வெள்ளி, 5 ஜூலை, 2024

திரவம்

 திரவம் என்பதை அறிவோம்.

திர் என்பது திரட்சி குறிக்கும் அடிச்சொல்.  மாற்றமும் இதனால் அறியப்படும்.

எடுத்துக்காட்டு:  திர்>  திரிபு.

. எப்போதுமுள்ள நீரில் சற்று மாற்றம் ஏற்பட்டுத் திரவங்கள் உண்டாகின்றன. எடுத்துக்காட்டு: ஓமத்திரவம் அல்லது ஓமத் திராவகம்.

திர் > திர் + அவி + அம் >  திரவம்.  அவி என்பதில் இகரம் கெட்டது.

வேவித்து மாற்றம் அடைந்த நீர்ப்பொருள். அல்லது முன்னைய நிலை மாறிப் பின் உண்டாகிவரும் நீர்ப்பொருள். இது சொல்லமைப்புப் பொருள்.

திர் அவி அகம் >( திரவகம்) > திராவகம்.

அவி என்பது அ இ என்ற இரண்டு சுட்டுகள் ஒன்றாகி ஏற்படும் சொல். இடையில் வ் என்பது வகர உடம்படு மெய்.  முன் நிலையில் முன்னொரு மாற்றம் உண்டாகி இன்று வேறு ஒரு நிலையை  அடைந்து இருப்பதான ஒரு நீர்ப்பொருளை இது குறிக்கிறதென்பது தெளிவு. இது  சொல்லமைப்பில் உள்ள பொருள். பயன்பாட்டில் அது வேறு பட்ட நிலையினதற்கும் ஆகிவரலாம்.

திரிவுவடிவங்கள்:

திரவம்

திராவம்: ( திராவம்புரிதல்)

திராவகம்

முதலிய வடிவங்கள் இங்குக் கூறப்பட்டன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


சேமித்து அறம் செய்க.

 சோலை புரைஅழகில்  ---- விடுதியில்

சுந்தர மலர்பொருத்தி,

மாலை   நிலாவிளக்கம் ---- கூட்ட

மருவு  கவின்தனைப்பார்.


மந்த ஒளியினிலே ---மாந்தும்

மக்க   ளுடனமர்ந்தாய் 

வந்த உணவருந்தின் ---கண்டாய்

வான்பெறு ஆனந்தமே.


உண்டு முடிக்காமலே --- எதுவும்

ஒழித்திடு முன்நினைப்பாய்

இன்றிவ் வுலகினிலே ---உணவும்

இல்லார் பசித்திருப்பார்.


மீதப் பொருள்களிலே -  சேர்த்து

மேல்வரும் சேமிப்பினை 

யாதும் இலார்க்களிப்பாய் ----அறமே

யாண்டும் துணையுனதே.


பொருள்: 

புரை - போன்ற

சுந்தர -  அழகிய

ஒழித்திடு  -  வீசிடும் 

வான்பெறு - மிக உயர்ந்த

ஆனந்தம்-  ஆக நன்று ஆன மகிழ்வு,

(ஆ + நன் து அம்)

யாண்டும் - எப்போதும்

மாந்தும் -  உண்ணும் அல்லது  நீர் அருந்தும்

இலார் -  இல்லாதவர்


வியாழன், 4 ஜூலை, 2024

சணல் கயிறு - சொல்லாக்கம்

சணல் என்பது ஒரு செடிநார்  ஆகும். இச்சொல் அமைதல்:

அண்>  சண் > சணல் .

ஒவ்வொரு நாரும் ஒன்றினோடு மற்றொன்று அணுக்கமாக வைத்தே கயிறு திரிக்கப்படுகிறது. ஆதலின் அணுக்கக் கருத்தைக் குறிக்கும் "அண்" என்ற அடிச்சொல்லிலிருந்து சணல் என்ற சொல் தோன்றியது மிக்க இயல்பினது ஆகும். மற்றும் அண் சண் என்ற மாற்றமும் பொருத்தமாய்  உள்ளது. இச்சொல்லை அண்> சண் > சண்ணல் என்று காட்டி, பின் ண் என்ற ஒற்றினை நீக்கி இறுதி வடிவத்தைக் காட்டுதல் ஒக்கும்.  மணல் என்ற சொல்லுருவினுடன் சணல் உருவொருப்பாடு உள்ளதாதலால் எதுகையாய் நிற்றற்கும் ஏற்றசொல்லுமாகும்.

பலவகைச் செடிகளிலிருந்தும் நார் எடுக்கப்பட்டுக் கயிற்றுக்கு ஆகிறது என்பதை அறிவோம்.

சணல் சில வலைகளிலும் பயன்படுகிறது. சணலின் வலிமையே காரணம் 

சணலுக்கு ஏற்ற சொல் வடிவங்கள்:  சணம். சணம்பு, சணப்பை, சணப்பு, சணப்பநார் என்பவை.  சடம்பு  என்ற சொல்லும் உள்ளது.  அடு> சடு> சடம்பு என்று ஆவது இச்சொல்லாகும். அணுக்கம் என்பதும் அடுத்தல் என்பதும் ஒரு பொருளனவாய் அடிச்சொல் ஆதற்கு ஏற்றவை ஆகும்.

சணல் முதலியவை தமிழ்ச்சொற்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்