வியாழன், 5 செப்டம்பர், 2024

அக்கினிவன்ஷி என்ற திரிசொல். அக்னிஹோத்திரி தமிழ் முன்சொலவு.

 இந்தச்  சொல், தமிழுக்குத் தொடர்பில்லாதது போலக் காணப்படுகிறது. இதன் காரணம்  அக்கினி என்ற சொல்லும்  வன்ஷி என்ற ஷிகரம்  வரும் சொல்லுமாகும்.

இச்சொல்லில் வன்ஷி என்பதை முதற்கண் துருவிச் சிந்திப்போம்.

வருமிசை என்பது தமிழ்த் தொடர். இதன் பொருள் மேலும் வருதல் என்பது. மிசை என்பது பழந்தமிழ்ச் சொல். " மலர்மிசை ஏகினான் மாண் அடி  சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்" என்பது குறள்.  மிசை என்றால் மேல்.  மலர்மிசை என்றால் மலர்மேல்.  அகமிசைக்கு இவர்ந்தோன் என்று தொல்காப்பியத்திலும் வரும் சொல்தான். மண்டலத்தின் மிசை ஒருவன் என்று தாயுமான சுவாமிகளும் இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்.  உதட்டின் மிசை இருப்பதனால் மிசை என்பதில் முதலெழுத்து நீண்டு "மீசை" என்ற சொல்லாகி உதட்டின்மேற்பகுதி வளர்முடியைக் குறிக்கிறது .  ஆகவே இது தனித்தமிழ்ச் சொல் என்று கொண்டாடலாம். மறைமலையடிகள் 'மேல்' என்னாமல் 'மிசை' என்று எழுதிய இடங்களும் அவரது நூல்களில் உண்டு.

வம்மிசம் என்ற சொல்  வரு+ மிசை+ அம் என்ற மூன்று பகவுகளால் உருப்பெற்ற சொல்.  சங்கத் தமிழில்  வம்மின் மக்காள் என்றால்  வாருங்கள் அல்லது வருக மக்களே என்பதே பொருள்.  வரு என்ற வினைப்பகுதி வா என்றும் வ(ந்தான்) என்றும் குறுகும்.   வா> வ.  இப்போது வரு மிசை அம் என்பதை  வ + மிசை+   அம் என்று குறுக்கிக்கொள்ளலாம்.  மிசை என்பது அம்முடன் இணைந்து மிசம் என்றும் ஆகும்.  ஐகாரம் கெடும்.  அம் விகுதி பெறும்.  இப்படி வந்ததுதான் வம்மிசம் என்ற சொல். இகரம் (மி : இ)   குறுகின் வம்சம். இதில் ம் என்ற ஒற்றும் தொலையும்.

இது இந்தோனிசிய மொழிக்கும் போய் இருக்கிறது. புத்திரி வங்க்ஸா  என்றால் குலக்கொழுந்து என்றும் வம்மிச இளவரசி என்றும் பொருள்.

வம்மிசம் என்பது வம்மிசி > வம்சி என்றும் ஆகும்.  இனத்து மிசைத்தொடர் என்ற பொருள் ஏதும் மறைந்துவிடாது. அக்கினி வன்ஷி என்றால் தீயைத்தரு குலம் என்று பொருள். அக்கினி என்பது  தீ  - நீங்கள் அறிந்த பொருள்.

வம்சி > வன்ஷி.  மகரம் னகரமாய் உருமாறுவது உலக மொழிகள் பலவில் காண்புறுவது.

அக்கினி என்பது விளக்கப் பட்டுள்ளது:  https://sivamaalaa.blogspot.com/2022/03/blog-post_14.html.  அதையும் அறிந்து மகிழ்க. தீ மூட்டுதல் அறிந்த பின்னும் ஒவ்வொரு முறையும் அணைந்தபின் அதை மீண்டும் மூட்டுவது எளிதாய் இருக்கவில்லை. இவ்வாறு தீயை மீளவும் மூட்டிச் சேவை செய்தோர் பாராட்டுக் குரியவர்கள். இவர்கள் அக்கினிஹோத்திரி எனப்பட்டனர்.

உய்த்து இரு இ > உய்த்திரி> ஒய்த்திரி> ஹோத்திரி  என்று திரியும். உய்த்தலாவது உண்டுபண்ணி வேண்டும் காலம் வரை நடைபெறுவித்தல். உய்த்தல் என்பது சுட்டடிச்சொல்.  நிலம், தீ, நீர்,வளி , விசும்போ டைந்தும்  கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்றார் தொல்காப்பிய முனிவர். இவற்றுள் தீயும் நீரும் இன்றியமையாதவை. நிலம் இல்லையேல் உலகம் இல்லை,  விசும்பும் காற்றும் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாதவை . என்றாலும் மனிதன் அவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்கிறான்.

உய்த்திரு > உய்த்திரம் > ஹோத்திரம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

மெய்ப்பு: 0553   06092024 சில மாற்றங்கள்


செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மாலை செய்து போடுவதால் எதுவும் நடைபெறாதோ?

