செவ்வாய், 2 ஜூலை, 2024

பாத்திரம் என்றது

பால்  என்பது பகுதி குறிக்கும் சொல். திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளன. அவை  அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்.

அத்து என்பது ஒரு சாரியை,  சாரியை என்றால் என்ன?  சார்+ இயை.  ஒரு சொல்லைச் சார்ந்தும் அதனோடு இயைந்தும் வருவது சாரியை. ஒலியழகு தந்து சொல்லை அழகுபடுத்த வருவது சாரியை. ஆற்றங்கரை என்பது இடையில் அம் வருகிறது, இது சொல்லை அழகுபடுத்தி இனிமை தருகிறது. விலவங்கோடு, தலைச்சங்காடு, தலைச்சம்பிள்ளை.   இவற்றில் அம் அழகுதருகிறது. 

அவளுக்கு இந்தப் பேறுதான் தலைச்சன்.  என்றால் தலை (முதலாவது) பிள்ளை. தலையன் எனல் கூடாது   தலையன் எனில் தலையை உடையவன் என்று பொருள். பெருந்தலையன்:  அதாவது தலை பெரிதாகப் பிறந்தவன். சீழ்த்தலையன் என்றால் தலையில் சீழ் வடிகிறவன். 

சீழ்குதல் என்றால்  கண்ணீர் வடித்தல். சீழ்கி அழுதுகொண்டிருக்கிறான் என்றால் கண்ணீர் வடித்து அழுதுகொண்டிருக்கிறான் என்பது. இந்த வினைச்சொல்லை இப்போது எந்தப் புதினத்திலும் ( நாவலிலும்) காண இயலாது. தமிழில் உள்ள வினைகளை ( வினைச்சொற்களை)ப் பயன்படுத்தாமல், அறிந்து புழங்காமல் இருந்துகொண்டு, தமிழை வளர்த்துவிட முடியாது.  கூட்டம் கூடிப் பேசினாலும் பேசும்போது ஒவ்வொரு நாளும் ஒரு புதுச்சொல்லையாவது பயன்படுத்தவேண்டும்.

மேல் > மே > மோ.  மே> மோள்> மோக்கு> மோக்கம். மோக்கம் என்றால் மோட்சம். மேல் என்பது சில தமிழின மொழிகளில் மோ என்று திரிந்து மோ+ கு+ அம் > மோக்கம், என்றாகி மோட்சம் குறிக்கும். மேல் என்பது மோள் என்று மலையாளப் பேச்சு வழக்கில் சில வட்டாரங்களில் பேசப்படும். மோக்கம் பின் மோட்சம் என்று திரிந்தது.  மோள்+ சு+ அம்> மோட்சம்.

இனி, பால் என்பது பகுதி என்று உணர்ந்தோம், பால் என்பது கடைக்குறைந்தால் பா என்றாகும்.  பா+ திறம்> பாத்திறம் > பாத்திரம் என்பதுதான் வீட்டிலுள்ள ஏனம், ஏல்> ஏல்+ ன்+ அம் >  ஏனம்.  இங்கு ன் என்பது இடைநிலையாக வந்தது.பலவகையில் அறிவுறுத்தலாம் எனினும்  உம் என்ற இடைச்சொல் உன் என்று திரிந்து ன் என்று மட்டும் எஞ்சி நிற்கிறது. இந்த உன் என்பது உம் என்பதன் திரிபு.  உம்> உன்>ன். பொருளை ஏற்று வைத்துக்கொள்ளும் பாத்திரம்.

பால்> பாற்று> பாத்து > பாத்து+இரு+அம் >பாத்திரம். எனினும் ஆகும். பொருள்களைப் பகுதிப்படுத்தி வைக்கும் ஏனம். பர> பா> பாத்திரம்:  பரந்த வாய் உடைய ஏனம் என்று இது பல் பிறப்பி. உளுந்து வேறு,  அரிசிமாவு வேறாக ச்  சற்று புளிக்க வைத்து, வேறுவேறு பதார்த்தமாகச் சுடலாம். பகுத்து வைக்கப் பாத்திரம் உதவும். பகுத்து>பாத்து.  எ-டு: சப்பையாகப் பகுத்துச் செய்யப்படுவது சப்பாத்து, உணர்க. சப்பை + பாத்து.> சப்பாத்து..


கூடுதலாக எழுதாமல் முடிப்போம்.




அறிக மகிழ்க\

,மெய்ப்பு பின்னர்

திங்கள், 1 ஜூலை, 2024

சாதிகள் இந்தியாவில் ஒழியுமா?

