அடுக்குமாடி வீட்டுக் கடுத்திருக்கும் கூடத்(து)
உடற்பயிற்சி போதிக்கும் ஒண்முகத்து ஆசிரியர்
யாரென்று பார்த்தால் இளவயது நங்கையரே
சார்பொன்றும் இல்லாமல் நல்லுடலே நீர்பெறுக
வாரீரோ என்றார் வருவோர் கிழவிகளை
வெட்கமொன்றும் கொள்ளார் முது ஆண்கள் வேறுநிற்க,
ஒன்றாகக் கூட்டியே ஓகோவென் றோங்கிடுவர்.
நோய்வாயுட் பட்டார் நுடங்காதார் நல்லுடலார்
வாய்ப்புடையார் யாருமே வந்துகலந் தாடப்
படத்திலே பாருங்கள் முன்னணியில் பெண்கள்
திடநோக்குச் சிங்கைக்குத் தேடிவரும் நற்காலம்!
வீழ்த்துவம் நோய்நொடிகள் வீண்நாள் விலக்கியே.
வாழ்த்துவம் நாமிவரைத் தாம்.
இது கலிவெண்பா.
வனஜா அம்மையாரும் கலந்துகொண்ட உடற்பயிற்சி இது.
ஒண்முகத்து- ஒளியுள்ள முகத்தை உடைய
கூடம் : அரசு அமைத்துத் தந்த கூடம்.
வாழ்த்துவம் - வாழ்த்துவோம்
வீழ்த்துவம் - வீழ்ச்சிபடச் செய்வோம்
திடநோக்குச் சிங்கை - உடற்பயிற்சிக்கு ஊக்கமூட்டும் சிங்கப்பூர்
நோய்வாய்ப் பட்டார் நுடங்காதார் - நோயாளி யானாலும் நல்லுடல் கொண்டாரும்
ஓகோவென் றோங்கிடுவர் - சிறக்க முன்னேறுவர்
வேறு நிற்க - பெண்கள் தனி ஆண்கள் தனி வரிசைகளாக
சார்பு ஒன்றும் இல்லாமல் - யாரையும் சார்ந்து உதவி பெறா நல்லுடலுடன்