ஞாயிறு, 26 மே, 2024

சொல் நீளுதலும் குறுகுதலும். எ-டு: சுடு> சூடு

 குறிலான ஓர் எழுத்தில் தொடங்கிய வினைச்சொல்  நீண்டு அமைந்தபின் பெயர்ச்சொல் ஆகிவிடுகிறது.  இது மிக்க இயல்பான சொல்லாக்க நிகழ்வுதான்.

சுடு : இது ஏவல் வினை. இதில் சு(கரம்) நீண்டு  சூடு என்றாகி, ஒரு பொருளைக் குறிக்கின்றது.  அந்தப் பொருள் உற்றறி பொருள். அதாவது கண்ணால் காணமுடிவதில்லை.

மேல் குறித்தது ஒரு வகை.  இவ்வாறு நீண்டபின்பு,  அது ஒரு விகுதி பெற்று, இன்னொரு பொருளைக் குறிக்கலாம். விகுதி என்றால் சொல்லின் மிகுதி. எடுத்துக்காட்டாக, சூடன் என்ற சொல். இது சூடம் என்றும் வரும். சூடமும் சூடு பெற்று எரியும் பொருள்தான்.  ஆகவே வெகு பொருத்தமாகிவிட்டது.

சூடு+ அம் > சூடம்.

சூடம் என்பது இயற்கையாவும் செயற்கையாகவும் "உருப்பத்தி"  செய்யப்பெறும் ஒரு வாசனைப்பொருள்.

சொற்கள் நீண்டு பெயராய் அமையாமல், சுருங்கியும் அமையும்.  எடுத்துக்காட்டு:

சா(தல் ) >  சா(வ்)+அம் >  சவம்.

தோண்டு(தல்) >  தொண்டை.

ஒரு நீண்ட தோடு அல்லது குழாய்,  வாயிலிருந்து குடலுக்குச் செல்வது.

தோண்டுதல், கடைதல் போன்ற வினைகளிலிருந்து உறுப்புப் பெயர்களும் விலங்குப் பெயர்களும் அமைந்துள்ளன.  எடுத்துக்காட்டு:

வினைகள்:  தோண்டு(தல்),  கடை(தல்)

தோண்டு  >  தொண்டை  ( மேலே காண்க).

கடை >  கட> கட+அம் >  கஜம்.  (யானை.  கடையப்பெற்றது போன்ற முகமுள்ள விலங்கு).  இது சங்கதச்சொல்.

நெரு> நரு > நரி.

ஒப்பீடு:  நரு> நருள். ( மக்கள்கூட்டம்).

மிக நெருக்கமாக வாழும் விலங்கு. இச்சொல் வேறுமாதிரியாய்த் திரிந்தது.

நா > நாய்.  ( இச்சொல் நீளாமல் குறுகாமல் அமைந்தது.)

நாவைத் தொங்கவிடும் விலங்கு,

சங்கதம் என்பது சமஸ்கிருதம்.  பூசைமொழியாய் உள்ளது. நாம் நாட்டினரே இதையும் உண்டாக்கினர். இந்தியா எங்கும் பரவி வழக்குப்பெற்றுள்ள மொழி. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

திருத்தம்: 27052024 1849

திட்டுதலும் தீட்டும். ஜெபித்தல்.

 ஜெபித்தல் என்பது  சற்றே வேறுபட்ட தொழுகைமுறையைக் காட்டும் சொல்லாக இப்போது அறிகிறோம்.  

பழங்காலத்தில் ஒரு நாள் மூன்று வேளை மாதிரியான தொழுகை முறை மனிதன் அறிந்திருக்கவில்லை.  யாரேனும் தனக்கு ஒரு மறக்கவியலாத கெடுதலைச் செய்துவிட்டால் அவன் ஒழியவேண்டும் என்று அவன் பெயரைச் சொல்லித் திட்டுவதையே அவன் அறிந்திருந்தான். அதையும் பின்னர் அவன் சிலதடவைகள் நினைவுகூர்ந்தாலும், திட்டித் தீர்த்தது ஒரே முறைதான்.

ஒருவனைத் திட்டிவிட்டால். தன்னைப் பொருத்தினவரை அந்தக் கெடுசெயலோன் செத்துவிட்டவனுக்கு ஒப்பானவன் என்றே அவன் பாவித்தான். இதிலிருந்தே தீட்டு என்ற சொல்லும் தோன்றியது:

திட்டும்போது அவன் ஒழிக, அவன் சாகட்டும் என்பதே அவன் கழறியது ஆகும்.

திட்டுதல் வினைச்சொல்.

திட்டு>  தீட்டு.

இது முதனிலை திரிந்து நீண்ட தொழிற்பெயர். ( வினையில் தோன்றிய பெயர்ச்சொல்).  இங்குத் தொழில் என்பது வினைச்சொல் என்று பொருள்படுவது.

வினைச்சொல்: திட்டுதல்

திட்டு > தீட்டு.

ஒருவனைத் திட்டிச் சாவித்துவிட்டால்  ( சாக என்று ஒழிமொழி பேசிவிட்டால்) அவன் இறந்தவனுக்குச் சமனானவனே. மீண்டும் அவனிடம் செல்லலாகாது. இதுதான் தீட்டு.

இந்தத் தீட்டு பின்னர் வேறு வகையான விலக்கிவைப்புகளுக்கும் பரவிற்று.

