சனி, 2 செப்டம்பர், 2023

தேர்தல் வாக்களிப்பு நம் கடமை

 வெண்பா


மக்களாட்சி  என்பதுவோ  மன்றிலேகி நிற்போர்க்குத்

தக்கபடி  சென்றுமது  வாக்களித்தல் ----  ஒக்குமிது

உம்கடனே என்பதை  ஓர்ந்திடுக  எந்நாளும்  

நம்நிலனே  நன்மை  குறி.


மன்றில் ஏகி  நிற்போர்   --- தேர்தல் விருப்பாளர்களாக நிற்போர்

சென்றுமது -  சென்று உமது

ஒக்குமிது -  யாவரும் ஒப்புக்கொள்ளும் இது

ஓர்ந்திடுக -  நினைவில் வைக்க

நம் நிலனே -  நம் நாடே

நன்மை -  நன்மை செய்யும்

குறி =  குறிக்கோளும் ஆகும்.

செய்யும்,  ஆகும் என்று இயைத்து உரைக்க.

நன்றாம்  குறி  என்று முடிக்கலாம் எனினும் முனையவில்லை.  



இன்னும் இருநாட்களில்  இங்கு அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது.  குடிமக்கள் மக்களாட்சிக்கு ஏற்றபடி   தங்கள் வாக்கை அளிப்பது நம் கடமை,

இதை எழுதியது 31.8.2023இல்  ஆகும்.  ஆனாலும் நாளை மறுநாள் தேர்தல் தினமாதலால்  இது 4ம் தேதி செப்டம்பர் மாதம் வெளிவரும்.


வியாழன், 31 ஆகஸ்ட், 2023

இமயம் வென்ற தமிழரசன் ( சொல்லமைப்புடன்)

 தமிழிலக்கியத்திற் புகழப்படும்  வேண்மாள் நல்லினி  என்பவள் ஒரு  குறுநில மன்னனின் மகள்.  இக் குறுநில  ஆட்சியாளர்கள்  "வேள்" எனற பட்டத்தினர் ஆதலின்,  வேளின் மகள்  "வேண்மாள்"  எனப்பட்டாள்.  வருமொழி  " மா  "  என்ற எழுத்தின்முன்  வேள் என்ற சொல்லின்  ஈற்று " ள் "  என்பது "ண்" என்று மாறும்.  இதைப்போலவே  கேள்+ மாள்"  என்பது  கேண்மாள் என்று திரியும்.

நல்லாள்  என்பதும்  நல்லினி என்பதும் ஒருபொருளனவே.  நல்லினி  ஒரு பெண்ணின்  ( இளவரசியின்)  பெயராக வருகிறது.   நல்+ இன் + இ = நல்லினி. பெண் குழந்தைக்கு இது நல்ல தமிழ்ப்பெயர்.

இமயவரம்பன் என்ற அரசன்,  வடதிசைச் சென்று போர்புரிந்து  வெற்றிகள் பெற்று  அப்பட்டப்பெயரைச் சூட்டிக் கொண்டான்.   இமயவரம்பன் என்பது ஒரு காரணப் பட்டப்பெயர்.  இமயமலைகளை எல்லையாகக் கொண்டு ஆண்ட பெருமைக்கு உரியோன் என்பது பொருள். தமிழ்  மலையாளமாக மாறாமுன் இவன் இருந்தான்.  இது  சங்ககாலம்.

அவன் வில் கொடி இலாஞ்சனையை  இமயத்தில் ஒரு  நீர்வீழ்ச்சி  உள்ள இடத்தினருகில் பொறித்தான்.  இவ்விடம் எங்கு என்று அறியப்படவில்லை.

இலாஞ்சனை என்ற சொல்:

இல்  -   இலக்கு,  குறி  அல்லது குறியீடு,

வேலை முடிந்தபின் ஒருவன்  எங்குச் செல்கிறானோ  அது  இல்>  இல் + கு >  இலக்கு.   அகரம் சாரியை. அல்லது இடைநிலை.  அ -  அங்கு.  கு-  சேர்விடம் என்று பொருள் விரிக்கலாம்.  இல் என்பது வீடு என்றும் பொருள்.  ஆனால் இலாஞ்சனை என்ற சொல்லில் இந்தப் பொருளில்லை.

ஆகும் ,  இது இடைக்குறைந்து  ஆம்  என்றாகும்.

தன்  -  தனது.  தன் -  சன்,    இங்கு சன் என்று திரிந்தது.  த என்பது ச ஆகும்.

