செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

மெட்டி இடுதல்

 மெட்டி இடுதல் என்ற இருசொற்களின் புணர்வில் யகர உடம்படுமெய் வந்து இருசொற்களும் ஒரு சொன்னீர்மை  எய்துதல் வேண்டும்.  இது "மெட்டியிடுதல்" என்று வரும்.  இது தமிழ்ப் புணரியலில் வரும் இயல்பான இலக்கண முடிபு ஆகும்.

மெட்டுதல் என்ற வினைச்சொல் எட்டி உதைத்தலைக் குறிக்கும்

மெட்டு-தல் meṭṭu-tal from University of Madras "Tamil lexicon" (p. 3335)

மெட்டு¹-தல் meṭṭu- , 5 v. tr. cf. நெட்டு-. [K. meṭṭu.] To spurn or push with the foot; காலால் தாக்குதல். நிகளத்தை மெட்டி மெட்டிப் பொடிபடுத்தி (பழனிப்பிள்ளைத். 12).


இந்தக் கால் தாக்குதலில் தாக்கப்படுவோனுக்கு  அதிக வலி ஏற்படுத்தற்பொருட்டே இரும்பு அல்லது பிற கனிமங்களால் செய்த வளையங்களைக் காலில் விரலில் அணிந்துகொண்டனர் என்பது தெளிவு. நாளடைவில் பெண்களின்  அணியாக  இது உருவெடுத்தது

மெட்டுதல் என்பதே வினைச்சொல் ஆதலின்,  இடுதல் என்பதை இச்சொல்லுடன் இணைக்கையில் மெட்டு(வினை)+ இடுதல் ?> மெட்டிடுதல்  என்று வருமென்பது முன்பிருந்த பேரகராதிப் பதிவு என்று தெரிகிறது. இதை இப்போது காணமுடியவில்லை. இப்போதுள்ள ஆசிரியர்கள் இதை  வழுவென்று கருதிவிட்டனர் போலும். இதைச் சிறிது ஆராயலாம், மெட்டு+ இ > மெட்டி என்பதால்,  மெட்டி இடுதல் என்பது உண்மையில் மெட்டுவதற்கு இடுதல் என்பதே. மெட்டுவதற்கு வளையம் ஓர் ஆயுதம். அதற்கு ஆயுதம் இடுதல் என்பதாம்.  மெடடி இடுதல் அல்லது மெட்டிடுதல் என்பன இச்சொல்லின் புணர்ச்சி.   இது ஒரு திரிபு  வரலாற்றினைக் காட்டவல்லது ஆகும்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


திங்கள், 5 ஆகஸ்ட், 2024

சிங்கப்பூர் தேசிய தின வாழ்த்துக்கள்

 சிங்கத்தின் பெயர்கொண்டு சீர்பலவும் பெற்று

சீர்மிக்க நடைபோடும் சிங்கப்பூர் நாடு

தங்கத்தின் ஒளிபெற்றுத் தகைமேலும்  உற்று

தணிவற்ற செழிப்புற்றுத் தாரணிமேல் ஓங்கி

எங்கணுமே யாவருமே  போற்றுநகர் ஆகி

இப்புவியில் எவ்வளமும் இயன்றோங்க வாழ்க.


ஒன்பதுடன் ஐம்பதுசேர் அகவைத்தே சிங்கை

ஒப்பில்லா உடல்நலமே உயர்மக்கள் பெற்றே

அன்பினிலே இணைந்தோராய் அகிலத்தார் ஏற்றி

ஆதரவால் பிணைப்போடும் ஆம்தனையும்  வாழப்

பண்புடனே பல்லாண்டு பகர்கின்றோம் செல்வப்

பயன்சிறந்த தேசியநாள் பார்புகழ வாழ்க.

பொருள் :

சீர்பலவும்.  காண்பொருள்,  காணாப்பொருள் ஆகிய பல்பொருள்.  இலாபம் என்பது வடிவம் இல்லாத பொருள். எண்ணிக்கையில் அறிவன. வீடுகள் வண்டிகள் என்பவை காண்பொருள்.

சீர்மிக்க நடை - இது அரசு இயக்கம், மக்கள் தொடர்பு என்பன போல் பிறவும்  இவை இயங்குதல்.

தணிவற்ற செழிப்பு -  பணவரவு, மற்ற பொருள் உணவுகள் வரவு.

ஆதரவு - பிறர் தரும் அரவணைப்பு

வளம் என்பது நன்மைகளின் மிகுதி

அகவை  நாட்டின் அகவை அல்லது வயது

செல்வப் பயன் -  செல்வம் வரவேண்டும்.  அது வீண்படாமல் பயனும் வரவேண்டும்.

மெய்ப்பு: 07082024 0637

அர் என்ற அடிச்சொல்லில் வந்த அருஞ்சொற்கள்

 அர் என்ற அடிச்சொல் நாம் அறிந்தின்புறத்

தக்க தமிழ் அடி ஆகும்.

