தீபாவளியைப் பற்றிய விளக்கங்கள் உலகிற் பல உள்ளன. சமண மதத்தினர் கூறும் விளக்கம் ஒன்று, புத்த மதத்தினர் சொல்வது இன்னொன்று, இந்து சமயத்தினர் கண்டது வேறொன்று, வரலாறு சொல்ல வருவோன் வரைந்து வைத்தது மற்றொன்று என்று இவை பலவென்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவை அனைத்தையும் படித்துப் பேசிக்கொண்டிருப்பது சிலர்க்கு வாடிக்கையும் வேடிக்கையும் ஆகும்.
மற்றவன் சொல்வதுதான் உம்மை ஆளும் தன்மை உடையதா? அவன் சொல்வது எதுவாயினும் உமக்குச் சொந்தப் புத்தி இல்லையா என்று எண்ணிப்பார்த்தால் உமது வலிமையின்மை உமக்கு விளங்கிவிடும்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்
என்றார் தேவர் தம் இனிய திருக்குறளில்.
இதன் பொருளை மணக்குடவர் என்னும் பண்டை உரையாசிரியர் சொல்லும் உரையுடன் உற்றுநோக்கி அறிவோமாக.
மணக்குடவர் உரை: நுண்ணியவாக ஆராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும் என்றவாறு.
மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார். அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.
ஊழ் என்ற சொல் பொருண்மை கருதுங்கால் சிலருக்கு மருட்டுவதாக இருப்பினும் இதன் அடிச்சொல் உள் என்பதுதான். ஒருவற்கு அவன்பால் உள்ளிருப்பது எதுவோ அதுவே ஊழெனலாகும். இதைத்தான் தெளிவு மிக்கில்லாதது என்று எண்ணப்படும் சொல்லாகிய விதி என்பதும் எடுத்துச்சொல்லும். முன்னரே எது அகற்றற்கு இயலாததாகி ஒருவன்பால் உள்ளதோ அது விதி. சாலையைக் கடக்கையில் கவனமாய் இருக்கவேண்டும் என்பது கடமை. அது தவறின் இடர் விளையும். விளையின் அது விதி எனப்படும். இதில் விளைவன யாவும் - மரித்தல் உட்பட - விதியினுள் அடங்கும். கணியத்தின் வழி இது முன் கூறுதற் கியல்வதாயின் அதுவும் விதியே. இவ்வாறு விதி என்பது விரிவுடைப் பொருளதாகிறது. ஆகவே ஊழென்பது உண்மை அறிவு. அடிப்படை அமைவு என்றும் கூறலாம்.
[ கணியம் என்பது சோதிடத்தை.]
எதைப் படித்தாலும் அவனுள் இருப்பதை வைத்துதான் அவன் பேசுவான். இதைப் புத்தி என்று சிலர் நினைத்தாலும், அஃது உண்மையன்று. புத்தி என்பது புதுவதாய்த் தோன்றி வழிகாட்டும் அறிவு. உண்மை அறிவு என்றால் முன்னரே உளதாகிய அறிவு. புதுமுறை அறிவு பரப்பியதால் கௌதமருக்குப் புத்தர் என்று பெயர் வந்தது. இவரை இவ்வாறு கூறியோர் தமிழர் என்பது தெளிவு.
உண்மை அறிவுக்கு மாறானது புத்தறிவு. ( புத்தி ).
புதிய நடப்புகளில் எவ்வாறு நடந்துகொள்வது என்று தெரிந்து நடப்பது புத்தி.
தீபாவளி என்பதற்கு இவ்வாறு நோக்கினால் பலவிதமாகப் பொருள் கூறலாம். தீயை முதன்முதல் உண்டாக்கக் கற்றுக்கொண்டு, காற்றின் துணைவலிமையைப் போற்றிக்கொண்டு வாழ்வதற்கு மனிதன் அறிந்துகொண்ட தினத்தைக் கொண்டாடுவதுதான் தீபாவளி. தீ எரிகையில் பாயும் வளி. அதைக் கட்டுக்குள் வைத்துப் பயன்படுத்திக்கொள்ளும் தன்மை எல்லாமும் அவனுக்குக் கைவந்த நாள் அதுவாகும், தீப ஒளி என்பதும் நல்ல பொருள்தான். எப்படியாயினும் இது இயற்கையும் தொடர்புடைய ஒரு பண்டிகை என்பது தெளிவாகும். இதில் ஆரியன் என்று யாரும் தொடர்புபட வில்லை. உம்முடன் தொடர்பு கொண்டவை தீயும் காற்றுமே ஆகும். பொங்கல் என்பதற்கு பொங்குதல் தொடர்பாவது போல் எரிதலும் காற்றும் தீபாவளிக்கு உரியனவாகுகின்றமை தெளிவு. வட இந்தியாவின் டி-வளி என்பது இதற்கு மிக்கப் பொருத்தமுடையதாகிறது. உமக்குப் பொருந்தியவாறு சிந்தித்து வாழ்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
சோதிடம் என்ற சொல்: சொரிதல் வினைச்சொல். சொரி + தி > சோர்தி > சோதி. சொரியும் ஒளி. எப்படி ர் போகும்? இப்போது பாரும். வரு > வார் > வாருங்கள்> வாங்க. எங்கே போனது 'ர்'? இதே போல் எழுத்து மொழியிலும் பல . கேளும் சொல்வோம். பழைய இடுகைகளைப் பார்த்துப் படித்ததுக்கொள்ளுவீராக.
.