இந்தக் கேள்விக்கு உண்மையான பதில் என்னவென்றால் இவை ஒழிந்துவிடா(து) என்பதுதான்.

ஏன் என்றால் பண்டைக்காலத்தில் அம்மான் மகன், அத்தை மகள் என்று குடும்ப அகமணத்தினால்தான் இந்தியர்கள் பெருகினார்கள். தற்போதைய சூழ்நிலையில் வெவ்வேறு சாதியினர் ஓரிடத்தில் தொழில் புரிய வேண்டிவந்த காரணத்தினால் காதல் திருமணங்கள் முளைத்துள்ளன.  ஆகவே பெண்கொடுக்க மறுக்கிறார்கள்.

வேறு நாடுகளிலும் ஒரு தளபதியின் மகளை  இராணுவ தளத்தில் கூட்டிப் பெருக்குகிறவனுக்குப் பெண் கொடுக்கமாட்டார்கள். சாதி என்கின்ற கருத்தை விலக்கிவிட்டுப் பார்த்தால் இது பொருளாதார வேறுபாடுதான். இந்த வேறு பாடுகளுக்கு அடிப்படையில் இருப்பவை: முன் காலத்தில் நாங்கள் அமைச்சர்களாக இருந்தோம். எங்கள் பெருமை எங்களுடன் இருக்கிறது. நாங்கள் இறங்குவதா என்பதுதான்.

இதை உயர் தமிழ் நடையில் எழுதினால் புரியாததனால் சாதாரணமான முறையில் எழுதியுள்ளோம்.

வேறுபாடுகளில், பண்டைத் தொழிலுக்கும் இன்றைத் தொழிலுக்கும் வேறுபாடு இல்லை.  பண்டை அரசன் பதவியை இழந்துவிட்டாலும், என் மகள் ஏன் இறங்கி வரவேண்டும் என்று எண்ணுவதுதான் காரணம். இந்த எண்ணம் அவன் சீனனாக இருந்தாலும், மலாய்க்காரனாக இருந்தாலும், தமிழனாக இருந்தாலும் தாய்லாந்துக்காரனாக இருந்தாலும் வரும். இது மதத்தில் அல்லது சாதி என்ற தொழிற்பிரிவினையில் இல்லை.

பண்டை நாட்களில் அகமணம் புரிந்துகொண்டதன் காரணம் தொழில் வசதிக்காக. ஒரு முடிவெட்டுகிறவன் மகள் குயவன் வீட்டில் வாழ்க்கைப்பட்டால் அவளுக்கு மண் குழைக்கத் தெரியாது. ஒரு வெள்ளாளன் வீட்டில் நுழைந்தால் வயல் வேலை தெரியாது. அதனால்தான் அவர்கள் அகமணம் புரிந்தார்கள்.  அவர்கள் பெண் தேடியதெல்லாம் அத்தைமகளை, மாமன் மகளை அல்லது அதுபோன்ற சொந்தக்காரன் பெண்ணை. தாம் தேடிய சொத்துப் பற்று எல்லாம் ஓர் அயலவனுக்குப் போகக் கூடாது என்பது இன்னொரு காரணம். ஆரியன் கீரியன் என்பதெல்லாம் புனைவு,

இந்து மதம் சில ஆயிரம் ஆண்டுகள் இருந்துள்ளது. அப்போதெல்லாம் ஏன் இது ஒரு பிரச்சினையாக இல்லை?  மனிதனின் சமுகச் சூழலில் ஏற்பட்டதுதான் மதம். குசேலன் ஒரு குசவன், அவனைப் பணக்காரனாக்கிச் சமப்படுத்தினார் கிருட்ணபரமாத்மா.  வள்ளுவர் செய்தொழில் வேற்றுமை என்று சொன்னது: முன் செய்த தொழிலின் வேற்றுமை, இன்று செய்யும் தொழிலின் வேற்றுமை இனிச் செய்யப் போகும் வேலை எல்லாம் அடங்கிவிடும். வினைத்தொகையில் முக்காலமும் அடங்கிவிட்டது என்பதுதான் இலக்கணத்தில் பவணந்தி முனிவரின் கோட்பாடு. செய்தொழில் முக்காலமும் அடங்கியது. குறளில் இந்தக் கருத்து உள்ளடங்கி இருக்கிறது என்பதை உரையாசிரியர் எவரும் விளக்கியுள்ளாரா என்று தெரியவில்லை. குறளை மீண்டும் படித்தால் நன்றாகப் புரியும். உரையாசியர் உரைக்கவில்லை என்றால் நாம் மடையர்களாக இருந்துவிட முடியாது,  முக்காலமும் உணரும் படியாகக் குறளில் தெரிந்துகொள்ளவேண்டும். 

