சனி, 30 நவம்பர், 2024

சுதேசி - சொல்.

 சொந்த தேசத்திலே இருப்பவன் சுதேசி  எனப்படுகிறான். இந்தச் சொல் தமிழ் மூலங்களிலிருந்து வருவது என்றாலும் அயல்போல் தோன்றுகின்றது. இஃது எப்படி அமைந்த சொல் என்று பார்ப்போம்.

பழந்தமிழில் தேஎம் என்றிருந்த சொல் திரிந்து  "தேயம்"  என்று எழுதப்பட்டது. தேஎம் என்பது அளபெழுந்த வடிவம். இதன் மூலவடிவம் தேம் என்றிருந்திருக்க வேண்டும். ஆயின் தேம் என்பது பிற பொருண்மைகளும் உடையதாய் இருந்தமையால்,  அளபெழுந்த தேஎம் என்பதே பெரும்பாலும் தேயம் (தேசம்) குறிக்க வழங்கப்பட்ட தென்று தெரிகிறது.  தேம் இனிமை என்பதும் ஒரு பொருள்.

இவற்றிலிருந்து தேயம் என்பது தமிழிலிருந்து வந்த சொல் என்பது  தெளிவாகிறது.

அப்பனுக்கு இருந்த பெரிய நிலப்பரப்புக் கொண்ட தேசம்,  தேய்வதற்கு, அரசனின் பிள்ளைகள் பங்குவைத்துக் கொள்வதும் ஒரு காரணம். இரண்டாம் மூன்றாம் இளவரசர்களுக்கு பகுதிகள் ஒதுக்கப்பட்டு, வருமானத்திலும் பங்குகள் அளிக்கவேண்டி இருந்தது. அல்லது புதிய பகுதிகளை வென்று, அவர்களுக்கு அளிக்கவேண்டி இருந்தது.

காலம் செல்லச்செல்ல, தேய்வதுதான் தேசம்; எனவே தேய் என்ற அடிச்சொல்லே தேசம் என்ற சொல்லுக்கு ஆக்கம் தந்தது.  இச்சொல் பிற்காலத்தில் குறுகிய  பயன்பாடு உடையதாயிற்று என்று தெரிகிறது. தேய்வதுதான்: தேய்வது விரும்பப் படவில்லை.

அது சமகிருதத்தில் நல்ல வழக்குப் பெற்றது.   தேய்தற் கருத்து  அங்கு எழவில்லை.

தேசத்தை உடையவன் அல்லது சேர்ந்தவன் தேசி.   தேசம்+ இ > தேசி.  அம் இறுதி வீழ்ந்தது.

சுதேசி என்றவன் சொந்த நாட்டினன்.  சொந்த என்ற சொல் சு என்று திரிந்தது.  சொந்தம் > சொ > சு.  இது தேசி என்பதுடன் இணைப்புற்று சுதேசி என்றானது.

சமஸ்கிருதச் சொல்லாக இச்சொல் நல்வாழ்வு மேற்கொண்டது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



வெள்ளி, 29 நவம்பர், 2024

பொட்டலம் - சொல்லமை. பார்சல்.

 பொட்டலம் என்ற தமிழ்ச்சொல் இப்போது பெரிதும் வழங்குவதில்லை. அதற்குப் பதிலாக,  ஆங்கிலச் சொல்லான பார்சல் என்பது தமிழ்நாட்டில் சென்னை முதலிய இடங்களில் வழங்குகிறது.  மலேசிய சிங்கப்பூர் முதலிய இடங்களில் "கட்டுதல்", பேக் - பேக்கட், தா-பாவ் ( சீனமொழி), புங்கூஸ் ( மலாய்)  முதலியவை வழங்குகின்றன.  இது கடையில் சாப்பிடும் பொருட்கள் வாங்கிக் கட்டிக் கொண்டுவரும் போது மக்கள் வழங்குபவை.

