ஞாயிறு, 20 ஜூலை, 2025

சியாமளா என்ற பெயர்.

 மால்  என்பது மாலுதல் என்று வினைச்சொல்லாய்  மயங்குதலைக் குறிக்கும். மயங்குதலாவது கலத்தல்.  எடுத்துக்காட்டு:  இருளும் ஒளியும் கலந்து மயங்கிய நேரம் மால் - மாலை எனப்படுதல் காண்க.  பல பூக்கள் கலந்த தொடுப்பு மாலை என்பதும் அறிக.  மனிதன் மயங்குதல் தெளிவும் தெளிவின்மையும் கலந்திருத்தல். இதிற் தெளிவின்மை கூடுதலாக இருக்கும்.

கருமையும் வெண்மையும் கலந்த நிலை மால்> மா என்று வரும். லகர ஒற்று மறைந்த சொல். 

சியாமளா என்ற சொல்லில் மால் என்ற சொல் மாலா> மலா என்று குன்றி நீண்டது அறிக.

சீரிய மால் >  சீரிய மாலா >  சீயமாலா >  சியாமளா என்று திரிந்த சொல்லே இது.இதில் மாலா என்ற சொல்லே நிறம்  காட்டிற்று. சீரிய என்ப ரி இடைக்குறை. தமிழல்லாத மொழியில் சீரிய > சீய > சியா என்று பிறழ்வு மேற்கொண்டது.

மாலுதல் என்ற வினைச்சொல் தமிழ். மாலினேன், மால்கிறேன், மாலுவேன் என்பன வினைமுற்றுக்கள்.

சீரியமாலை > சீயமாலை > சீயமாலா > சியாமலா>சியாமளா.

லகரத்துக்கு ளகரம் மாற்றீடு ஆனது.  மங்கலம் > மங்களம் ஆனது போலும் திரிபு . மங்கல் என்பதில் அல் என்பதே விகுதி.  மங்குதல் வினை: >மங்கு, அல் அதனுடன்  அம் விகுதி இணைந்தது.  வெண்மை குன்றி மஞ்சள் நிறம் ஏற்படும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்பட்டுள்ளது.

வியாழன், 17 ஜூலை, 2025

மூலிகை என்ற சொல் தமிழ்

 இப்போது மூலிகை என்ற சொல் காண்போம்.

மூலச் சொல் முல் என்பது. இதிலிருந்து அமைந்த பண்டைச் சொற்களில் இன்னும் வழங்கிக்கொண்டிருக்கும் சொல் முலை என்பது.  முல் என்ற அடிக்கு அர்த்தம் என்ன என்றால் ''முன்னிருப்பது''  என்பதுதான். முல்லை என்ற பூவின் பெயர் இன்னொன்று. ஐந்து நிலங்களில் முல்லை நிலம் என்பதும் ஒன்றாக இருப்பதால் முல்லை என்பது ஒரு மிக்கப் பழமையான ஒரு சொல்லாகும். நிலங்கள் நான் காகவோ ஐந்தாகவோ பிரிக்கப்படு முன்பே இச்சொல் இருந்த காரணத்தால்தான், முல்லைப்பண் முதலிய சொல்லமைப்புகள் ஏற்பட்டன. காந்தன், காயாகுருந்து, கொன்றை, துளசி முதலிய மண்ணில் முளைப்பன முல்லை நில மரங்கள் எனப்பட்டன என்பதும் காண்க.  வேறெங்கும் எவையும் முளைப்பதில்லை என்று கூறலாகாது.  வெள்ளி முளைக்கிறது என்ற  சொல்வழக்கு இருக்கிறதே. அது வேறுவகையான முளைப்பு ஆகும்.

இவை கூறியது முல்லை, முலை எனப்படுவன பழஞ்சொற்கள்   என நிறுவுதற் பொருட்டு.

முல் > மூல்.  குறிலும் நெடிலும் சொற்களுக்கு முதலாய் வரும். வருக, வாருங்கள் ( வாங்க)  என்று வா என்ற சொல்லே நெடிலிலும் குறிலும் பகுதிகள் மாறுகின்றனவே,  இவை அறிந்து தெளிக.

