வியாழன், 25 ஏப்ரல், 2024

பணம் சேமிக்கும் வழிகளில் ஒன்று.

 கதவைக் கொஞ்சம் திறந்து வைத்தால்

காற்றின் ஓட்டம் மிகுமே!--- நீர்

மிதவை போலும்  வருமோர் இன்பம்

மெத்த மகிழ்வே தருமே--- குளிர்

உதவும் ஊட்டி கொள்ளும்  அளவில்

ஒண்மின் ஆற்றல் குறுகும்---நாளைச்

சிதைவில் திறத்தில் செலவும் குன்றிச்

சேமிப் பாகும் பணமே.



உரை:

கதவைக் கொஞ்சம் திறந்து வைத்தால் காற்றின் ஓட்டம் மிகுமே!--- கதவைக் கொஞ்சம் நீம்பலாக வைத்துவிட்டு எதிரில் உட்கார்ந்துகொண்டால்  காற்றோட்டம் ஏற்படும்;  நீர் மிதவை போலும்  வருமோர் இன்பம் மெத்த மகிழ்வே தருமே--- படகில் செல்வதுபோல் காற்றின் இன்பம் மகிழ்ச்சியைத் தருகிறது; குளிர் உதவும் ஊட்டி கொள்ளும்  அளவில் ஒண்மின் ஆற்றல் குறுகும்--- குளிரூட்டி ( ஏசி) மின்சாரத்தை எடுத்துக்கொள்வது குறைந்துவிடும்; நாளைச் சிதைவில் திறத்தில் செலவும் குன்றி சேமிப் பாகும் பணமே -  மின்சாரக் கட்டணச் செலவு குறைந்து பணம் சேமிப்பு உண்டாகும் என்றவாறு.

சிதைவில்:  சிதைவு இல்.  சேதம் அல்லது மாறுதல் இல்லாத.  குளிரூட்டி - ஏசி என்னும் குளிர் இயக்கக்கருவி.

நீர்மிதவை போலும் வரும் ஓர் இன்பம் -  மிதவையில் செல்லும்போது வரும் தென்றலின் இன்பம். இங்கு: படகுச்செலவின் இன்பம்.

சேமிப்பு<  சேர்மிப்பு<  .... இச்சொல்லில் இர் மறைந்து சொல் உருவானது.

வாயு என்ற சொல்லின் பொருளகற்சி.

 ஆரியன் என்ற சொல் தமிழ்ச்சொல்,  அஃது ஆர்தல்,  பொருள்:  நிறைதல் என்ற சொல்லிலிருந்து வந்தது என்பதை முன்னர் சொல்லியுள்ளோம். ஆனல் வரலாற்று ஆசிரியர் சிலர் இச்சொல் எங்கிருந்து வந்தது என்று அறிந்தர்களில்லை. ஒருவேளை arable என்ற சொல்லோடு தொடர்பு உளதோ என்று அயிர்த்தனர். ( சந்தேகப்பட்டார்கள்). இந்தச் சொல்லும் "ஏர்"  ( ஏர் உழவு) என்ற தமிழ்ச்சொல்லுடன் தொடர்புடையது. சுமேரியா முதலிய இடங்களிலும் தமிழ் வழங்கியுள்ளபடியால்,  அங்கிருந்து தமிழ் பரவுவது எளிது.  ஆனால் ஆரியன் பற்றிய வரலாற்று  ஆய்வுகளில் ஆரியர் என்போர் நாடோடிகள் என்று கூறப்பட்டுள்ளதால்,  அவர்கள் ஏர் உழுதனர் என்று கதை எதுவுமில்லை.  ஆரியன் என்பது ஒரு தமிழ்ச்சொல். இதைத் தமிழ் மூலமாகவே அறியவேண்டும்.

வாயு என்பது தமிழ்ச்சொல் ஆகும். இது சங்கப்பாடல்களில் இடம்பெறவில்லை என்று கூறினாலும், இது வாய் என்பதனடியாக எழுந்த சொல். வாயினால் ஊதுவதுதான் வாயு என்னும் காற்று. பின்னர் நிலத்திலிருந்து எழுந்து வெளிப்படும் காற்றும் வாயு என்று பொருள்விரிவு கண்டது.