இல் +  ஆம் + சன் + ஐ =  இலாஞ்சனை.

இவ்வாறு பல சொற்கள் திரிந்துள்ளன.  பழைய இடுகைகளிலிருந்து மேலும்  குறித்துக்கொள்க.

தம்தம் >  சம் தம் > சந்தம்.


சந்தம் >  சத்தம்  (  வலித்தல் விகாரம் ).

மெல்லெழுத்து வல்லெழுத்தானது.

மேலும் திரிந்து  அது சப்தம்  ஆனது.

இவன் ஆரியரை வணக்கினான்.  இவர்கள் பேரிசை  ஆரியர்கள்.  இந்த இசைவாணர்கள்  திரண்டு அவனை எதிர்த்தனர்.  அவர்களை அவன் முறியடித்தான்.   ஆர் இயர் என்றால்  வாத்தியம் வாசித்தவர்கள் மட்டுமல்லர், மரியாதைக் குரியவர்களாய் முன் இருந்தவர்கள். அவர்கள் எதிர்த்தனர்.  வெள்ளைக்காரன் புனைந்துரைத்த  ஆரியர்  அல்லர்.   Aryan Invasion Theory and  Aryan Migration Theory இரண்டும்  "தியரி"கள்  (  தெரிவியல்கள்)  தாம்.  அரசன் யவனர்களையும் பிடித்து ஒடுக்கினான்.  இந்த யவனர் அங்குப்  பணி புரிந்தவர்கள்.


பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ

நெய்யைத் தலையில் பெய்து ( ஊற்றி ) அவ்விடத்தைக் கைப்பற்றினான். பண்டை உலகில் தண்டனை வகைகள் பலவிதமாய் இருந்தன,  Read history of punishments in the ancient world and Middle Ages

இப்பாடலை இங்குக் கண்டுகொள்க

: https://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_99.html


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

உலகினுக்கு "சந்திராயன்" தந்த இஸ்ரோ

 அறிஞர்பலர்  ஆங்குள்ளார்  ஆர்ந்துழைக்கும்

சிறியபாட்  டாளிபலர்  நிதிநிறுவாகப்

பெருந்தொழிலோ  ரிடையேழை  மக்கள்பல்லோர்

அறிவியலார் அவணுண்டோ என்பார்க்கெல்லாம்

அறியவைக்கும் பெருவியப்பாய் அமைந்ததொன்றே

அழகுநிலா வெற்றிகொண்ட சந்திராயன்தான்;

உரியமுறைச் செயல்திறனால் அமைத்தனுப்பி

உலகுபோற்ற நிலவாய்ந்தோர்  கழகமிசுரோ.


தாமரிதின்  முயன்றறிந்த  நுணுக்கம்தன்னைத்

தாரணிக்குத் தருதற்கும் தயங்கும்பல்லோர்

யாமெவணும் காண்கின்ற  உலகில்ஒப்பில்

சாதனையே  செய்கழகம் இசுரோவென்போம்;

தாம்தமித்துத் துணையணையா  அடைந்தமேன்மைத்

தனிச்செயலார் இசுரோவின் கலைமேற்கொண்டு,

தேமதுரம் உலகுக்குத் தரும்பரதம்தான்

தேசமெனத்  திகழ்தக்கத் தீதில்லாதார்.


அரும்பொருள்:

ஆங்குள்ளார்   -  அங்கே உள்ளார்

ஆர்ந்து உழைக்கும் - நிறைவாக உழைக்கும்

நிறுவாகம் - நிர்வாகம்  ( நிறுவு,  வினைச்சொல்)

இசுரோ- இந்தியாவின் விண்வெளி ஆய்வுக் கழகம்

யாமெவணும் -  யாம் எவணும் -  யாம் எங்கும்

அறிவியலார் -  விஞ்ஞானிகள்

நிலவாய்ந்தோர்  -  சந்திரனை ஆய்வு செய்த நிறைவு  அறிவினர்

தனிச்செயலார் -  தனியாகப் பாடுபட்டுச் செய்து  முடித்தோர்

துணை அணையா -  மனம் வலிமை குன்றிப் பிறரை  நாடாத

கலை - கல்வி, ஞானம்.

பரதம்  -  பாரதம்,  இந்தியா.

பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர்தங் குலக்கொடி
என்பது மணிமேகலை, பதிகத்திலுள்ள வரி.

தேமதுரம்  - தேன்போலும்  இனிய  

சொன்மூலம் அறிக.

திகழ்தக்க - திகழ்வதற்குத் தகுந்த 

மெய்ப்பு:  பின்னர்