[எழுதியது: அ.மா. மணிப் பிள்ளை.]
அது கைப்பேசிகள் இல்லாத காலம். 1985.
அந்தப் பெண் பின் என்னிடம் பேசினாள். தன்னை விபசாரக் குற்றத்திற்காகக் கைது செய்திருப்பதாகவும் நான் பேசி உதவவேண்டும் என்றும் சொன்னாள்.
நடந்த விடயங்களைச் சுருக்கமாக அறிந்துகொண்டு, பின்னர் அந்த அதிகாரியிடம் பேசினேன். நீர் சட்டபடி நடக்கவேண்டியவர். நானும் அப்படித்தான். நாம் இருவரும் இதில் என்ன செய்ய முடியும். உமது வேலைக்கு உள்ளவாறு நீர் செய்துகொள்ளவும். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சொல்லிவிட்டேன்.
நாம் ஓரிடத்தில் வேலை செய்தால் அந்த வேலையை ஒழுங்கான முறையில் செய்து நலமான விளைவுகளை ஏற்படுத்தித் தரவேண்டும். பிடித்த வழக்கிலும் பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அறிந்துகொண்டேன். இந்த அதிகாரியுடன் அவருடைய ( அதிகாரியின்) குழுவினரும் கைது நடவடிக்கையின்போது இருந்துள்ளனர். இதிலிருந்து தப்பித்து விடலாம் என்று அந்தப் பெண் நினைத்தது அவளது முதிர்ச்சியின்மையையே காட்டியது. இது பொய் வழக்கன்று.
அப்புறம் அந்த வழக்கைப் பற்றி எனக்குத் தகவல் இல்லை. இவள் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்று வெளியில் வந்துவிட்டாள் என்று நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன்.
இதற்குப் பின் இவளைக் கோயிலில் பார்த்து, அவள் என்னிடம் நலம் விசாரித்தாள் . இந்த வழக்கைப் பற்றி என்னிடம் எதுவும் பேசவில்லை.
நான் உதவி செய்யவில்லை என்ற வருத்தம் இன்னும் இருப்பதாகப் பிறர் மூலம் அறிந்துகொண்டேன். தான் பிடிபட்ட சங்கதி வெளிப்படாமல் வேறு தொந்தரவுகள் எனக்கு இருப்பதாகச் சொல்லுவாள். அதனால் வேறு சில கீழறுப்பு வேலைகளில் அவ்வப்போது அவள் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்கிறாள். பொய்யும் சோடனைகளும் மிகுதி.
இங்குள்ள சில குறிப்புகளை மாற்றிச் சொல்வதும் இவளுக்கு வேலையாகிவிட்டது.
காவல் துறையில் வேலைசெய்வதில் இதுவும் ஓர் இன்னல் ஆகும். சிலர் உதவவில்லை என்று வேறு எதையாவது சொல்லி அவதூறு பரப்புவார்கள். கேட்பவர்கள் இதை எல்லாம் அறிந்துகொள்ள அவர்களுக்கும் நேரம் இராது. இவ்வாறு சில எண்ணிக்கையில் நம் இந்தியர்கள் உள்ளனர்.
இவளுடன் பிற்காலத்தில் ஒருவன் சேர்ந்துவாழும் கணவனாய் இருந்தான். இப்போது பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. வாழ்க வளமுடன்.
எல்லோரும் வாழ்க. உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
குறள்.
பரிமேலழகர் உரை: செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும். (செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.)
அரசருக்குச் சொன்னது அரசின் அதிகாரிகளுக்கும் உரியதாகும். அரசுக்குத் தலைமையாய் இருப்பவர் அரசு காவல் ஊழியர்கள் எல்லோரும் அரசர்தாம். பொருளை விரித்துக்கொள்க.