 பூக்களை மாலைகளாகக் கட்டி ஒரு சிலைக்கு அணிவித்தால் கடவுளைக் கண்டுவிட முடியாது என்று ஒரு நபர் கூறும் ஒரு காணொளியைப் பார்த்தேம். உம் நுகரறிவின்படி நீர் கூறுவது சரிதான். அது எமக்குச்  சரியன்று. இப்படிப் பூவணிவித்து யாம் அறிந்துகொண்டது வேறு.  கடவுள், தொழுகை எனத் தொடங்கி மனிதகுலத்தில் அறியப்படும் பலவற்றிலும்  ஒருவனுக்குச் சித்திப்பது இன்னொருவனுக்கு வெற்றிபெறாது. இதில் ஒரு வெற்றியும் பெறாமல் நீர் இருக்கவேண்டும் என்பது உமக்கு விதியானால்,  யாம் ஏன் அதை உமக்குத் தெரிவிக்கவேண்டும். நீர் இதைக் கண்டுகொள்ளவேண்டாம்.

எமக்கு உறுப்பினர்கள் தேவையில்லை. யாம் ஒரு மத நிறுவனர் அல்ல.

ஆரம்பம்

இந்த ஆரம்பம் என்னும் சொல், பல் பிறப்பி  ஆகும். இதைப் பல வழிகளில் துருவிச்சென்று பல்வேறு பொருண்முடிபுகளை உரைக்கலாம். இதை இப்போது இன்னொரு கோணத்திலிருந்து பிரித்து அறிவோம். மனிதன் தன் தொடக்க காலத்தில் கோவணமும் கட்டத் தெரியாமல் இலை தழைகளைக் கட்டிக்கொண்டு காட்டில் சஞ்சரித்தவன். நெய்தல் தொழிலுடையோர் ஆடைகள் செய்யத் துணிசெய்து கொடுத்து அவனை மானம் காத்தனர். அவன் சிறிது சிறிதாகவே பலவற்றையும் அறிந்து இன்று பல கோள்களுக்கும் சென்றுவரும் நிலையை அடைந்திருக்கிறான். உரோமாபுரி ஒருநாளில் அமைக்கப் பட்டதன்று என்றபடி அவன் முன்னேறிவந்துள்ளான் என்பதே உண்மை.  சீலை என்ற சொல்லே சீரை என்பதன் திரிபு.  தமிழ் என்ற பண்டை மொழியின் மூலம் இது மரப்பட்டையைக் குறிக்கும் என்பதும் இப்போது சீலை சேலை என்று மாறி அழகிய காஞ்சிபுரச் சேலையையும் காசிபுரச் சேலையையும் குறிக்கிறது என்பதையும் தமிழ்மொழிச் சொல்லாய்வு நமக்குத் தெரிவிக்கிறது.

ஆரம்பம் என்ற சொல்லின் உள்ளில் உள்ள சொற்பகவுகளைப் பட்டியலிடுவோம்.

அரு  -   தொலைவு குறைதல். 

அண் -  இதிலிருந்து அண்முதல் என்ற வினைச்சொல் வருகிறது.  "செயலுக்கு நெருக்கம்" உணர்த்தும் சொற்பகவு,

பு  -  புகுதல், தொடங்குதல்.

இ -  இது வினைப்படு  விகுதி.  இதை வினையாக்க விகுதி என்றும் குறித்துமுள்ளோம்.

அம் -  அமைப்பு குறிக்கும் விகுதி.

அரு + அண் + பு + இ + அம்  >  ஆரண்பம்.  >  ஆரம்பம் ( இது இறுதி அல்லது இப்போது இருக்கும் திரிபுச்சொல்)

இதன் பொருள்:  தொலைவு கடந்து நெருங்கிப் புகுந்து அமைதல்  என்பதாகும்.

துவங்குதல் தொடங்குதல் என்பதுதான் முற்ற  அறியும் பொருள்.

ஆரம்பம் என்ற சொல் ரம்பம் என்று முடிந்தாலும் இதில் ரம்பம் எதுவும் இல்லை. 

ஆரம்பி என்பது வினைச்சொல்.

நிலவை ஆராயும் மனிதன் அவன் தன் ஆய்வுக்கருவி அமைப்பினை நிலவில் இறக்கினாலே  ஆராய முடிகிறது, அருகிற் செல்வது வேண்டப்படுவது என்பதை இச்சொல் காட்டுகிறது,  உண்மையும் அதுதான். மனிதனுக்கும் ஆய்படு பொருளுக்கும் உள்ள இடைத்தொலைவு குறைதல் முதன்மை ஆகும். இதை அரு ( அரு, அருகுதல் ( தொலைவு குறைதல்) , அருகில் என்ற சொற்கள் தெரிவிக்கும். அரு என்ற சொல் அடுத்துவரும் அண் என்ற சொல்லின் முன் ஆர் என்று திரிதல் தமிழின் செம்பான்மையைக் காட்டுகிறது.  அண் என்பதும் வேண்டிய சொல்லே ஆகும்.  அண்மித்துப் புகுதல் என்பது இச்சொல்லால் வலியுறுத்தப் படுவதொன்றாம்.  அண்பு என்பது அம்பு என்று இயைக்கப்படுகிறது.  இதுவும் நல்ல திரிபே ஆகும்.

அறிக மகிழ்க/

மெய்ப்பு பின்.