இவ்வடியினின்று எழுந்த பழஞ்சொற்களை
முன்னர்க் காண்போம்.

அர் >  அரக்கு. இது கு விகுதி பெற்ற சொல்.அதை நீக்கிவிட்டால் அர் எஞ்சி நிற்கும். அரக்கு செம்மையாதலின் அர் என்பதும் செம்மைப் பொருளினது ஆகும்,

அர் > அரத்தை:  இது இஞ்சி போன்ற வடிவினது.    அர் + அ+தைஅல்லது அர்+ அத்து + ஐ என்ற துண்டுகள் இணைந்த சொல்.  இதுவும் செம்மை நிறத்தினை உடையது.  இதனாலும் அர் என்ற அடி செம்மை குறிப்பதே என்பது தெளிவாகிறது.

அர்+அத்து+ அம்= அரத்தம்.  இது குருதி என்னும் பொருளது. தன் தலையெழுத்தை இழந்து ரத்தம் என்று வழங்குவது. தமிழில் ரகரத்தில் சொல்
தொடங்காது என்று இலக்கணமிருப்பதால், திறம் மிகப்படைத்த நம் தமிழரால் இரத்தம் என்று இகரம் சேர்த்து எழுதப்படுவதுமாகும்.  இதுவும் சிவப்பு என்று நிறம்குறிக்க எழுந்த நல்ல தமிழ் ஆகும். தலையெழுத்தை இழந்து தலைதடுமாறச் செய்விக்கும் சொற்கள் மிகப்பல. முண்டமாக வரும் சொல்லை எந்தமொழி என்றறியாது அலமருவது கண்டு நீங்கள் ஆனந்தமடையலாம்.

அர் :> அரத்தி : செவ்வல்லியைக் குறிப்பது.

அர் > அர+ இன் +தம் =  அரவிந்தம்  : சிவந்த இனிய தாகிய  தாமரை.  தம் என்பது து+ அம். இன் உடமைப் பொருளெனினும் வெற்று இடைநிலை எனினும்
பெரிய வேறுபாடில்லை.

அர் > அரப்பொடி:  சிவப்பாகத் தோன்றும் இரும்புத் தூள்.  துருப்பிடித்தது சற்று செம்மை தோன்றும்.

அர் >   அரன்:  இது சிவனைக் குறிக்கும் சொல் ஆகும்.  சிவ என்பது சிவப்பு நிறம் குறித்தல்போலவே  அர் என்பது, அந்நிறமே குறித்தது. சிவ> சிவன்;  ஒற்றுமை உணர்க.  அரி+அன் என்று புணர்ந்து அரனாகி பாழ்வினைகளை அரித்தெடுப்போன் என்றும் கொளலாகும்.

அர் >  அருணன்:   இது சூரியனைக் குறிக்கும். அர்+ உண்+ அன் என்று பிரிக்க. உண் என்பதற்கு  "உளதாகிய"  என்று பொருள்கூறவேண்டும்.  உண் என்பது துணைவினையாகவும் வழங்கும். எடுத்துக்காட்டு: வெட்டுண்ட.  கட்டுண்ட என்பவை. உள் > உண்.  நாம் உண்பதும்  உள்ளிடுதலே ஆகும். விள் > விண் என்பதுபோல.  விள்> வெள் > வெளி.  சூரியன் செம்மை யாதலின்  அர் என்பதில் அமைந்தது. செங்கதிர் என்பது காண்க. (ஆனால் சூரியன் என்னும்  சொல் செம்மைப்பொருள் உள்ளதன்று. வெம்மை குறிக்கும் சூடு என்னும் சொல்லினின்று வருவது.  சூடு> சூர். சூடியன் > சூரியன்; அதாவது: மடி> மரி என்பது போல. மடிதலே மரித்தல்.  மடி என்பது ம(த்)தி என்று மலாய்
மொழியில் வரும். இவற்றைப் பின் ஆய்வோம்)

அர் > அரிணி.  செந்நிறத்ததான மான்.

அர் > அரிதம் : பொன் நிறம்.

அர் > அரிணம் : பொன். *( செம்மையுடன் உறவுடைய
நிறத்தது )


அருண+ ஆசலம் = அருணாசலம்; அருண+ உதயம் = அருணோதயம். செங்கதி ரோன் தோன்றும் மலை அருணாசலம். இது அருணகிரி அண்ணாமலை என வும் படும்.

அரக்கு என்பது சிவப்பு என்று பொருள்படுவதால், அரக்கர் செம்மை நிறத்தினர் ஆதல் வேண்டுமே, இதை நீங்கள் ஆய்ந்து எனக்கு அறிவியுங்கள்.

அறிக மகிழ்க
 
மெய்ப்பு பின்னர்