புதன், 21 செப்டம்பர், 2022

சாசனம் - பொருண்மை.

 இப்புவியில் உள்ள பொருள்களில் தன் நிலையான இருத்தலுக்குப் பிறபொருளைச் சாராமைகொண்டு இயல்வதே  உண்மைப் பொருளாம். அப்பொருளை மெய்ப்பிக்க இன்னொரு பொருள் தேவையில்லை. அப்பொருளை உளதாய் ஆக்குதற்கு இன்னொன்று தேவையில்லை.  அது தானே இயல்வது.  காலத்தால் அழிவது எப்பொருட்கும் இயல்பு ஆயினும் பன்னெடுங்காலம் அது இயல்வதாயின், காலத்தால் அழியாமையை நெருங்கி நிற்கும் தன்மை அஃது உடையது என்று நாம் கொள்ளலாம்.  ஒரு மண் பாண்டத்தில் ஒன்றை எழுதிக்கொடுத்தால் அஃது விரைவில் அழிதல் தன்மை உடையதாகிவிடும் .  ஒரு பொற்பட்டையிலோ செப்புப்பட்டையிலோ எழுதித்தரின், அது நெடுநாள் உலகி லுள்ளோருக்குக் காணக்கிடைக்கும் என்று அறிக.

நெடுநாள் அழியாதிருத்தலுக்கு.  ஒருபொருள் தன்னைத் தான் சார்ந்திருத்தல் வேண்டும்.  

சாசனம் என்பது நீண்டநாள் நிலைத்திருக்கும் தன்மையை உடைய ஓர் ஆக்கம் ஆகும்.  இச்சொல்லில் இரண்டு உறைவுச்சொற்களும் ஒரு விகுதியும் உள்ளன.   அவை:  சார்(பு);  தன்;  அம் (இது விகுதி).

சார்பு என்பதில் "சார்"  என்பது வினைச்சொல்.  இது கடை எழுத்தாகிய ரகர மெய் மறைந்து  "சா"  என்று நின்றது.

தன் என்பது சன் என்று திரிந்தது.  இது எவ்வாறு எனின்,  தங்கு என்ற சொல் சங்கு என்று திரிந்ததுபோலுமே ஆகும்.  ஓட்டினுள் தங்கி இருக்கும் உயிரியே சங்கு ஆகும்.  தன் > சன்; தங்கு> சங்கு.   அரசன் தரும் விருந்தோம்பலுக்குத் தங்கி உண்டுமகிழ்ந்து,  பின் அவன்முன் பரிசில் பெறும் இடம் சங்கம் ஆனது காண்க.  தங்கு> சங்கு> சங்கம் என்று திரிந்தது போலாம்.  அமைதல் காட்டும் விகுதியே அம் ஆகும்.

ஒரு சான்று வேண்டின் தன்னைத் தான் மெய்ப்பித்துக்கொள்வது:  சார்+ தன் + அம் > சா+ சன் + அம் > சாசனம் ஆனது. "தன்னையே சார்ந்தியல்வது". ஒரு சாசனத்துக்கு வேறு சான்று வேண்டாமையே அதன் பொருண்மை.

இதன் மூலச்சொல் சார்தனம் எனற்பாலது அவ்வடிவில் கிட்டாமைக்கு, அச்சொல் வெகுநாள் பண்டை அரசுகளில் புழக்கத்திலிருந்து திரிந்து பின்னர் எழுத்தில் அதனைப் பதிந்தோரால் அறியப்பட்டமையே காரணமாம் என்பது தெளிவாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

edited on 23092022


பேரக் குழந்தைகளுடன் வனஜா





வனஜா அம்மையார் இந்தப் படத்தில் தம் பேரக்குழந்தைகளுடன் தோன்றுகிறார்.

ஆசிரியப்பா

சோறும் பாலும் ஊட்டி மகிழ்ந்தபின்

ஆரத் தழுவி  அன்புமுத் தமிட்டுக்

கூறும் கதைபல  இருவரும் மகிழ

மகிழ்வினைக் கண்ட பாட்டி வனஜா

நெகிழ்வுடன் ஓடி  ஆடியும் பாடிய

அந்த நாள்தனை இன்று 

முன்தரும் படங்கள் கண்டுமகிழ் வீரே..

 


சனி, 17 செப்டம்பர், 2022

சின்னப் பிள்ளை

 இது தார்சா  பிள்ளையின் படம்.  ( கீழ்வருவது இன்னிசை வெண்பா)

அம்மாவைப்  போலொரு கைப்பையைத் தானெடுத்துச்

சும்மா சுழன்றுவரப் போகிறேன் என்கின்றாள்

இம்மா நிலத்தே இதுவும் அறிகபெண்ணே

உம்மால் இயலாமை இல்.

தான் எடுத்து - தான் கையிற் பிடித்தபடி

சுழன்றுவர -  ஊர்கோலம் செல்ல

இம்மாநிலத்தே -  இவ்வுலகில

உம்மால் - உன்னால் என்பதன் பன்மை

இயலாமை -  செய்ய முடியாத எதுவும்

நீ  திறமைசாலி என்பது கருத்து.



தார்சா படத்தில்.