பொட்டுதல் என்ற தமிழ்ச்சொல் சேர்ந்திருந்த பொருள் பிரிவு படுவதைக் குறிக்கிறது.  பார்சல் என்ற சொல்லும் ஒரு பகுதியாகத் தரப்படுவதையே குறிப்பதாக அறிவுறுத்துவர்.  பார்சல் என்ற பொட்டல அஞ்சல் செய்தலை நாம் ஒன்றாகக் கட்டி ஒட்டிக் கொண்டுபோய் அஞ்சலகத்தில் கொடுத்தாலும், அவர்கள் அதை ஏற்கத் தக்க அளவிலான துண்டுக் கட்டுகளாக நம்மிடமிருந்து பெற்று அப்பால் அனுப்புவதையே மையக் கருத்தாகக் கொண்டு, " பகுதிக்கட்டு" என்ற பொருளில்தான் பெற்றுக்கொண்டு அப்பால் சேரவேண்டியவருக்கு அனுப்புகிறார்கள்.  அனுப்புகிறவர் கட்டுதலை நினைக்க, ஏற்று அப்பால் பெறுவோர்பால் கடத்துகிறவர்களான அஞ்சலகத்தார்  பொட்டுதலுக்காகவே ( பிரித்துக் கட்டியதற்காகவே) மகிழ்வுடன் பெற்று அனுப்புகிறார்கள் என்பதை உணர,  மாறுபாட்டினால் வரும் ஏற்பாகவே இது படுகின்றது.  அஞ்சல்காரர் ஏற்கமுடியாத அளவுக்குப் பெரியனவானவற்றை நம் சொந்த ஏற்பாட்டில்தான் பெறுவோருக்கு அனுப்பிவைக்க முடியும் என்பதுதான் இதற்குக் காரணமாகும். அதாவது மிக்கப் பளுவானவற்றைச் சொந்தப் பளுவுந்துகளில்தாம்  அனுப்பவேண்டும். ஆகவே பிரித்து அனுப்புதல் என்பதே பார்சல் என்பதன் பொருள். 

"பார்ட் அண்ட் பார்சல்" ( part and parcel )  என்ற சொற்றொடரும் இதைத்தான் புலப்படுத்தும்.

ஆனால் பொட்டலம் என்பது சேர்த்துக் கட்டிக் கொண்டுவருதல் குறிப்பது.  பொட்டு (தல்) -  வெடித்துப் பிரிதல்,  அடுத்த பகவு,  அல் என்பது, அல்லாததைக் கொணர்ந்து நிறுத்துகிறது.  ஆகவே இரண்டும் சேர்ந்து சேர்த்துக் கட்டப்பெறுவதை உணர்த்தும்.  அம் என்பது அமைப்புக் குறிக்கும் விகுதி.

பொட்டியதைக் கட்டி அனுப்புவதனால் அது பொட்டலம் என்று வழங்கப்பட்டது.  பொட்டல் என்ற சொல்லின் பொருள் வேறுபட்டது ஆகும்..  அது எதுவும் முளைக்காமல் கிடக்கும் நிலப்பகுதியைக் குறிக்கும்.

பொள் என்ற அடிச்சொல்லில் வருவதுதான் பொட்டித்தல் என்பது.  புள்> பொள் என்பன பிரிவுக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட வேர்ச்சொற்கள் ஆகும்.

இவ்வாறு இடையில் அல் ( அல்லாமை) வந்த சொற்கள் தமிழில் பல. அவற்றுள் தீபகற்பம் என்ற சொல் இங்கு நினைவுகூரத் தக்கது.  தீவகம்+ அல்+ பு+ அம் > தீவக + அல் + பு+ அம் > தீவகற்பம் > தீபகற்பம்  (  மண்ணிணை)  -  பொருள் கண்டுகொள்க.  தீவு என்பது தீர்வு என்ற சொல்லின் திரிபு.  நில இணைப்பு முற்றிலும் தீர்ந்த பெரிய திட்டு நிலம்,  தீவகம் என்பது தீவு+ அகம்.  உள்ளே நிலமுடைய பெரிய திட்டு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர். 

