருந்து வந்த ஒரு சொல். வெப்பி என்று பெயரைக் கூட வைத்திருக்கலாம். வழக்குப் பெற்றுவிடுமாயில் மொழியில் இடம்பெற்றுவிடும். சூடு கொளுத்தினும் கொளுத்தி என்றும் அமையவில்லை. கொளுக்கி என்ற பெயர் கொளுவிக்கு அமைந்தது. கொளுக்கி என்பது இடைக்குறையாய் கொக்கி என்று வந்தது. இவை வேறு பொருட்களுக்கு அமைந்தன.
சூரியனுக்கு அமைந்த பெயர்கள் பல. அவை நீங்கள் அறிந்தவை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை