வெள்ளி, 14 ஜனவரி, 2022

மாட்டுப் பொங்கல் வாழ்த்து

 மறுநாளில் பொங்கலுக்கு மாட்டுப் பொங்கல்

மருவியதை வரவேற்போம் மதித்துப் போற்றி,

ஒருநாளும் நாம்மறவோம் உழவர் தம்மை,

உலகுதனக் குணவூட்ட உழைப்போர் அன்னார்,

வெறுநாளாய் உழைப்பின்றி வீண்செய்  வோரை

வெறுத்திடுங்கள் என்றறைந்தான் பெரும்பா வல்லோன்,

நிறுவியதோர் வாழ்வென்றால் ஏர்வாழ் வொன்றே, 

நின்று அதனை வணங்கிடுவோம் இன்றே நாமே.


ஏரென்று  சொன்னாலே மாடின்றி  இல்லையால்

ஊர்கூடித் தூக்கும்  அது.

 

ஏர்வாழ்வு - உழவர் வாழ்வு.

மருவி அதை -  அதைத் தழுவிக்கொண்டு,  ஏற்றுக்கொண்டு,

என்றறைந்தான்  -  என்று சொன்னார்

பெரும்பாவல்லோன் -  மகாகவி பாரதி.

நிறுவிய -  நிலைத்த,  நிலைநாட்டப்பெற்ற.

ஏர்வாழ்வு - உழவர் வாழ்வு

நின்று  -  உடற்பணிவு செலுத்தி.

வணங்கிடுவோம் - மனத்தாலும் போற்றுவோம்.

இல்லையால் = இல்லாததனால்.

தூக்கும் - போற்றி உயர்த்தும்.


மெய்ப்பு  பின்னர்.

உடன்கட்டை ஏறுதல் -- நிகழ்வுகளும் தியாகமும்.

 தியாகம் என்ற சொல்லை மறுபார்வை செய்தறிவோம்.

தீயாகம் என்பதே குறுகித் தியாகம் என்றானது என்பது விளக்கப்பட்டது.  முன் எழுதிய விளக்கம் எதுவும் மாற்றம் பெறவில்லை. அதுதான் இங்கு இன்னும் கொள்ளப்படுகிறது.

முதன்முதலாக, இது கணவன் இறக்க, மனைவியும் உடன்கட்டை ஏறிய செயல்களிலிருந்து ஏற்பட்டிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இத்தகு நிகழ்வுகளில், அவள் தீயில் அழிந்துவிடுகிறாள். தொடக்கத்தில், தீயில் வெந்து மடிவதை இடக்கரடக்கலாகக் குறிப்பிடும் ஒரு வழியாக இச்சொல் ஏற்பட்டிருத்தலே நடைபெற்றிருக்கக் கூடும். நாளடைவில் பிற பொருட்களை எரித்தலையும் எதையும் கொல்லாமல் விட்டுக்கொடுத்தலையும் இது குறித்திருத்தல் தெளிவு.   காதல் தியாகத்தில்,  விட்டுத் தரப்படுவது ஒரு  மனத் தொடர்பு என்பது காணலாம்.  இதில் திடப்பொருள் என்பது எதுவுமில்லை.

முன் இதுபற்றி எழுதியது இவண் காண்க.

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_60.html

தீயில் விழுந்து சாம்பலாகு என்பதையே "தீயாகு" என்பது குறிக்கிறது.  அம் விகுதி இணைந்து "தியாகம்" ஆகின்றது, முதலெழுத்தும் குறுகிவிடுகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கவிதைப் பொருள்:


கவிதை உள்ள இடுகை  https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_14.html

முதற் கவிதையின் பொருள்:

கொரனாவின் பிடியினிலே விடியல் இன்றி  --- நோய்த்தொற்றில் பட்டுக்கொண்டதால் விடுபாடு ஏதும் இல்லாமல்,

கொலைப்பட்ட பெருமக்கள் தொகையைக் கூற   ----  ஒவ்வொரு நாட்டிலும் இறந்துவிட்டவர்கள் கணக்கை ஒப்புவிக்க,

ஒருநாளில்  இயலாதே சரியாய் -----  ஒரே நாளில் சரியாகச் சொல்லிவிட முடியாது;

நாமும் ஒளிந்தாளும் முறையன்றி வேறொன் றில்லை  --  இத் தொற்றிலிருந்து தப்பிக்க நாம்  அறைக்குள் ஒளிந்துகொண்டு  தொடர்பின்மை கடைப்பிடித்துக்கொண்டு  இருத்தல் தவிர வேறு வழியில்லை.

திருநாளும் வேண்டாத தியாகம் செய்து   ---- பண்டிகை முதலியவற்றுக்கு வீட்டிலிருக்கும் விடுபாடு இன்றி,  தாம் விட்டுக்கொடுத்து,

தினந்தோறும் சேவைசெயும் தாதி மாரை  -- ஒவ்வொரு நாளும் சேவையாற்றும் தாதியரை,

அருஞ்செயற்குப் போற்றுதலே அன்றி வேறே -  அவர்களின் அரிய செயலுக்குப் போற்றுவதைத் தவிர,

பெரிதென்று நாம்  அவர்க்குச் செய்வ தென்னே.  ---  நாம் அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்துவிட முடியும்?

மொத்த எண்ணிக்கையில் எத்தனை பேர் இறந்தனர் என்று தெரிந்துவிட்டால், பிழைத்தோர் தொகை தெரிந்துவிடும்; தாதிமார் சேவையும் நாம் அறியக்கூடும்.  நோயின் தாக்கமும் எத்தகையது என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.


இரண்டாவது கவிதையும் அதே பொருளைத்தான் சொல்கிறது. இதன் சில சொற்களுக்குப் பொருள் அறிவதே போதுமானது:-


முடிநோயின் ---  கொரனா

பிடியினிலே  ---  கடுந்தொற்றிலே 

 விடியல் இன்றி   - விடுபாடு இன்றி

முடிந்தோய்ந்த --இறந்துவிட்ட

 நாம்காண்  -   நாம் கண்டுபிடித்த

மூடறைவாழ்  முறையன்றி  ----  "குவாரண்டீன்" என்னும் தடுப்பறைக்குள் இருப்பதன்றி,   மூடு அறை -  கதவு மூடிப் பிறர் நுழைய இயலாத அறை 

 முன்னொன் றில்லை!   -- நம் முன் வேறு வழியில்லை.

விடுநாட்கள் வேண்டாத  ---  விடுமுறைகள் எடுக்காத

வெல்லீ    கத்தால்  -  வெல்கின்ற தியாகத்தால்   (வெல் ஈகத்தால் )

வேறுபடாச் சேவைசெயும்   --   யாவரையும் சமமாக நடத்தும் சேவையைச் செய்யும் 

தாதி மாரை  ( நர்சுகளை )

அருஞ்செயற்குப் போற்றுதலே அன்றி வேறே  - அரிய செயலுக்குப் போற்றுவதன்றி மற்ற,

ஆனபெரி தவர்க்கேநாம் செயலும் யாதோ.---- அவர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு  ஒன்றுமில்லை


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்