உ என்பது முன்வருதல் குறிக்கும் சுட்டடிச்சொல்.

https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_6.html

சொடுக்கி வாசித்து அறிக.

வாய் என்பதற்கு இடம் என்ற பொருளும் உண்டு, எவ்விடத்திலும் வரும் காற்றையும் வாயு என்பதில் பொருள் மாறுபாடு எதுவும் நேர்ந்துவிடாது.

வாயூது என்பதன் இறுதி எழுத்து மறைந்த சொல்லாகக் கருத ஏற்புடைமை உளதாதல் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


புதன், 24 ஏப்ரல், 2024

வாசுகி - பெயர், மற்றும் பாம்பு என்றால் என்ன?

 வாசுகி என்பது ஒரு பாம்பின் பெயராகவே  நம் நூல்கள் கூறுகின்றன.  இது கிழக்குத் திசையில் இந்தப் பூமியைத் தாங்கிக்கொண்டுள்ளது என்று இந்நூல்களின்படி நாம்  அறிகிறோம்.

இதுபோன்ற சொற்கள், நம் காலத்திற்கும் முன்னரும்,  இவை கூறப்பட்டு  நமக்குக் கிடைத்துள்ள நூல்களின் காலத்திற்கு முன்னும் இருந்த நூல்களிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு நம்மை வந்து எட்டியுள்ளன.  அம் மிக்கப் பழைய நூல்களில் இருந்த சொற்களைப் பெயர்த்தெழுதியவர்கள் அச் சொற்களை அவர்களிடம் அப்போதிருந்த பதங்களைக் கொண்டே சொல்லவேண்டியதைப் புனைந்திருக்க வேண்டும்.  பாம்பு என்ற வுடன் இப்போது பக்கத்திலுள்ள காட்டில் இழைந்து திரியும் பாம்பு வகையைக் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருந்தாமல்  முடியும்.

எழில்மலை என்ற ஒரு மலைப்பெயரை  எலிமலை என்று மொழிபெயர்த்தனராம்.  அப்புறம் அந்த நாட்டுவேந்தனையும் மூஞ்சூறு இனத்தவன் என்று கூறிவிட்டனர்.  இதுபோன்ற தவறுகள் பெயர்த்தெழுதுவதிலும் அதை வாயித்து உணர்ந்து கொள்வதிலும் ஏற்படாமல் காத்துக்கொள்ளவேண்டும். நாமும் இங்கு முயல்வோம்.

பூமியைத் தாங்கிக்கொண் டிருக்கும் பாம்பு  என்பது புறப்பாகம் என்று பொருள்படவேண்டும்.

பாகம் : இது இடைக்குறைந்து,  பாகம்> பாம்  ஆகும்.

புறம்  என்பது, ஓரெழுத்தால் குறிக்கப்பட்டது,  பு  - புறம் அல்லது வெளி,

ஆகவே புறப்பாகம் என்பது சரியாகவருகிறது.

பாகம் புறம்,  பாம் + பு >  பாம்பு  ஆகிறது,  ஒரு நெடும்பாகம் என்பது பெறப்படுகிறது,

வாய் +  உ + கு + இ என்பவை வாயுகி  ஆகும் வாய் - இருக்கும் இடத்தில் முன் வந்து  சேர்ந்து இருப்பது என்று சரியாக வருகிறது,  இதிலுள்ள யகரம்  சகரம் ஆகும் என்பது திரிபு விதி.   ஆகவே வாயுகி என்பது வாசுகி ஆயிற்று.

வாய் என்ற  பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் இடம் என்று பொருள்.

இதை இப்போது பறந்துபோய் பார்க்க முடியாவிட்டாலும் எதுவும் முரணானது இல்லை என்று அறிக.

அது ஒரு நீண்ட தட்டாக இருக்கலாம். பூமியில் மேலோட்டில் பல தட்டுகள் உள்ளன.

வாசுகி என்றால் ஒரு பாம் பு. நீங்கள் கண்ட பாம்பு  அன்று.  பாம் பு - பாகம் புறத்தது.  புறத்தே உள்ள பாகம்.

பாகம் என்பது பாம் என்று இடைக்குறைந்தது.

பாம் கு> பாங்கு, இதிலும் பாகம் பாம் என்றே ஆகிக் கு விகுதி பெற்றது.

வணக்கம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திருத்தம்: 24042024 1248