வியாழன், 31 ஜூலை, 2025

ஆபயன் என்னும் சொல்

 இன்று ஆபயன்  என்னும் சொல்லைத் தெரிந்து இன்புறுவோம்.

இது  இலக்கண முறையில் எத்தகையை சொல்? ,வினைத்தொகை என்னும் வகையுட்  பட்டால்  ஆகும் பயன் என்னும் பொருளில் வந்து, வலித்தல் விகாரம் தோன்றாமல் போதரும்.  அப்போது ஆ என்பது பசுவைக் குறிக்காது. ஆப்பயன் என பகர மெய் தோன்றினால் பசு தந்தது என்று பொருள் பட்டுப் பால் ( தயிர், மோர், வெண்ணெய். நெய் முதலானவற்றைக் குறிக்கும்.

பாட்டில் ( செய்யுளில்) எதுகை நோக்கிக் குன்றி  மீண்டும் "ஆபயன்" என்று வருதலும் கொள்க. அப்போது அஃது ஆவின் பயனே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்ந்து கொள்க.









திங்கள், 28 ஜூலை, 2025

வெடி, வேட்டு என்னும் சொற்கள்.

 இன்று வெடி வேட்டு என்னும் சொற்களைக் கருதுவோம்.

வெடி வேட்டு என்பன இடையின வகரத்தில் தொடங்கிய சொற்களாயினும் வல்லின டகரம் வருதலால், வெடிப்பு நிகழ்வுக்குப் பொருத்தமான சொற்களாய்விடுகின்றன. இடிபோலும் இயற்கை நிகழ்வுகளி லிருந்து மனிதன் வெடியொலியையும் அதன் தாக்ககத்தினையும் நன்கு அறிந்துகொள்வா னாயினன்.  வெடுக்கெனல் என்பது வேகத்தையும் ''டுக்''கென்ற ஒலியையும் ஒருங்கே குறிக்கவல்லதாய்  இருக்கிறது.

வெடி என்பதில் ஒலிமுறையில் நாம் காதில் அதிர்வையும் காட்சிக்கு விரைவையும் கண்டுபிடித்தாலும் சேர்த்துவைத்த வெடிபொருள் ஓரிடத்திலிருந்து சட்டென்று பிளந்துகொண்டு வெளிப்படுவதையே முதன்மையாக அறிகிறோம்.  இவ்வாறு விடுதலுக்கு விள்> விடு>வெடு> வெடிப்பு; விள்> வெள்> வெடி> வெடிப்பு;  விள்> வெள்> வெடு> வேடு> வேட்டு என்றபடி சொற்கள் திரிவன வென்பதை அறியலாம்.

வெடிக்குமிடத்தில் உள்ள நிலம் அல்லது பிற இடம் சேர்ந்து இருத்தலை விட்டு, அங்கு விடுபாடு அல்லது பிளவு ஏற்படுவதையும் அறியலாம்.

வெடிக்கும் இடத்தில் ஒரு வெட்டு விழுந்திருந்தால்,  வெட்டு> வேட்டு என்று முதனிலைத்  திரிபு இருப்பதை உணரலாம்.

இவற்றை உணர்ந்து தமிழ்ச் சொல்லமைப்பை உணர்ந்து மகிழ்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.


ஞாயிறு, 20 ஜூலை, 2025

சியாமளா என்ற பெயர்.

 மால்  என்பது மாலுதல் என்று வினைச்சொல்லாய்  மயங்குதலைக் குறிக்கும். மயங்குதலாவது கலத்தல்.  எடுத்துக்காட்டு:  இருளும் ஒளியும் கலந்து மயங்கிய நேரம் மால் - மாலை எனப்படுதல் காண்க.  பல பூக்கள் கலந்த தொடுப்பு மாலை என்பதும் அறிக.  மனிதன் மயங்குதல் தெளிவும் தெளிவின்மையும் கலந்திருத்தல். இதிற் தெளிவின்மை கூடுதலாக இருக்கும்.

கருமையும் வெண்மையும் கலந்த நிலை மால்> மா என்று வரும். லகர ஒற்று மறைந்த சொல். 

சியாமளா என்ற சொல்லில் மால் என்ற சொல் மாலா> மலா என்று குன்றி நீண்டது அறிக.

சீரிய மால் >  சீரிய மாலா >  சீயமாலா >  சியாமளா என்று திரிந்த சொல்லே இது.இதில் மாலா என்ற சொல்லே நிறம்  காட்டிற்று. சீரிய என்ப ரி இடைக்குறை. தமிழல்லாத மொழியில் சீரிய > சீய > சியா என்று பிறழ்வு மேற்கொண்டது.

மாலுதல் என்ற வினைச்சொல் தமிழ். மாலினேன், மால்கிறேன், மாலுவேன் என்பன வினைமுற்றுக்கள்.

சீரியமாலை > சீயமாலை > சீயமாலா > சியாமலா>சியாமளா.

லகரத்துக்கு ளகரம் மாற்றீடு ஆனது.  மங்கலம் > மங்களம் ஆனது போலும் திரிபு . மங்கல் என்பதில் அல் என்பதே விகுதி.  மங்குதல் வினை: >மங்கு, அல் அதனுடன்  அம் விகுதி இணைந்தது.  வெண்மை குன்றி மஞ்சள் நிறம் ஏற்படும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்பட்டுள்ளது.