திங்கள், 18 ஆகஸ்ட், 2025

ஐப்பசி மாதம் அப்பியை மற்றும் திரிபுகள்

  இப்போது ஐப்பசி என்ற மாதப்பெயரையும்  அதன் மாற்று வடிவங்களையும் ஆய்ந்து காண்போம்.

ஐப்பசி என்ற சொல்லை  ஐ+ பசி என்று பிரித்து  அதற்குப் பொருள் சொன்னால் ஒருவேளை பொருளும் ஆய்வும் தவறாக முடியலாம்,  ஏனெனில் ஐ என்பது சொல்லாக்கத்தில் ஒரு பகவு ஆயினும் பசி என்பது  சரியான பொருளைத் தரவியலாத திரிபு   ஆகும்..

பசி என்பதற்கு இங்கு உடலுக்கு உணவு தேவைப்படுதல் என்ற பொருளுடைய சொல்லன்று.

ஐ என்ற முன்வரும் பகவு,  முன்  ஆசு என்பதன் திரிபு.   ஆ(சு) என்பது  ஆதல் என்ற சொல்லின் முதலெழுத்து.  சு என்பது ஒரு விகுதி.   ஆசிடையிட்ட எதுகை என்ற தொடரில்  ஆதலென்ற வினையின் முதலெழுத்து வருகிறது.  ஆசு என்றால் பற்றுக்கோடு என்ற பொருளும்  உள்ளது. பற்றுக்கோடு என்பது பேச்சுவழக்கில் ஆதரவு என்ற சொல்லால்  குறிக்கப்படும்.  ஆ என்பது பசு என்ற பொருளில் வருவதுடன்  ஆ(தல்) என்றும் வினையாகவும் உள்ளது.   ஆ என்பது  மாடு என்று பொருள்படுகையில்  ஆக்கம் தரும் விலங்கு என்று உணர வேண்டும்.  அதனால்தான் அதற்கு ஆ என்று பெயர்.  மாடு என்பதும் செல்வம் என்று பொருள்தரும்.  மாட்டை    ''ஆ''  என்றது காரணப்பெயர் என்று அறிதல் வேண்டும்.

இகம் என்பது  இ+ கு+ அம் என்பன இணைந்த சொல்லாதலாதலின் இவண் சேர்ந்து இணைந்திருப்பது என்று பொருள் காணவே,  இவ்வுலகம் என்றும் இங்கிருப்பது என்றும் பொருள்படும்.

ஐப்பசி   என்பது முன்னர் ஐப்பிகை என்று கல்வெட்டில் வந்துள்ளது. இது ஐ+ பு + இகை என்ற பகவுகளின் இணைப்பு.  பு என்பது இடைநிலை.  இகை என்பது இகம் என்பதன் திரிபுதான்.  இறுதி ஐ  விகுதி  பெற்றது.

இகு என்பது அம் விகுதிபெறாமல்  இகரவிகுதி பெற்று  இகி என்றாகிப் பின் இசி என்றாயிற்று. இது ககர சகரப் போலி.    சேரலம் >கேரளம் என்பது போல.  இது பிற மொழிகளில் வரும்.  ஆங்கிலத்திலிலும் ஐரோப்பிய மொழிகளிலும் காணலாம்.  அக்டோபர் மாதத்தில் தொடரும் பருவ காலமாகையினால் ஐப்பசி என்பதற்குத் தொடரும்  மாதம் அல்லது காலம் என்று பொருள் உரைத்தல் வேண்டும். 

ஆய்ப் பயில்வது என்ற தொடரை எடுத்துக்கொண்டால்  :  ஆய் > ஆயி>  ஆசி> இது குறுகி: அசி  >  பசி  ( ஐப்பசி)  என்று  ஐப்பசி என்பதுடன் தொடர்பு படுவதை உணரலாம். ஐப்பசி என்பது  பு+ அசி தான். பயி என்ற இரண்டெழுத்துகளும்  பயி > பசி என்றாதலைக் காணலாம்.  ஆகவே ஆய் என்பதை அய்> அயி> ஐ  என்று நிறுத்திவிட்டு,  பயி > பசி என்று காணின்,  ஐ-- பசி  என்று எளிதாக வந்திருக்கின்றது. ஐப்பசி என்பதற்குப்  பலவாறு விளையாடிக்கொண்டிருந்தாலும்  அன்பருக்கு ஆய்ப் பயில்வது என்று மட்டும் சொல்லி மற்றவற்றைத் தராவிட்டாலும் ஐப்பசி என்பதை விளக்குதல் எளிதுதான்.

தொடர்பு குறிக்கும் மாதம் ஆதலால்  அப்பி இயைப்பதான மாதம் என்றும் சொல்லிவிடலாம். எல்லாம் இதன் பால் உள என்று சொல்லுமளவுக்குப் பொருத்தமுடைய மொழி தமிழ். ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைத் தமிழில் காட்டுவது  இந்த வசதியினால்தான்.

தமிழ் மொழி உலகத் தொடக்கமாய் இருந்ததனால் பலவும் ஒன்றாய்க் காணக்கிடைக்கின்றது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை தரப்படுகின்றது.

சனி, 16 ஆகஸ்ட், 2025

குபேரன் என்ற சொல்.

 பலவாறு பிரித்துப் பொருள்சொல்லும் வசதி படைத்த சொல்தான் குபேரன் என்பது.  இதுபோல பல்பிரிப்பு வசதியுள்ள சொற்கள் பல உள்ளன நம் தமிழில்.