அதனால்தான் பாரதியார் இப்படிப் பாடினார்:  கண்ணில் தெரியு தொரு தோற்றம், அதில் கண்ணன் உரு முழுதும் இல்லை, நண்ணு முகவடிவு காணின் அதில் நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.  காதல் பாட்டுப் போல் தெரிந்தாலும் அர்த்தம் மிக்க ஆழம்.  இந்த விடயத்தில் கண்ணன் முகம் கூடப் பாதிதான் தெரியும். அவரும் வேறு எந்தக் கடவுளும் உதவ மாட்டார்கள். ஏன் என்றால் இது மதப்பிரச்சினை அன்று . கடவுள் ஆதாம் ஏவாளைப் படைத்தாரே தவிர அவர்களுக்குத் துணிகள் எதையும் வழங்க வில்லை. அப்புறம்தான் தேடிக்கொண்டனர். மானப் பிரச்சினையை அவரே கவனிக்கவில்லை! 

ஒரு மலாய்ப்பெண் எங்களுடன் பல ஆண்டுகட்கு முன் ஓர்  அதிகாரியாக இருந்தாள். அவள் பெயரிலே இளவரசி என்ற மலாய்ச்சொல இருந்தது.  நீ ஏன் இளவரசி என்று பெயரில் வைத்திருக்கிறாய் என்றதற்கு, அவளைக் கேட்டவனிடம் " நீ என் இளவரசன் இல்லை" என்று சொல்லிவிட்டாள். பழைய கவுரவமும் பலருக்கு தேவையான பொருள்தான். நமக்குத் தேவையில்லை என்றால் எல்லாருக்கும் அப்படியாக இருக்காது. பலர் அதனைக் கவ்வி வாயில் வைத்துக்கொள்வார்கள். கவ்வு + உரவு + அம் > கவ்வுரவம், இடைக்குறைந்து : கவுரவம்> கௌரவம். உரவு என்றால் வலிமை(யாக). வேறு வழிகளிலும் சொல்லைப் பொருள்கொள்ளலாம். உறவு என்பது வேறு சொல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

ஞாயிறு, 30 ஜூன், 2024

விடியல் குறிக்கும் சொற்கள்.

 வை >  வயின். வை எனபது அடிச்சொல்லாக இருந்தால் அதிலிருந்து பிறக்கும் சொல் குறிலாகிவிடும்.  வை+ இன் >  வயின். இங்கு இன் என்பது விகுதி யானது.

வை+ அம் >  வையம்:   இது உலகம் என்று பொருள்படுவது. உலகம் என்பது கடவுளால் வைக்கப்பட்ட இடம் என்பது பொருள்.  வையகம் என்பது இதன் இன்னொரு வடிவம்.

வை+ கு+ அறை >  வைகறை:  சூரியன் அடிவானில் வைக்கப்பட்டது போல் பாதியும்  அறுத்து மீதமுள்ளதுபோல் வெளிப்பட்டுப்  பாதியும் தெரிய, விடியும் நிலை. 

அருணம் >  அறு+ உண் + அம் >  அறுணம்>   அருணம்,  இது வைகறை. சூரியன் அறுக்கப்பட்டதுபோல் பாதியும்  வெளிப்பாடு பாதியும் தெரிவது.  உண் என்பது   அறுதலுண்டது என்பதன்பொருட்டு. உள்> உண்.  அம் விகுதி.

உயரற்காலம் :  இது திரிந்து உயற்காலம் (  இடைக்குறை)  இது பின் திரிந்து உசற்காலம் ஆகி,  மெருகேறி உஷற்காலம் ஆயிற்று. யகர சகரப் போலியும்  பின் ச >ஶ என்று மெருகும்.  உஷா என்பது தொடர்புடைய பெண்பெயர்.

உதயம் :  உது + அ+ அம் : சூரியன் முன் அங்கு எழுந்தமைதல்.  உது = முன். யகர உடம்படு மெய். உது + ஐ + ய + ம் எனினுமாம்.  உதை என்ற சொல்லும் இவ்வாறு எழுந்த சொல்.  ஒருவாறு எழுந்த சொற்கள் ஒரு பொருளே குறிக்க என்னும் விதி இலது.

றகரம் இன்னொரு சொல்லாக்கத்துக்குப் பயன்படுமாயின் ரகரமாகப் பெரும்பாலும் மாறும். 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்