திங்கள், 20 பிப்ரவரி, 2023

இலம்போதர சுந்தரன் விநாயகன்--- தமிழ்ப் பொருண்மை

முற்சொலவம்:-
(foreword)
  இதற்கான தமிழ்ப்பொருளை இங்கு ஆய்வோம்.  அதற்குமுன் இதற்குக் கூறப்படும் சங்கத  ( சம்ஸ்கிருதப்) பொருளை  அறிந்துகொள்வோம்.  எத்தனை பொருள்கள் இவ்வுலகில் உண்டோ,  அத்தனையையும் ஆய்ந்து கூறுவதுதான் உண்மை ஆராய்ச்சி.  ஒன்றை அறிந்து இன்னொன்றை ஆய்ந்தறியாமல் விடுவது  ஆய்வாளன் செய்வதன்று.  பற்றன் மனத்தால் நாடுவோன் ஆதலின், அவன் தன் மனத்துக்கண் தோன்றுவதையே  உண்மைப் பொருள் என்று கொள்வது அவன் காட்சிக்கு ஏற்புடைத்தாகலாம்.

ஒன்றுக்கு ஒன்றன் மேற்பட்ட பொருளிருந்தால் அவற்றுள்  ஒன்று பொய் 
என்கின்றான் ஒரு மேல்நாட்டு ஆய்வாளன்.  இது சரியன்று.  தலைவலி வந்தால் அதற்கு மருத்துவத்தில் ஒரு காரணம் என்று கூறமுடியாது.  அது பல காரணங்களால் எழலாம் என்பதுபோல்,  சொல்லிலும் பல காரணங்கள் ஏற்படலாம். ஒன்றுதான் வேண்டும் எனின் அதைக் கண்டுபிடிக்க முயலலாம். உலகில் மொழிகள் பல.  விநாயக வணக்கம், இந்தியாவிலும்  தாய்லாந்திலும் இந்தோனேசியாவிலும் தென் கிழக்காசியாவிலும் இருந்துள்ளபடியால்,  பொருண்மைகள் எல்லை கடந்துவந்துமிருக்கலாம் என்று அறிக.  ஒரு குறுகிய புட்டிவாயிலின்மேல் கட்டிப்பிடிக்கும் பருமன் உள்ள கல்லை நிறுத்திக்காட்டுபவன், வேறு நிலப்பகுதிகளிலும் உள்ளான். நம்பிக்கை இல்லாதவன் அதைச் செய்து காட்டினால் அதை அப்போது ஆராயலாம்.  பொருண்மை இரண்டிருந்தால்  இரண்டையும் ஏற்று அமையலாம்.  இரண்டு கடைகளில் சாப்பிட்டு சாம்பார் இருவ்கைச் சுவைதருமேல்,  ஒன்றை இன்றும் இன்னொன்றை அடுத்தநாளிலும் சாப்பிடலாம்.

பொருண்மைகள்:

சங்கதத்தில்:

லம்போதர.   இதை லம்போ + உதர என்று பிரித்து,  நெடிதான வயிறு உடைய   என்று உணர்த்துவர்.

விநாயகனுக்கு  ( வினை ஆய் அகன் > வினாயகன் )  ( வி + நாயகன் என்பது இன்னொன்று)   பெருவயிறு என்பது உருவவழிபாட்டு முறையில் அறியப்படுவது.  லம்போ உதர.  சங்கத எழுத்துக்களைப் பார்த்து ளகர இருப்பு இன்மை உணர்ந்த காலை இன்னும் சுவை ஆகுமே.   முதற்குறை என்பது தமிழிலக்கணத்தில் உள்ள எழுத்துச்சுருக்க வசதிதான். 

நீளம் என்ற சொல்லின் முதற்குறை இச்சொல்.  நீளம்போ >  லம்போ.   ல-வுக்கும்  ளவுக்கும்  மாற்றீடாக சங்கதத்தில் ல-   என்பதே (லகரமே) வரும்.. ஆனால் தமிழில்  மொழிமுதலாக ( சொன்முதலில்)  லகரம் வராது என்னும் இலக்கணதத்தால் இதை ஒன்று சங்கதச்சொல் எனவேண்டும்,  அல்லது தவற்று வீழ்ச்சி எனவேண்டும்.  முன்னதே கடைப்பிடித்தனர்.

இனி உதரம்.    முதுகுத் தண்டு பின்புறம்  அருகிலும்,  உடலின் முன்புறமாகவும் இருப்பது வயிறு.   ஆதலின்,  உது -  முன்புறமாகாவும்,  அரு - முதுகெலும்புக்கு  அருகிலும்  அம் - அமைந்திருப்பது  உதரம்.  ஆகவே வயிற்றுக்கு நல்ல பெயராய் அமைந்தது.  தமிழ்மூலங்களால் அமைந்த சொல் உதரம். சுட்டடியில் எழுந்தது.   அது, இது, உது என்பன சுட்டுச்சொற்கள்.  "போஉதர(ம்)"  தமிழ் வினைத்தொகைப் பாணி.   நீளம்போ உதரம்!!

