வியாழன், 14 அக்டோபர், 2021

திரு. உரூபன் பிறந்தநாள்

 இன்று திரு ரூபன் அவர்களின் பிறந்தநாள்.  அவருக்கு நம் வலைப்பூவின் வாழ்த்துக்கள் உரியவாகுக.  ஆனால் கோவிட19 காரணமாக யாரையும் கூப்பிடவில்லை.  "கேக்" என்று சொல்லப்படும் இன் திண்ணப்பம் சாப்பிடலாமென்றால், ஒன்று வாங்கிவந்தால் அதைச் சாப்பிட்டு முடிக்கமுடியாது.  சீனிமயமாக வேறு இருக்கும்.  ஆதலால் பீசா எனப்படும் சைவப் பிசைப்பொதிவு உண்டுகளித்தோம். பின்னர் தேனீர் (கொழுந்துநீர்)  அருந்தி  சிவமாலாவுடன் விழாவைத் திரு ரூபன் முடித்துக்கொண்டார்.  இந்தத் தொற்றுப் படையெடுப்பு மட்டும் இல்லையென்றால் ஓர் ஐம்பது பேர்களை அழைத்துக் கொண்டாடுவதாக இருந்தோம்.  கிருமியால் பாதிக்கப்பட்டோர் தொகை ஏறிக்கொண்டிருக்கிறது. இறங்கி அடங்குமா என்று தெரியவில்லை. கிருமித்தொல்லை ஒழியத் தொழுவோமாக. " தொழுவாரவர் துயராயின துடைத்தல் உனகடனே" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளது நினைவுக்கு வருகிறது.  (மேற்கோளில் வேறுபாடு காணின் பின்னூட்டம் இடுங்கள்.)  (  மூளையும் உடலும் களைத்துப் போய் உள்ளது) மன்னிக்கவும்.  நம்மை இறைவனே காக்கவேண்டும்.

பிசைப்பொதிவு  நன்றாகவே இருந்தது. அதை நாங்கள் இருவரும் உண்ணுமுன் எடுத்த அவ்வுணவின் படம் இங்குள்ளது.


இரண்டு பிசைப்பொதிவுகள் உள்ளன. சிறியது சைவம். பெரியதில் முட்டை உள்ளது.  யாம் உண்டது சிறியது. கோவிலில் கொண்டாடி யிருக்கலாம், ஆனாலும் நுழைவோர் கட்டுவிதிகள் (entry regulations) உள்ளனவாகையால் அதுவும் இயலவில்லை.   நோய்நுண்மிகளிடமிருந்து விடுபாடு அடையும் நாளை எதிர்நோக்கி நிற்போம்.

மாவைப் பிசைந்து உள்ளீடுகளைப் பொதிந்து செய்யப்படுவதால்  "பிசைப்பொதிவு"  ஆனது.  பொதிவாப்பம் என்றும் குறிக்கலாம்.  Pizza. "சைவமாகக்" கிடைக்கும்.


குரு பெயர்ச்சி 2021ல் தூக்கிவிடும் 5 சிகர இராசிகள் | Athisara Guru P...

புதன், 13 அக்டோபர், 2021

Oct14 Covid19

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 13]

 

அக்டோபர் 12, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,619 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 291 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 42 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.5%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.2%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 11 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 83%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 12 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 2,976 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


go.gov.sg/moh121021


சுகாதார நடைமுறைகள், கூடுதல் (Booster) தடுப்பூசிகள், எல்லைக் கட்டுப்பாடுகள், கொவிட்-19 கிருமியுடன் வாழ்தல் ஆகியன பற்றிய ஆக அண்மைய விவரங்கள் குறித்த முக்கிய கேள்விகளுக்கு விடை காண go.gov.sg/covidfaq121021 என்ற இணைப்பை நாடுங்கள்.