இந்தச் சொற்களின் பிறப்பு பற்று இப்போது உங்களுடன் ஆய்வுசெய்வோம்.
இவற்றுள் மிக்க எளிதான வழியில் அறியத்தக்க சொல் கோத்திரம் என்பதுவே.
கோத்தல் என்ற தொழிற்பெயரின் தொடர்பு காட்டும் கோ என்பது ஓர் ஏவல் வினை.
ஓரு வினை எச்சத்திலிருந்து முழுச்சொல்லை அமைத்துக்காட்டும் மரபு தமிழ் இலக்கணியரிடம் அருகியே உள்ளது எனினும், மற்ற மொழியாளரிடம் பெருவழக்கு ஆகும்.. எடுத்துக்காட்டு: பாலிமொழி, சங்கதம் முதலியவை.
கோத்து என்பது வினை எச்சம்.
கோத்து + இரு+ அம் > கோத்திரம் ஆகிவிடும்.
இவ்வாறின்றி, தமிழ் முறைப்படி,
கோத்தல் வினை:
கோ + திரம் > கோத்திரம்.
திரம் என்பது திறம் என்ற முழுச்சொல்லின் இடையினப்பட்ட திரிபாகவோ, இரு+ அம் என்பனவுடன் துகரம் முன்னின்ற இணைப்பாகவோ கருதலாம். இப்படிக் கருதுவதால் அடிப்படை வேறுபாடு எதுவும் எழுவதில்லை. தமிழ்மொழியின் நெடிய வரலாற்றில் ரகர றகர வேறுபாடுகள் பின் முளைத்தவை என்பதே மொழிநூற் கருத்து ஆகும், எவ்வாறாயினும் திரம் திறம் என்பவை விகுதிகளே.
சமஸ்கிருதம் என்பது உள்ளூர்ப் பூசை மொழியே என்பதால் கோத்திரம் என்பது தமிழென்றாலும் அன்றென்றாலும் ஒன்றே ஆகும். சொல் வேறுபடுதல் இல்லை. ஆய்வும் திசை பிறழ்வதில்லை. திரு அம்> திரம் எனினும் அதுவே.
கொத்து என்பது பெரும்பாலும் மலர் போலும் அஃறிணைப் பொருட்களுக்கும் பயன்பெறவு உள்ள சொல்லாதலின், அதனைக் கோத்திரத்திற்கும் பயன்படுத்துவதில் தடை எதுவும் இல்லை. கொத்து என்பதும் கோத்திரம் என்றாகும்.
கொத்து + இரு + அம் > கொத்திரம் > கோத்திரம்.
இது வெறும் நீட்டலே. கொ> கோ: முதனிலை நீண்டு திரிதல்.
வா என்ற பொருள் அடிப்படையிலெழும் சொல்லில் கூட வந்தான், வாருங்கள் என்று நெடிலும் குறிலுமாகிய நீட்டக் குறுக்கங்கள் வருகின்றன. கோத்திரம் என்பது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிவிடுகிறது.
கூடு என்ற வினைச்சொல்லுக்கு நிகராக துகர இறுதியை உடையதாய் கூகாரத்தில் தொடங்கு சொல் ஒன்று இல்லை. ஆனால் கூதல் என்ற சொல் கூது என்ற அடியில் தோன்றியதே ஆகும். அடிச்சொல் என்ற முறையில் கூடு> கூது என்பன இணையானவை ஆதலினாலே இவை பொருளொற்றுமை உடையவை.. இதன் பொருள் சேர்தல் என்பதே. கடுங்குளிரில் குழந்தையைத் தாய் இறுக அணைத்துக்கொள்வது ஒருவகைக் கூடுதலே. ஈருயிர்கள் மிக்க நெருக்கமாகி ஒன்றன் வெப்பத்தை மற்றொன்று மேற்கொள்ளுதல். குளிர் என்பது கூடுவதை விளைவிக்கிறது/ இதை உருவாக்குவது கூதல் அதாவது குளிர். இவ்வகையில் கூடுதலை வெகுவாகப் புரிவிப்பது கூதலே ஆகும். கூத்திலும் கூடுதல் உள்ளது ஆதலின், கூத்து என்ற சொல் கூடுதல் அல்லது சேர்தல் குறிக்கும் சொல்லே. பனிக்குளிர் காய்ச்சற் குளிர் இரண்டும் வேறுபடுத்தி அறியப்படுவது. ஊறு எனற்பாலவற்றுள் வேறானவை.
கூட்டம் என்பது ஒன்றாதல் ஆதலின் கோத்திரம் கொத்து என்பவற்றுக்குச் சமமாமவை ஆகும்.
குளிர் என்ற சொல்லும் குள்> குட்டை என்று பிறப்பிப்பதே. குளிர் உயிரினங்களை உடலைக் குறுக்கிக்கொள்ளச் செய்வதாகும். இவற்றில் தமிழ்ச் சொற்கள் தங்கள் பொருள் வளத்தையும் சொல்லாக்க உயர்வையும் காட்டுவனவாம்,
கோத்திரம் என்பது Gகோத்திரம் என்ற ஒலியால் வேறுபடுத்தல் வெறும் மேற்பூச்சுத்தான். கொத்து இரு அம் என்பதன் நீட்சிதான். காட்சிப் படுத்தத் தக்க வேறுபாடு ஒன்றுமில்லை. வேறுவகையில் விளம்புதல் வேண்டின் மனிதக்கொத்து என்னலாம்.
கூட்டு> கூத்து> கோத்து > கோத்திரம் எனினுமது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
திருத்தம்: 28032024 2226