தமிழில்:

இப்போது  லம்போதர என்பதை  இரண்டாம் (தமிழ்) முறையில் பார்க்கலாம்.
லம்  என்பது  இல் + அம் .  இலம்பாடு என்பது போல.  இலம்பாடு என்பது  வறுமை.

இலம் போது என்றால்  இல்லாத காலம் .  இன்மை, வறுமை.

அற -  இல்லாமல்.

இலம்போதற  -  இலம்போதர:   வறுமைத் துன்பமில்லாமல்.   றகரத்துக்கு ரகரம்.

வறுமை என்னும் துன்பம் இல்லாத  (  தினமும் கொழுக்கட்டை கிடைக்கிற என்றும்  வைத்துக்கொள்ளலாம்.).  யாருக்கும் வறுமையைக் கொடுக்காத,  வளம் தருகிற என்றெல்லாம் கொள்ளலாம்.

வயிறு நீண்டவன் என்பதினும் வளமெலாம் தருகிறவன் என்பது ஆன்மிகத்துக்கு மேலும் உகந்தநிலை.  எல்லாம் நன்று  என்றும்  ஏற்றுக்கொள்ள இயலும். 

விண்ணில் நாற்றிசையிலும் உள்ள இடங்கள்,   கண் - இடம்,   கணம்   ( கண்+அம் >  ~: திசையாமிடங்கள்.)  விண் என்பது ஐம்பூதங்களில் ஒன்று. விண்டிசைக் காவலன் தான் விநாயகன் - வினாயகன்.  கணங்களில் அதிபதி,  ஆதலின் கணபதி.  பூமண்டலத்தினுள் கேடுறுத்தும் யாதும் வந்துவிடாமல் காக்கும் இயற்கை ஆற்றல். இந்த இயற்கையுண்மையில் அறியப்பட்ட தெய்வத்திருவே கணபதி. இயற்கையன்னையின் மறுவிளக்கமே நம் மதம் அல்லது கொள்கை.  சூரியன்,  சந்திரன் முதலியன இயற்கைத் தேவர்கள்.  ஆகவே எந்தக் கற்பனையும் இல்லை.  இவற்றினை வணங்குமுறைகளை  நெறிப்படுத்தியே கொள்கை அமைந்தது காண்க.  விண்ணனோ நீரைக் குடிக்கிறான்.  நெருப்பைக் கக்குகிறான்.  எல்லாம் நடக்கிறது.  அவன்- அவள் பெருமூச்சு ஒரு புயல்.  எல்லாம் இல்லை இல்லை என்று பழித்தாலும், துருக்கியில் ஆட்டம் கண்டபோது -  இயற்கை அன்னை கூத்தாடியபோது செத்துக்கிடப்பது தவிர மாற்றொன்று உண்டோ?  அலையாகவும் வருகிறாள், கலையாகவும் வருகிறாள் அன்னை.  நீ என்பது இல்லை என்றே அடங்குவது நன்று.
அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.


சனி, 18 பிப்ரவரி, 2023

சிபாரிசு என்ன சொல்?

 சிபாரிசு என்ற சொல்லை இப்போது பார்ப்போம்.  இதைச் சிற்றூரார் "சிவாரிசு" என்று திரித்து ஒலிப்பர்.  இது யாது என்று சொல்லாராய்ச்சியாளனை இது மருட்டும், பிற மொழியோ என்று மயங்கச் செய்யும்.

இங்குச் சி  என்ற ஒற்றை எழுத்தாய் இருப்பது " சீர் " என்ற  சொல்லேதான்.

சீர் அரங்கம் என்பது சீரங்கம் ஆனது காண்க.  மரூஉ.

அடுத்து  " பார் " என்ற சொல் வருகிறது.

கடைப்பாகம் : இது  என்பதன்றி வேறில்லை. தகர வருக்கம் சகர வருக்கமாகும்.  அதன்படி,  இது என்பது இசு  என்றாகிவிட்டது. தனிச்சிறப்புடைய காரி,  தனி- சனி என்றானது போலுமே. கோள்களில் ஈசுவரப் பட்டமுடையது சனி.

எழுத்துக்கள் சொல்லியன்முறையில் திரிந்துள்ளன.

"சீர்பாரிது!"  என்பது சிபாரிசு ஆனது.  சிவ்வாரிசு  என்று திரித்துச் சொல்வார்கள்.   ஓர் ஓலையில் நல்லதொன்றிருந்தால், அடுத்தவரிடம் குறிப்பாக எழுதியனுப்ப : " சீர் பார் இது" என்பது இனிய வேண்டுகோள் ஆகும்.

இது உண்மையில் ஒரு வாக்கியத்தின் மரூஉ   ஆகும்.  இற்றைச் சொல் : பரிந்துரை.

சீர்ச்சை என்ற சொல் மறைந்து  சிகிச்சை என்றானது போலும் ஒரு திரிபு இது.  ஆனால் சீர்ச்சை என்பது வாக்கியம் அன்று.  ஒரு சொல்;  சை என்பது  விகுதி.

