ஊக்கமொடு சென்றுகுட வோலையிட்டோம் சாவடியில்
ஏக்கமொன்றும் இன்றியேநல் வாழ்வினிது காணபதற்கு
வாக்களிக்க வேண்டியது வாழ்குடிகள் நற்கடனே
தேக்கமின்றி முற்றுநிலைத் திகழொளியாத் தோன்றியவர்
உலகுபுகழ் பொருளியலாய் வாளர்திரு தருமன்அண்ணல்
நலங்கள்பல மக்களுக்கே அலுங்கலறச் செய்துயர்ந்தார்
தலங்கள்தொறும் யாவருக்கும் தந்துதொண்டு சிறந்தவரே
இலங்களிலே ஒருபெயராய்த் தமைநாட்டில் நிலைநிறுத்தி,
எலாஉள்ளங் களிலுமவர் இருந்திட்ட பெருமகனார்!
ஓபாமாவைப் போல்தீவில் யாங்கணுமே பெரும்புகழார்!
அபாரமாய் நல்லுழைப்பை அகிலத்திற் குரிமைசெய்தார்.
கபாலக்க னப்பிலாத கருதுமுயர் அருஞ்செயலார்
சண்முகப்பெரு மானருளால் இரத்தினமாய்ச் சொலித்தவரே
எண்முகஞ்செல் புன்னகைசெய் இன்முகமே தாமுடையார்.
வெண்மனத்தால் இம்முடிவை விளைத்தனர்நம் குடிகளுமே
ஒண்மனத்தால் இதுமுடித்த உயர்ந்தபெரும் பெற்றியரே.
வாழ்கவாழ்க நம்மதிபர் வளர்சண்மு-க ரத்தினமே
தாழ்விலாத சிங்கபுரி தளர்விலாத நடைபோட்டு
ஏழ்நிலமும் இரும்புகழை இடைவிடாத படிஎய்தி
வாழ்கவாழ்க இவ்வுலகில் வான் திசைகள் விளங்கிடவே.
வாழ்குடிகள் - குடிமக்கள்
குடவோலை - "ஓட்டுகள்", வாக்குகள்.
திகழொளியா - வெற்றியாளராய்
எலா - எல்லா (தொகுத்தல் விகாரம்)
தருமன் அண்ணல் - திரு தருமன் சண்முகரத்தினம்
உலகுபுகழ்- சர்வதேசப் புகழ் உடையவர் என்பது
தலங்கள்தொறும் - ஒவ்வொரு தலத்திலும் / இடத்திலும்
இலங்களிலே - இல்லங்களிலே
ஒருபெயராய் - as household name
நிலை நிறுத்தி - மாறிவிடாதபடி
ஒபாமா - முன்னாள் அமெரிக்க அதிபர்
அபாரமாய் - மிக்க அதிகமாய் ( அனைத்து இடத்திலும் பரவ)
கபாலக்கனம் - மண்டைக்கனம் அல்லது தற்செருக்கு (இல்லாத)
கபாலக்க னப்பிலாத-----கபாலக் கனப்பு இலாத (கனப்பு - கனத்தல்)
எண்முகம் - எட்டுத்திசை
வெண்மனத்தால் - உண்மையுடன், அலையாத மனத்தால்.
கழிபெரிய - மிகப்பெரிய
சிங்கபுரி - சிங்கப்பூர்
ஒண்மனம் - ஒளியுடைய மனம் ( அறிவுசார்)
ஏழ்நிலம் - ஏழுகண்டங்கள்.
இரும்புகழ் - பெரும்புகழ்
அதிபர் - குடியரசுத் தலைவர். President of country