செவ்வாய், 15 ஜூலை, 2025

புன்மை ஒழிந்து இனிமை உண்டானால் அது புனிதம்.

 புனிதம் என்பது தீமை அற்ற நிலை. விலக்கத்தக்க எதுவும் இல்லாமலாவது. இதற்கான சொல் எப்படி உண்டாயிற்று?

ஓரிடத்தில் சேறும் சகதியுமாய் இருக்கிறது.  புவியில் எந்த இடத்தை நோக்கினாலும் கல்லும் மண்ணுமாகத்தாம் இருக்கிறது.  இந்த இடங்களைத் தூய்மைப் படுத்தி கடவுளைத் தொழத் தொடங்குகிறோம். தூய்மைப் படுத்தும்போது அது புனிதமான இடமாக மாறிவிடுகிறது.

புன்மை என்பதன் அடிச்சொல் புல் என்பதுதான். புல்+ மை > புன்மை. தூய்மை செய்யப்பட்டு இனிதானால்:

புல் + இனிது + அம் >  புல்லினிதம் > புனிதம்  ஆகிவிடும்.

அழுக்கு நீங்கும் வண்ணம் தூய்மை செய்து முடிக்கவேண்டும்.

மறைமலையடிகள் அதைப் புனல் என்ற சொல்லினின்று விளக்கினார். புனல் இனிதாக்குகிறது என்றார்.

இதன்படி புனல்+ இனிது + அம் > புனலினிதம் >  புனிதம்.  கழுவுதலால் புனிதம் உண்டாகிறது.

சமஸ்கிருதம் என்பது இந்திய மொழிதான்.  ,மேலைநாட்டு மொழியன்று.  அதிலிருந்து பல சொற்களை மேலை நாட்டினர் கடன்பெற்றனர். மொழிவளத்தை உண்டாக்கிக் கொண்டனர்.  

உரோமப் பேரரசுக்கு ஓர் ஆட்சிமொழி தேவைப்பட்ட போது அவர்களும் சமஸ்கிருதத்திலிருந்தும் தமிழிலிருந்தும் பல சொற்களைக் கடன்பெற்றனர்.  தமிழ் நாட்டிலிருந்து  ஒரு புலவர் குழுவே சென்று உதவிற்று என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் ஆய்ந்து கூறியிருக்கிறார்.  இந்த விவரங்களை மயிலை சீனி வேங்கடசாமி விளக்கமாகச் சொல்லியுள்ளார்.

புன்மை ஒழிந்து இனிமை ஆவதே புனிதம் ஆகும்.  இச்சொல் ஓர் இருபிறப்பி  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.

திங்கள், 14 ஜூலை, 2025

ஐப்பசி மாதம், அப்பியை மாதம் என்னும் மாதப்பெயர் திரிபுகள்.

 இப்போது ஐப்பசி என்ற மாதப்பெயரையும்  அதன் மாற்று வடிவங்களையும் ஆய்ந்து காண்போம்.

ஐப்பசி என்ற சொல்லை  ஐ+ பசி என்று பிரித்து  அதற்குப் பொருள் சொன்னால் ஒருவேளை பொருளும் ஆய்வும் தவறாக முடியலாம்,  ஏனெனில் ஐ என்பது சொல்லாக்கத்தில் ஒரு பகவு ஆயினும் பசி என்பது  சரியான பொருளைத் தரவியலாத திரிபு   ஆகும்..

பசி என்பதற்கு இங்கு உடலுக்கு உணவு தேவைப்படுதல் என்ற பொருளுடைய சொல்லன்று.

ஐ என்ற முன்வரும் பகவு முன்  ஆசு என்பதன் திரிபு.   ஆசு என்பது  ஆதல் என்ற சொல்லின் முதலெழுத்து.  சு என்பது ஒரு விகுதி.   ஆசிடையிட்ட எதுகை என்ற தொடரில்  ஆதலென்ற வினையின் முதலெழுத்து வருகிறது.  ஆசு என்றால் பற்றுக்கோடு என்ற பொருளும்  உள்ளது. பற்றுக்கோடு என்பது பேச்சுவழக்கில் ஆதரவு என்ற சொல்லால்  குறிக்கப்படும்.  ஆ என்பது பசு என்ற பொருளில் வருவதுடன்  ஆ(தல்) என்றும் வினையாகவும் உள்ளது.   ஆ என்பது  மாடு என்று பொருள்படுகையில்  ஆக்கம் தரும் விலங்கு என்று உணர வேண்டும்.  அதனால்தான் அதற்கு ஆ என்று பெயர்.  மாடு என்பதும் செல்வம் என்று பொருள்தரும்.  

இகம் என்பது  இ+ கு+ அம் என்பன இணைந்த சொல்லாதலாதலின் இவண் சேர்ந்து இணைந்திருப்பது என்று பொருள் காணவே,  இவ்வுலகம் என்றும் இங்கிருப்பது என்றும் பொருள்படும்.

ஐப்பசி   என்பது முன்னர் ஐப்பிகை என்று கல்வெட்டில் வந்துள்ளது. இது ஐ+ பு + இகை என்ற பகவுகளின் இணைப்பு.  பு என்பது இடைநிலை.  இகை என்பது இகம் என்பதன் திரிபுதான்.  இறுதி ஐ  விகுதி  பெற்றது.