குபேரன் என்ற சொல்லில் முதலிற் பகவாய் இருப்பது  குவிதல் என்னும் வினையின் திரிபாகிய குபி என்னும் பகுதி.  குவி> குபி.  இப்பகவு   குபி என்பதன் பொருள் குவித்து வைத்தல்தான்.  குபேரன் என்ற சொல்லின் பழைய வடிவம் குவேரன் என்பது  குவி+ ஏர் + அன் என்று பிரிந்துவரக் கூடியது என்பது ஆய்வில் தெளிவாகிறது.  ஏர்த்தொழிலில் மிகுதியாய் விளைவித்து  செல்வர்களானவர்களைக் குறித்த சொல்லே இது. நாளடைவில் பிறதொழில்களால் பொருள் விளைத்துச் செல்வர்களாய் ஆனோரையும் அது குறித்தது.  இப்படிப் பொருள் விளைந்தமையினால் ஏர் என்ற சொல் பொருள் தெளிவினை இழந்துவிட்டது  என்ற கருத்து,  வலிவினை உடையதென்று கருதக்கூடும்  ஆனால் பின்வருவனவும் கவனிக்கவும்.

ஏர் என்ற சொல்லுக்குப் பல பொருள் உள்ளன.  ஏர் என்பது ஓர் உவம உருபாகவும் உள்ளது. எர்ப்பு என்பது ஈர்ப்பு என்ற சொல்லுடன் தொடர்பு உடையதாய் உள்ளது.

ஏர்பு என்ற சொல் எழுச்சி என்றும் பொருள்படும். வலனேர்பு திரிதரு என்ற தொடரைச் சிந்திக்கலாம்.  ஏர்தல் என்பதில் ஏர் என்பதே பகுதி.   வேளாண்மையால் வருஞ்செல்வம்  ஏர்ச்சீர் எனப்படும்.

ஏர்தல் என்பது எழுச்சி என்று பொருள்தருவதால்,  ஏர் என்று வரும் ஏரன் என்ற சொல்லுக்கு பொருளெழுச்சி உடையவன் என்ற பொருளே கூறவேண்டும்.

குவித்தல் என்பது பெருக்கம் உணர்த்துவதால் குபேரன் என்ற சொல் தமிழ்ச்சொல்தான். வகர பகரப் போலி தமிழிலும் உள்ளதே.

மேற்கொண்டு  ஆய்வு செய்யாமல் இதைத் தமிழென்று முடித்துவிடலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

பராக்கிரமம் என்றது

 இந்தச் சொல்லை இன்று அறிந்துகொள்வோம். 

இது வீரத்தையும் வலிமையையும் குறிக்கும் சொல். வேறு எந்தச் சொற்களால் இதனை விளக்கினாலும் இதன் இறுதியில் நாம்  இந்தப் பொருண்மையைத்தான்  அடைகிறோம். 

மக்கள் பராக்கிரமம் என்பதை மிகப் பெரியது அல்லது பரியது என்று நினைத்தனர்.  பருமைக்கும் பெருமைக்கும் இடையிலுள்ள நுண்பொருளை அவர்கள் கருத்தில் கொண்டனர் என்று சொல்வதற்கில்லை. நடைமுறையில் பெருத்தலும் பருத்தலும் ஒன்றாகவே பலரால் எண்ணப்பட்டது. 

இந்தச் சொல் பரு அல்லது பருத்தல் என்ற சொல்லின் அடிப்படையில் எழுந்தது. உருவில் பரியது இறுதியில் மதிப்பீட்டிலும் தன்மையும் பெரியதாய் எண்ணப்படுவது உலக மக்களிடையே காணப்படும் இயல்பாகும். இந்தச் சொல்லமைப்பில் நாம் இதை முன்மை வாய்ந்த கருத்தாக எடுத்துக்கொள்ளலாகாது.  பருமையானது பெருமைக்கு ஓர் உவமையாகக் கருதப்படுதலிலும் பெரிய தவறு ஒன்றுமில்லை..

இச்சொல்லுக்குரிய வினை பருத்தல் என்பதே.  

பரு+ ஆக்கு + இரு + அம்+ அம் என்ற சொற்கள் உள் நின்று பாராக்கிரமம் என்ற சொல் விளைந்தது.

பரியதாய் ஆக்கப்பட்டு இருந்து அல்லது நிலைபெற்று  அமைவதான தன்மை உடையது என்பது சொல்லமைப்புப் பொருளாகிறது.  அது யாது என்ற கேள்விக்கு வீரமென்ற தன்மை அல்லது வலிமை என்பது பதிலாகிறது.  இவ்வாறு அமைந்ததே இச்சொல்.

வீரமானது பரவலாகப் போற்றப்படுவது என்று பொருள் கொண்டு  பர என்ற வினையிலிருந்து வந்ததாகக் கொண்டாலும் அதனால் பொருளுக்கு அது எதிராக அமைந்துவிடாது. படைவீரரிடம் பரவலாகக் காணப்படும் தன்மை என்றிதற்குப் பொருள் கூறலாமென்றும் உணர்க.

வீரவுணர்ச்சி வீரனிடம் எழுந்து  அல்லது ஆக்கப்பட்டு,  நிலைத்துத் தங்கி ( இரு என்ற சொல்)  அம் என்பதால் நன்ஆகு அமைந்து  ஆவது என்று வரையறவு செய்யலும் ஆகும்.

எளிய சொற்களைக் கொண்டு தமிழில் உண்டான சொல் இது.  உடன் எழுந்த தொழுகை மொழிக்கும் உரியதாகிறது.. இவை எல்லாம் இந்திய மொழிகளே  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

ஒரு தட்டச்சுப்பிழை திருத்தப்பட்டது. (பொருண்மை)

பகிர்வுரிமை உடையது.