வியாழன், 28 நவம்பர், 2024

வஞ்சி என்ற சொல்லமைப்பு

 பாடலோ கவிதையோ சிலவற்றை எழுதும்போது சொற்கள் வாயில்வந்த படியே அமைக்கப்பட்டு ஒரு சொல்லும் இன்னொரு சொல்லும் எவ்வாறு இணைகின்றன என்று கவலைப்படாமல் (சொற்களை)  ஒன்றுடன் ஒன்று ஒட்டி எழுதினால், அது உண்மையில் வாயில்வந்தபடி எழுதின பாட்டு அல்லது கவிதை எனலாம். நீண்டு வரும் சொற்களைக் கூடக் குறுக்காமல் மாற்றம் எதுவும் செய்யாமல் எழுதினால் ஒவ்வோரடியும் நீண்டு அமையும். இசைக்க ஏற்புடையனவாக இருக்கமாட்டா. இவ்வாறு வந்தது வந்தபடி வைத்துக்கொண்ட பாடலைத் தான் ஆதிகாலத்தவர்கள் வஞ்சி என்று சொன்னார்கள்.

வரும் இன்று >  வரும் இன்னு > வருன்னு > வன்னு > வன்.

வன் + சி >  வஞ்சி.

மென்மைப்படுத்தப் படாத,  வன்சீர்களை உடைய பாடல்.  சீர் என்பது சி என்று குறுக்குற்றது.

மக்களிடை ஒவ்வொருவருமே

தக்கபடி வாய்நீட்டிய

ஒக்கவந்தவர் உரைக்காதோர்

வெட்கி நின்றார்  கூட்டியவை

என்று தொடங்கினால்,  இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகலாம்.

இது வருஞ்சீர்களை வைத்து எழுதியவை என்ற கருத்தின் குறுக்கமாகவும் இருக்கலாம்.   வருஞ்  சீர் >  வஞ்சீர் >  வஞ்சி.  இடையில் உள்ள எழுத்துக்கள் விடப்பட்டன.

ஆகவே இச்சொல்லை பல்பிறப்பி எனலாம்.

வந்தபடி ஒரு பெண்ணை ஏற்றுக்கொண்டாலும் ( கேள்வி கேட்பாடு இல்லாமல் )  அவளை வஞ்சி என்னலாம்.

கேட்பாடு என்றால்  கேட்டுக் கேட்டு நேரம் எடுத்துக்கொள்ளுதல் )

தொடக்கத்தில் வன்மையுடன் தொடங்கியவை வஞ்சி என்று கொள்ளவேண்டும். இவற்றுக்குள் மென்மை என்பது காலக்கடப்பினானாலேதான் ஏற்பட்டிருக்க முடியும்.

எடுத்த எடுப்பிலே எல்லாம் சீராக அமைந்துவிட்டன என்று எண்ணுபவன் சிந்திக்கத் தெரியாதவன் ஆவான். இன்று நாம் பெறுகின்ற உரிமைகள் கொடுப்பனைகள் எல்லாம் அமைதியாக வருவதற்கு இடையில் பல போராட்டங்கள் நடைபெற்றன.  அரசனைக் கழுத்தை வெட்டித் தூக்கிக்கொண்டுபோன வரலாறுகளும் உண்டு.  பலர் இரத்தம் சிந்த வேண்டியிருந்தது.  வரலாறு படித்தறிதல் முதன்மையாகும்.  பெருங்குளறுபடிகள், போராட்டம், வெட்டுக்குத்து,  அரசு வீழ்ச்சி, புரட்சி, பின்னர்தான் நாகரிகம் நன்றாக அமைந்தது.  ஆகவே பட்டறிவு இல்லாதவன் படிப்பறிவு என்று எண்ணிக்கொண்டு உளறலாகாது..  மற்ற நாடுகளின் வரலாற்றையும் படிக்கவேண்டும்.

வன்மை +  சீறு(தல்) > வன்சீறு > வஞ்சி யாகவும் இருக்கலாமே. 

சீர் என்ற சொல், சி என்று குன்றியது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்