இதை இவ்வாறு விளக்கினாலும்,  தீயிட்டுக்கருக்கு,  கரிச்சுக்கொட்டு என்னும் வழக்குகளால் முன் காலத்தில் தீயிட்டு என்ற வினை எச்சத்திலிருந்தே குறுகி தீட்டு என்ற சொல் உருவாகி வழங்கிப் பின் அதிலிருந்து வினை -  திட்டு, திட்டுதல் என்று வந்துள்ளது.

தீயிட்டு  > தீ(யி)ட்டு > தீட்டு.

தீட்டு > திட்டு > திட்டுதல்.

எச்சங்கள் முற்றுக்களாக வழங்குதல்: இன்றுவரை இவ்வாறு தென்மொழிகளில் வழங்கி வருதல் கண்கூடு. ஆகவே எச்சம் முற்று என்ற வேறுபாடு மேலோங்கும் தடைக்கருத்தாகிவிடாது.  இது ஓரெழுத்துக் குறைதான். பேச்சில் சுருங்கல் எளிது.

செபித்தல் என்பதும் சாவித்தல் > சவித்தல் என்பவற்றிலிருந்து வந்தனவென்பதும் பின் விளக்குறும்.

தெருள்> தெருட்டு>தெருட்டம்> தெட்டம்> திட்டம் என்றுமாகும்  ஆதலின் இஃது பல்பிறப்பிச் சொல்.

தெருள்> தெள்> தெள்ளு ( தெள்ளுதமிழ்)

தெள்+து+ அம் > தெட்டம்.  காணாமற் போனாலும் அவற்றைப் பிடித்துக் கொண்டுவந்து விடலாம்,  ஆய்வினால்.

அதனால்தான் இது பல்பிறப்பி. இன்னும் பல சொல்லவில்லை.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

வியாழன், 23 மே, 2024

சொல்லில் யகர ஒற்றுக் குறைந்த சொல்

 ஒரு சொல்லில் ஏதேனும் ஓர் எழுத்து அல்லது  அதனினும் மேற்பட்ட எண்ணிக்கையில் எழுத்துகள்  குறைந்துவிட்டால் அத்தகைய சொல்லை குறைச்சொல் என்று இலக்கணத்தில் சொல்வார்கள்.  குறைச்சொற்கள் பல நிறைச்சொற்கள் போல வழங்குதலும் உண்டு.  ஒன்றைக் குறைச்சொல் என்று அறியாமல் பயன்படுத்துவோரும் உண்டு. ஒரு சொல் குறைச்சொல்லா நிறைச்சொல்லா என்று அறிந்தபின் தான் பயன்படுத்தவேண்டும் என்பதொன்றும் இல்லை.  இதை அறிந்து வைத்திருப்பதால் இயல்பாக ஒருவனுக்கு எந்தப் பயனும் பேச்சு வழக்கில் இல்லை. கவிதைக்கு இது முக்கியமாகும்.

யகர ஒற்று சொல்லுக்கிடையில் குறைந்து வரும் சொற்கள் பல.  அவற்றை இங்கு காணித்துள்ளோம். முதலும் இறுதியும் குறைதலும்  உள.

https://sivamaalaa.blogspot.com/2019/08/blog-post_29.html

முதலெழுத்துக் குன்றியபின் வந்த சொல், சொல்லில் எஞ்சி இருப்பது முதலில் வரக்கூடாத எழுத்தாக இருந்தால் அச்சொல்லில் ஏற்ற உயிரெழுத்தைச் சேர்த்து எழுதவேண்டும்.

எடுத்துக்காட்டு:  அரங்கன் >  ரங்கன் > இரங்கன்.  

இது சரிதான் என்றாலும் அரங்கன் என்று எழுதுவதே உரிய முறையாகும். சீரங்கம் கோவில் ஓர் அரங்கு போன்ற ஆற்றிடைக்குறையில் அமைந்தமையால்  இப்பெயர் ஏற்பட்டது,   என்வே அரங்கன் என்றே வழங்குதல் நலம்.

இரும்பை ராவி எடுக்கவேண்டும் என்ற வாக்கியத்தில் ராவி என்பது அராவி என்று இருக்கவேண்டும்..

உலகின் பல மொழிகளில் ர, ல முதலியவை சொல்லின் தொடக்கத்தில் வருகின்றன. தமிழில் வராமையானது தமிழ் மரபுதான்.  வேறு காரணிகள் ஒன்றுமில்லை. 

இனி  யகர மெய் குன்றிய சொல்லைக் காண்போம்.

நாய்ச்சியார் பாட்டு என்பது  நாச்சியார் .... என்றும் வரும்,   நாச்சியப்பன் என்ற சொல் உண்மையில் நாய்ச்சியப்பன் என்பதே. நாய்ச்சி என்பது தலைவி, உயர்வானவள் என்பது பொருள். எடுத்துக்காட்டு: குந்தவை நாய்ச்சியார். ஆண்டாள் நாய்ச்சியார். வேலு நாய்ச்சியார்.

பாசனம் என்ற சொல்லும் பாய்ச்சனம் என்பதே.  நீர் பாய்ச்சுதல் பாய்ச்சனம்> பாசனம் என்று குன்றியது,

ஆய்ச்சி என்பது ஆச்சி என்று குறையும்.

பேய்ச்சி என்பது பேச்சி ஆகும்.   பேச்சிமுத்து என்பதொரு பெயர்.

தாய்தி என்பது தாதி என்றுமாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்