அமண் என்ற சொல் சமண் என்றாகும். அகர முதலன சகர முதலாய்த் திரிதலென்பது பெரிதும் சொல்லாய்வு (திரிபியல்) அறிஞர்களால் ஒப்பி ஏற்கப்பட்டதே.
இதனை முன்னிறுத்தி, சகிப்பு என்ற சொல்லின் ஆக்கத்தை ஆய்ந்தறிவோம்.
வெளியில் காணும் பழக்கமில்லாத ஒருவனிடம் ஏதேனும் சரியாகச் சொல்லிவிட்டாலும் அதைத் தவறாக எடுத்துக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவதைக் காண்கிறோம். ஒரு கடையில் அமர்ந்து குளம்பிநீர் (காபி) அருந்தும்போது ஒரு தேவதை போலும் அழகியைச் சற்று ஆசையுடன் ஒருவன் பார்த்தாலும் அவள் கோபித்துக்கொள்வாள். இவைபோலும் பல -- ஒக்க இருக்குங்கால் ஏற்படும் உரசல்கள், வீட்டினுள்ளும் எப்போதும் நடக்கும். ஆனால் அதற்காக வீட்டில் வாழ்வோர் யாரும் ஒருவருடன் மற்றவர் கோபித்துக்கொள்வதில்லை. ஆகவே சகித்துக்கொள்வ தென்பது ஓரகத்தினுள் வாழ்வோருக்கு ஓர் அன்றாட நிகழ்வு என்பதைப் பண்டைச் சொல்லறிஞர்கள் கண்டறிந்தனர்.
சொல்லறிஞர் என்போர் வலிமையான விளம்பரப் பின்னணி உடையவராய் இருக்கவேண்டு மென்பதில்லை. விளம்பரம் ஒன்றுமற்ற அடக்கமுடைய அறிஞர்கள் வீடுகளுக்குள் குடத்திலிட்ட விளக்குப்போலப் பல்லாயிரவர் உண்டு. அவர்களை நாம் அறியவில்லை என்பதற்காக அவர்கள் அறிஞர்கள் அல்லர் என்பது சரியன்று. ஓர் அறிஞனை அவன் தன் ஆக்கமுடைமை கொண்டு தீர்மானிக்க வேண்டுமே அன்றி விளம்பரமுடைமை கொண்டு தீர்மானித்தல் தவறு. பல சொல்லறிஞர்கள் நமக்குத் தெரியாமலே வாழ்ந்து மறைந்துவிடுகிறார்கள். சிலர் வாய்ப்பின் காரணமாய் அல்லது சூழ்நிலை முதலியவற்றால் மக்களால் அறியப்பட்டு புகழ் பெற்றுவிடுகிறார்கள்.
அகம்வாழ்வோர் முரண்பட்ட சுற்றுச்சார்புகளிலும் பொறுமையையும் அடக்கத்தையும் கடைப்பிடிப்போர். முரண்பாடுகள் வந்தாலும் வீடு என்னும் அரண் அவர்களைக் காப்பாற்றிவிடுகிறது. தாத்தா சொல்கிறார்; அப்பா சொல்கிறார், அம்மா அன்பினால் முரண்பட்டவரையும் சரண்தொட்டு நிற்குமாறு மாற்றிவிடுகிறார். இணக்கப்போக்கு எனற்பாலது இல்லத்தின் நலந்தரு விளைவு ஆகும்.
அகம் - சகம் ஆகிற்று. சகம் என்பதிலிருந்து சகித்தல் என்பது தோன்றியது. இதற்குச் சொல்லமைப்புப் பொருள், அகத்தில் நடப்பதுபோலப் பொறுமையுடன் நடந்துகொள்வது.
மரம் > மரித்தல் என்பவற்றில் உள்ள உறவினைப் போன்றது இதுவாகும். மரத்திற்கு உயிரோ உணர்வோ இலது என்று ஒருகாலத்தில் எண்ணினர். அவற்றுக்கு உணர்வு உண்டு என்பதை ஜெகதீச சந்திரபோஸ் முதலிய அறிஞர் காட்டினர்.
ஆகவே சகிப்பு இவ்வாறு தோன்றிய சொல்தான் என்பதை அறிக.
இங்குள்ள பூசாரிகளில் எவனும் ஒருவன், எப்படி வெளிநாட்டு மொழியைக் கற்று அதில் பூசைக்குரிய சொற்களைக் கோத்து ஆராதனை செய்வான்? ஓரிருவர் அல்லர், பல்லாயிரவர் ஒரு குழுவாகக் கற்றுப் பணி செய்து அணி செய்தது எவ்வாறு? சமஸ்கிருதம் என்பது தமிழின் நிழல் மொழி. வீட்டுத் தமிழிலிருந்து மரத்தடி நிழலில் தோன்றிய மொழி. இதை இங்கு விளக்கும் வழியால் உணர்ந்து கொள்ளலாம்.
சகிப்பு - ஓரகத்து ஒருங்கு வாழ்தலினால் ஏற்படும் புரிந்துணர்வு என்று இதனை வரையறவு (definition) செய்தலே சரியாம். அவ்வாறு வாழ்தலாகிய அதனின் விளை பொறுமைப் பண்பு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
மீள்பார்வை: 24092022 1421 செய்யப்பட்டது.