இகு என்பது அம் விகுதிபெறாமல்  இகரவிகுதி பெற்று  இகி என்றாகிப் பின் இசி என்றாயிற்று. இது ககர சகரப் போலி.    சேரலம் >கேரளம் என்பது போல.  இது பிற மொழிகளில் வரும்.  ஆங்கிலத்திலிலும் ஐரோப்பிய மொழிகளிலும் காணலாம்.  அக்டோபர் மாதத்தில் தொடரும் பருவ காலமாகையினால் ஐப்பசி என்பதற்குத் தொடரும்  மாதம் அல்லது காலம் என்று பொருள் உரைத்தல் வேண்டும். 

ஆய்ப் பயில்வது என்ற தொடரை எடுத்துக்கொண்டால்  :  ஆய் > ஆயி>  ஆசி> இது குறுகி: அசி  >  பசி  ( ஐப்பசி)  என்று  ஐப்பசி என்பதுடன் தொடர்பு படுவதை உணரலாம். ஐப்பசி என்பது  பு+ அசி தான். பயி என்ற இரண்டெழுத்துகளும்  பயி > பசி என்றாதலைக் காணலாம்.  ஆகவே ஆய் என்பதை அய்> அயி> ஐ  என்று நிறுத்திவிட்டு,  பயி > பசி என்று காணின்,  ஐ-- பசி  என்று எளிதாக வந்திருக்கின்றது. ஐப்பசி என்பதற்குப்  பலவாறு விளையாடிக்கொண்டிருந்தாலும்  அன்பருக்கு ஆய்ப் பயில்வது என்று மட்டும் சொல்லி மற்றவற்றைத் தராவிட்டாலும் ஐப்பசி என்பதை விளக்குதல் எளிதுதான்.

தொடர்பு குறிக்கும் மாதம் ஆதலால்  அப்பி இயைப்பதான மாதம் என்றும் சொல்லிவிடலாம். எல்லாம் இதன் பால் உள என்று சொல்லுமளவுக்குப் பொருத்தமுடைய மொழி தமிழ். ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைத் தமிழில் காட்டுவது  இந்த வசதியினால்தான்.

உலகத் தொடக்கமாய் இருந்ததனால் பலவும் ஒன்றாய்க் காணக்கிடைக்கின்றது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை தரப்படுகின்றது.

ஞாயிறு, 13 ஜூலை, 2025

வில்லாளன், விக்கிரமி சொற்களில் மறைந்திருக்கும் உண்மை..

 விக்கிரமி என்ற சொல்லுக்குச் சிங்கம் என்ற பொருளுடன் வீரம் என்ற பொருளும் கிடைக்கிறது.  என்ற போதிலும் ஒப்பீட்டுச் சொல்லியல் என்று வருகையில், அதனை வில் என்ற பழைய போர்க்கருவியின் அடிப்படையில் அமைந்த சொற்களுடனும் பொருண்மையுடனும்தான் நிறுத்திப் பார்க்கவேண்டும்.  விக்கிரமி என்ற சொல் ஒரு கருவிப்பெயரின் அமைப்பிலிருந்து எழுந்த சொல்லாகும் என்று உணர்க. இது எவ்வாறு என்று பார்ப்போம்.

வில் + கு+ இரு + அம் + இ  என்று இதைப் பிரிக்கவேண்டும்.  இவ்வாறு செய்கையில் வில்லுக்கு இருக்கின்ற அமைப்பில் இணைந்திருப்பது என்ற பொருள் கிடைக்கிறது. இந்த வில்லின் அமைப்பில் இணைந்திருப்பது எது என்று ஆராய்ந்தால் அதுதான் வீரம் என்று பொருண்மை கிட்டுகின்றது.  ஆகவே விக்கிரமி என்பதற்கு வீரம் என்ற அகரவரிசைப் பொருள் கிட்டிவிடுகின்றது.

பண்டைக் காலத்தில் வில்லும் ஒரு சிறந்த போர்க்கருவியாய் இருந்தது. வில்லாளன் என்ற சொல்லும் இக்கருவிகளைப் பயன்படுத்திய வீரர்களின் மறப்பண்பினைப் போற்றி எழுந்த சொல்தான். இதையே விக்கிரமி என்ற சொல்லும் எடுத்தியம்புகின்றது.

சொற்புணர்ச்சித் திரிபின் காரணமாக விக்கிரமி என்ற சொல் அவ்வளவு தெளிவாகத் தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதில்லை.

வில்லுக்கும் விக்கிரமிக்கும் உள்ள தொடர்பினைக் கண்டீர்கள்.

இதில் விற்கு என்பது விக்கு(இரு) என்று வந்தது முறையாக வந்த திரிபுதான். விற்கு என்பது விக்கு என்று வருவது பேச்சுவழக்குத் திரிபுபோல் தோன்றலாம். நல்+கீரன் என்பது நக்கீரன் என்று வர, இந்தவகைத் திரிபுகள் இல்லை என்று கூறிவிட முடியாது. நல் என்பது ந என்று கடைக்குறையானது என்றால் அதுவேபோல் வில் என்பது வி என்று கடைக்குறையாகலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.