"காரியத்தைக் கச்சிதமாய் முடித்த கருப்பண்ணன் " என்று சிற்றூரார் சேர்புகழ் மிக்குரைப்பர் , இதனைக் கேட்டு இது என்ன சொல் என்று நீங்கள் திகைத்திருக்கமாட்டீர்கள். காரணம் எந்தச் சொல்லாயினும் அதைப் பயன்படுத்தி, மனத்தெழும் கருத்தினைக் கேட்போனிடம் கொண்டுசேர்ப்பதே நோக்கங்களில் உங்களுக்கு முதன்மையாய் இருந்திருக்கும் என்பதுதான்.
எந்த வேலையாய் இருந்தாலும், ஒன்றைப் பிழை பிசகு தவறு வழுவுதல் குழப்பம், அரைகுறைப்பாடு என்று அடுக்கி, எல்லாம் எல்லாம் இல்லாத வேலைதான் கச்சிதம் என்று கூறலாம் எனினும், இந்த விளக்கம் - என்ன என்ன இல்லையோ அவை அனைத்தும் இல்லாமைதான் கச்சிதம் என்கிறது. ஆனால் இது சொல்லாய்வோனைத் மனநிறைவுப் படுத்தவில்லை.
இன்னொரு விளக்கம் மிக்கப் பொருத்தம் என்பதுதான் கச்சிதம் என்பதன் பொருள் என்கின்றது. பொருத்தமென்றால் என்ன? கூடவும் இல்லை குறையவும் இல்லை -- ஏற்ற அளவு என்கின்றார்கள்.
எதைச்செய்தாலும் அழகாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, இந்த இடுகையை எழுதும்போது ஒவ்வொரு வரியும் நீட்டம் ஒத்திருக்குமாறு வரவில்லை. படிப்போருக்கு அழகு காட்டும்படியாக வரிகள் அளவாக இருந்தால் அது கச்சிதமாக இருக்கிறது என்னலாம் என் கின்றது ஒருவிளக்கம். இதையும் ஒத்துக்கொண்டாலும், கச்சிதம் என்பது பிடிபடவில்லை.
இச்சொல் யூத மதச்சொல் என்பர். இந்தி மொழியில் ஒரு பெண்ணின் பெயர் என்றும் கூறுவர். இணைப்பு என்று பொருள் என்கின்றனர்.
இதே பொருளுடைய ஆங்கிலச் சொற்கள்: accurate, neat, correct, compact, perfect.
எந்தப் பாட்டைக் கொடுத்தாலும் பாகவதர் காச்சிதமாகப் பாடிக்கொடுத்துவிடுவார் என்று ஒரு வாக்கியமும் காணக் கிடைக்கின்றது.
ஆகவே செய்யும் வேலை வெற்றியாய் முடிவதைக் குறிக்கும் சொல்லாகவே உருவெடுத்தது இது வாகும். பிழைபடாமல் செய்து முடிப்பதைக் குறிக்கும் சொல். பிறகு பல்வேறு சுற்றுச்சார்புகளுக்கும் இது பயன்விரிந்த சொல்லாகும். செய்வோன் கடமை உணர்வுடன் செய்தாலே இது நிறைவாகும்.
கடமைச் சித்தம் > கட + சித்தம் > கடச்சித்தம் > ( வல்லொலியாகிய டகரம் நீங்கி) : கச்சிதம் ஆயிற்று.
பல வல்லொலி நீங்கிச் சுருங்கிய சொற்களைப் பழைய இடுகைகளில் தந்துள்ளோம். படித்துக் குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இதில் டகரம் இடைக்குறை. முன்பு கடமை என்பது தமிழில் கடம், கடன் என்றுதான் வழங்கியது.
கடன் கடமை உணர்த்திய எடுத்துக்காட்டுகள் வருமாறு:
சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே. - காண்க.
அறம் என்பது அறன் என்றும் வரும். " அன்பும் அறனும்.."
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே. இதுவும் கடமையே குறிக்கும்.
கடப்பாறை என்று சொல் அமையுங் காலை கடச்சித்தம் என்று அமைதலில் வியப்பு ஒன்றும் இல்லை.
கடமைச் சித்தம் > கடச்சித்தம் > கச்சிதம்
கடப்பாறை.