இதையும் வாக்கியம் ஆக்கலாம்:  சீர்செய் > சீர்ச்செய்> சிகிச்சை. என்று. செய் என்பதை முதனிலைப் பெயர் என்னலாம்.  ஒரு வினைச்சொல்லின் பகுதியே நின்று பெயரானது.  தண்செய் > தஞ்சை என்பதும் இத்தகையதே.  இதில் செய் என்ற வினைச்சொல் நிலங்குறித்துப்பெயரானது. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

வியாழன், 16 பிப்ரவரி, 2023

"பகு" என்ற தமிழ்ச்சொல்லின் உருவாக்கம், மற்றும் "ப்ளஸ்" (இலத்தீன்)

 இதனை ஒருவகையில்  உணர்ந்துகொள்ளலாம்.

ஒருவகையிலன்றி, இன்னொரு வகையிலும் உணர்ந்துகொள்ளலாம்.  அல்லது ஒன்று என்ற வகையிலன்றி ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளிலும் உணர்ந்துகொள்ளலாம்.

பல்  என்பது  பல என்னும் பொருளதாம்.

இதனுடன் "கு: என்ற விகுதி,   -   இது ஒரு வினையாக்க விகுதி --  கொண்டு சேர்க்கலாம்.

ஆகவே,  பல் + கு >  பல்கு ஆகிறது.   ~தல் என்ற தொழிற்பெயர்விகுதி  சேர்ப்பின், பல்குதல் ஆகிவிடும்.  பல்  என்பதே அடிச்சொல். 

இப்போது,   பல்குதல் என்பதை  மேல் சொன்னதைப்போல்,  பிரிக்கவும் செய்யாமல் சேர்க்கவும் செய்யாமல்,  முழுச்சொல்லாகக் கொண்டு,  ஆராய்வோம்.  

பல்குதல்,  இதில் லகர ஒற்றை எடுத்துவிட்டால்  ( எடுத்துவிட்டால் என்றால் ஒலிக்காமல் விட்டுவிட்டால் ) ,  அது பகுதல்  ஆகிவிடும்.  அவ்வாறானால்,  பகுதல் என்பது ஓர் இடைக்குறை.  இவ்வாறு கருதுவது சரியானால்,  பல்குதல் எனற்பாலது இடைவிரி  ஆகிவிடும்.

ஆகவே நாம் எவ்வாறு கருதிக்கொண்டு ஒரு சொல்லைப் பார்க்கிறோம் என்பதைப் பொருத்தே,  ஒன்று இடைக்குறையாகவோ,  இடைவிரியாகவோ நமக்குத் தெரிகிறது.

பல்குதலென்பதும் பகுதல் என்பதும் ஒன்றுதான்.

பகுதல் என்பதில் கு என்பது  ~கு என்ற வினையாக்க விகுதியானல்,  ப -   என்பதே  அடியாகும். ( கு என்பது வேற்றுமை உருபும் ஆம்.)

மொழி தோன்றிய ஆதிமனிதனின் காலத்தில்,   ப என்பது  ஒன்று ஓர் உருவினதாக இருத்தலினின்று வளர்வதையும்  அதுவன்றி ஒன்றிலிருந்து வெட்டுண்டு ஒன்றுக்கு மேற்பட்டு உருக்கொண்டு தோன்றுவதையும் ஒருங்கு குறித்திருந்தது என்பது தெளிவாகிறது.

இது மொழியில் கருத்துகள் வளர்ச்சி பெற்றதைக் காட்டுகிறது..

கருத்துக் குறுக்கம் பின் பெருக்கம் ஆவதே வளர்ச்சி.

~us  என்பது இலத்தீன் மொழியில் ஒரு விகுதி.

பல் ( அடிச்சொல்)  >   பல் + us >  plus   (ஒன்று பலவாவது அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாவது),  அல்லது ( ஒன்றுடன் இன்னொன்று கூடுவது அல்லது சேர்வது)  ஆகிய இரண்டுக்கும் பொதுவானதாகிய கருத்து  ஆகும்.

 அது =  அஸ்.

து என்பது சு  ஆகும்.  த- ச போலி.

சு என்பது ஸ்  ஆகும்.

எனவே,  சு என்பது ஸ் ஆனது நிறுவப்பட்டது.

ஒரு மரத்துண்டு நீண்டிருந்து சப்பட்டையாகவும்  இருந்தால் அது "பலகை" என்று பெயர்பெறுகிறது.

இது ஒரு துண்டு ஒன்றாக இருந்து நீள்வதையும்  இரண்டாகவோ அல்லது அதனின் மேற்பட்டிருத்தலையும் குறிக்கும்.

பல் > பல்+ அ +கை(விகுதி) > பலகை.

அ என்பது அங்கு நீள்தலையும் அல்லது இடைநிலையையும் குறிக்கும்.

அ என்பது சுட்டடிப் பொருளையும் தரவல்லது.



அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.