இ -  என்பது ஓர் இடைநிலை.  அன்றி ''அருகில்'' என்ற பொருளை எடுத்துக்காட்டினும் இழுக்காது என்று உணர்க.

கை என்பது பக்கத்திலிருப்பவை என்று உணர்த்தும் ஒரு விகுதி.  தமிழன் வாழ்ந்த நிலத்தில் இந்த மூலிகைகள் வளர்ந்து கிடந்தன.  அவற்றை அவன் பயன் கொண்டான் என்பதுதான் சரித்திர உண்மை.  கட்டுக்கதைகள் ஏதுமின்றி சரியாகவும் திறமாகவும் சொல்லப்படுபவை சரித்திரம் அல்லது வரலாறு எனப்படும்.  திறம் என்பது விகுதியாக வருகையில் திரம் என்று மாறிவிடும். ஒரு கூட்டுச்சொல்லின் அல்லது சொல்லமைப்பின் பகவாக வரும்போது திறம் என்ற சொல் திரம் என்றாகும்.

மூலிகை என்ற சொல் இவ்வாறு அமைந்த எளிமையான சொல்.  இது சமஸ்கிருதம் என்று சிலர் கூறுவதுண்டு.  மூலிகை என்பது சிற்றூர்ச்சொல். இது பூசைமொழியிலும் சென்று வழங்கியது.  இப்போது பூசைமொழியும் இந்திய மொழியே ஆதலால், அதுவுல் தமிழினுள் அமைந்ததே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்.

இப்பதிவு பகிர்வுரிமை உடையது,. 

செவ்வாய், 15 ஜூலை, 2025

புன்மை ஒழிந்து இனிமை உண்டானால் அது புனிதம்.

 புனிதம் என்பது தீமை அற்ற நிலை. விலக்கத்தக்க எதுவும் இல்லாமலாவது. இதற்கான சொல் எப்படி உண்டாயிற்று?

ஓரிடத்தில் சேறும் சகதியுமாய் இருக்கிறது.  புவியில் எந்த இடத்தை நோக்கினாலும் கல்லும் மண்ணுமாகத்தாம் இருக்கிறது.  இந்த இடங்களைத் தூய்மைப் படுத்தி கடவுளைத் தொழத் தொடங்குகிறோம். தூய்மைப் படுத்தும்போது அது புனிதமான இடமாக மாறிவிடுகிறது.

புன்மை என்பதன் அடிச்சொல் புல் என்பதுதான். புல்+ மை > புன்மை. தூய்மை செய்யப்பட்டு இனிதானால்:

புல் + இனிது + அம் >  புல்லினிதம் > புனிதம்  ஆகிவிடும்.

அழுக்கு நீங்கும் வண்ணம் தூய்மை செய்து முடிக்கவேண்டும்.

மறைமலையடிகள் அதைப் புனல் என்ற சொல்லினின்று விளக்கினார். புனல் இனிதாக்குகிறது என்றார்.

இதன்படி புனல்+ இனிது + அம் > புனலினிதம் >  புனிதம்.  கழுவுதலால் புனிதம் உண்டாகிறது.

சமஸ்கிருதம் என்பது இந்திய மொழிதான்.  ,மேலைநாட்டு மொழியன்று.  அதிலிருந்து பல சொற்களை மேலை நாட்டினர் கடன்பெற்றனர். மொழிவளத்தை உண்டாக்கிக் கொண்டனர்.  

உரோமப் பேரரசுக்கு ஓர் ஆட்சிமொழி தேவைப்பட்ட போது அவர்களும் சமஸ்கிருதத்திலிருந்தும் தமிழிலிருந்தும் பல சொற்களைக் கடன்பெற்றனர்.  தமிழ் நாட்டிலிருந்து  ஒரு புலவர் குழுவே சென்று உதவிற்று என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் ஆய்ந்து கூறியிருக்கிறார்.  இந்த விவரங்களை மயிலை சீனி வேங்கடசாமி விளக்கமாகச் சொல்லியுள்ளார்.

புன்மை ஒழிந்து இனிமை ஆவதே புனிதம் ஆகும்.  இச்சொல் ஓர் இருபிறப்பி  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.